ராமாயணா – விமர்சனம்!

இந்தியத் திரையுலகில் இதிகாசக் கதைகளைப் பிரம்மாண்டமான திரைப்படங்களாக உருவாக்குவது புதிதல்ல. அதிலும் ராமாயணத்தை பலரும் பல படங்களாக, தொலைக்காட்சி தொடர்களாக ரசிகர்களுக்கு தந்திருக்கிறார்கள். ஆனாலும் இன்றும் அதை திரைப்படமாக எடுத்தாலும் பல கோடி மக்கள் அதை பார்க்க ஆர்வத்துடனே இருக்கிறார்கள். அந்த வகையில் ராமாயணத்தை நவீனத் தொழில்நுட்பத்தின் துணையுடன் சர்வதேசத் தரத்தில் காட்சிப்படுத்தும் முயற்சியாக உருவாகியிருக்கிறது பிரைம் ஃபோகஸ். ரன்பிர் கபூர், யாஷ், சாய் பல்லவி என இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க, தங்கல் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஹாலிவுட் இசைக்கலைஞர் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து இசையமைத்திருக்கிறார். இந்த உலகத்தரமான ‘ராமாயணா’ படைப்பு எப்படிப்பட்ட அனுபவத்தை தந்திருக்கிறது என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, அறம், நீதி, அன்பு, தியாகம், தர்மம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ராமாயணத்தின் அடிப்படைக் கதை தான் இந்த படத்திலும். சுருக்கமாக கதையை சொல்ல வேண்டுமென்றால் அயோத்தியின் அரசர் தசரதர், அவருக்கு மூன்று மனைவிகள். அவர்களுக்கு பிறந்தவர்களில் மூத்த மகன் ராமர். ஒரு கட்டத்தில் ராமரை அரசராக அறிவிக்க முடிவெடுக்கிறார் தசரதர். ஆனால் பரதனின் தாய் கைகேயி பரதனை அரசனாக அறிவிக்க கோருகிறார். அத்துடன் ராமரை 14 ஆண்டுகள் வனவாசம் போகச் சொல்லியும் வாக்கு கேட்கிறார். அதை ஏற்று ராமர் வனவாசம் செல்ல, அவருடன் மனைவி சீதையும், தம்பி லட்சுமணனும் காட்டுக்குள் செல்கின்றனர். வனத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகை ராமரை பார்க்க, அவர் மீது காதல் வயப்படுகிறார். அதை ஏற்க மறுக்கிறார் ஏகபத்தினி விரதன் ராமர். தங்கைக்காக ராமரை பழிவாங்க கிளம்பும் ராவணன் சீதையைக் கடத்திச் செல்கிறான். இத்துடன் முதல் பாகத்தின் கதை முடிகிறது.

ராமர் கதாபாத்திரத்தில் ரன்பிர் கபூர், அமைதியும் கம்பீரமும் நிறைந்த ஒரு வீரனாக அவரது தோற்றத்திலும், உணர்வுகளிலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அறத்தின் பக்கம் எப்போதும் நிற்கும் ஒருவராக தெய்வீகத் தன்மையுடன் நம் முன் தோன்றுகிறார். சீதையாக சாய் பல்லவி, சாந்த சொரூபமான தெய்வீக முகமாக மிக இயல்பான தன்மையுடன், அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். உணர்வுப்பூர்வமான நடிப்புடன் சண்டைக் காட்சிகளிலும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார்.

யாஷ் ராவணனான மிரட்டுகிறார். ஆரம்ப காட்சிகளிலேயே அட்டகாசமான எண்ட்ரியுடன் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் கனகச்சிதமாக பொருந்திப் போகிறார். பத்து தலை ராவணனாக வரும் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். லட்சுமணனாக ரவி துபே, சூர்ப்பனகையாக ரகுல் பிரீத் சிங், வித்யுத்ஜிவாவாக விவேக் ஓபராய், மண்டோதரியாக காஜல் அகர்வால், தசரதராக அருண் கோவில் என மற்ற எல்லா நடிகர்களுமே ஆகச்சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.

படத்தின் பிரம்மாண்டத்தைத் தீர்மானிப்பதில் ஒளிப்பதிவு, கலை இயக்கம், கிராபிக்ஸ் மற்றும் பின்னணி இசை ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக அயோத்தி, வனப்பகுதிகள், இலங்கை போன்ற இடங்களையும், அரண்மனைகளையும், ராவணனின் புஷ்பக விமானம் போன்றவற்றை திரையில் உருவாக்குவதில் கலை இயக்கத்தின் பங்களிப்பு மிக அதிகம். பங்கஜ் குமார், மகேஷ் லிமாயே ஆகியோரின் ஒளிப்பதிவு ஹாலிவுட்டுக்கு இணையாக மிக தரத்துடன் அமைந்திருக்கிறது.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இருவரின் இசையும் படத்தின் ஆகச்சிறந்த அம்சம். பல காட்சிகளில் நமக்கு Goosebumps-ஐ தருகிறது. பாடல்களும் இனிமையாக இருக்கிறது. ஹாலிவுட் தரத்துக்கு இணையாக விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் கதையின் உணர்வுகளை கெடுக்காமல், காட்சிகளின் பிரமாண்டத்தை கூட்டுகிறது. சாத்தியமே இல்லாத பல விஷயங்களை விஎஃப்எக்ஸ் உதவியுடன் கொடுத்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

இயக்குனர் நிதேஷ் திவாரி. எத்தனையோ முறை எடுக்கப்பட்ட ராமாயணத்தை மீண்டும் எடுக்கப் போகிறார். இதில் என்ன பெருசா இருந்துடப் போகுது என நினைத்தவர்களுக்கு இந்த படத்தின் மூலம் பதிலடியை கொடுத்திருக்கிறார். ராமாயணா கதையின் அடிப்படைத் தன்மையைச் சிதைக்காமல், இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறார். இரண்டு பாகம் எதற்கு, ஒரே படத்தில் எடுத்திருக்கலாமே என நினைத்து படம் பார்க்க அமர்ந்தால் அதற்குள் எவ்வளவு டீட்டெயிலாக கதையை சொல்லியிருக்கிறார். 3:15 மணி நேரம் நீளம் இருந்தாலும் கொஞ்சம் கூட போரடிக்காமல் பிரமாண்டத்தின் மூலமும் நம்மை கட்டிப் போடுகிறார்.

ஏற்கனவே பல வடிவங்களில் சொல்லப்பட்ட கதையாக இருந்தாலும், இந்த ராமாயணாவும் நம்மை ஆச்சர்யத்துடன் வாய்பிளந்து பார்க்க வைக்கிறது. ராமாயணம் என்பது வெறும் போர் மற்றும் வெற்றியைப் பற்றிய கதை மட்டுமல்ல. மனித உறவுகள், வாக்குறுதி, அறம், தியாகம் ஆகியவற்றைப் பேசும் காலத்தால் அழியாத இதிகாசத்தை இந்த தலைமுறைக்கும் கடத்த எடுக்கப்பட்ட பெரும் முயற்சி. நட்சத்திரத் தேர்வு, இசைக் கூட்டணி, பிரம்மாண்டமான தயாரிப்பு என மிகச்சிறந்த படைப்பை தந்திருக்கிறார்கள். 3டியில் ஒவ்வொரு காட்சியும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தொழில்நுட்ப பிரம்மாண்டத்தைத் தாண்டி கதையின் ஆன்மாவையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மிகச் சிறப்பாக படமாக்கி காலத்தால் அழியாத படைப்பாக்கியிருக்கிறார்கள். நிச்சயம் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய காவியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *