‘வேட்ட சாமி’ படத்தின் ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

தென் தமிழகத்தின் திருவிழாக்களையும் மக்களின் பண்பாட்டையும் தன் காந்தக் குரலினாலும் வில்லுப்பாட்டு இசையினாலும் கட்டிப்போட்ட கிராமத்துக் கலைஞர் மாதவி, முதன்முறையாகத் திரைத்துறையில் பின்னணிப் பாடகியாக அடியெடுத்து வைத்துள்ளார்!

‘பம்பர்’ படப்புகழ் எம். செல்வக்குமார் இயக்கத்தில், அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடிக்கும் ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ (அக்டோபர் 30) வெளியாகி, பக்தியையும் கிராமத்து உணர்வுகளையும் நேசிக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

வில்லுப்பாட்டு கலையின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் அன்பு பெற்ற வில்லிசைக் கலைஞர் மாதவி, முதன்முறையாகச் சினிமாவில் பாடியுள்ள இந்த ஆன்மீகப் பாடல், கிராமத்துக் கோவில் திருவிழாவின் மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீக அதிர்வை அப்படியே உங்கள் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும்!

இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாரம்பரியமிக்க நாட்டுப்புற இசையில் உருவாகியுள்ள 7 பாடல்களில், இந்தப் பாடல் திருவிழா மேளதாளங்கள் மற்றும் தெய்வ வழிபாட்டின் உச்சக்கட்ட அனுபவத்தைத் தருகிறது. ‘தாய் கிழவி’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் மூலம் கவனம்பெற்ற பாடலாசிரியர் மு.ஜெகன் கவிராஜ், ‘வீரம் பாயும் நெல்லையிலே…’ எனத் தொடங்கும் இந்தப் பாடலின் கம்பீரமான வரிகளை எழுதியுள்ளார்.

7 MILES PER SECOND Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் இத்திரைப்படத்தில் அருள்நிதி – அமீர் கூட்டணியுடன் இயக்குநர் தமிழ், விஜி சந்திரசேகர், ‘ஆடுகளம்’ நரேன், அர்ஜெய், OAK சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி மற்றும் நந்தினி எனப் பலரும் நடித்துள்ளனர்.

-ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு & ரூபனின் படத்தொகுப்புடன் தென் தமிழகத்தின் பண்பாடு, வீரம் மற்றும் ஆழமான தெய்வ நம்பிக்கையை அச்சு அசலாகக் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு. பாடல்களின் உரிமையை PRIME9 MUSIC நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் ‘வேட்ட சாமி’ திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஊர் திருவிழாவின் அசல் பரவசத்தையும், வில்லிசை மாதவியின் கம்பீரமான குரலையும் முதன்முறையாகத் திரையில் அனுபவிக்கத் தயாராகுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *