தமிழில் சின்ன பட்ஜெட்டில் தரமான பல திரில்லர் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த கதைகளுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வரிசையில், அறிமுக இயக்குநர் எஸ்.ஆர். ராஜேஷ் இயக்கத்தில், அருண் கார்த்தி மற்றும் எனாக்ஷி கங்குலி ஜோடியாக நடித்திருக்கும் திரைப்படம் ‘பனி விழும் இரவு’. இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, குளிர் மலைப்பிரதேசம் கொடைக்கானலுக்கு ஒரு இளம் ஜோடி ஃபோட்டோஷூட்டுக்கு வருகின்றனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சில நாட்கள் கழிய ஒரு நாள் திடீரென தன் காதலியை காணவில்லை என நாயகன் போலீஸில் புகார் அளிக்கிறார். போலீஸ் விசாரிக்க, என்ன நடந்தது என்பதை நாயகன் விவரிக்க, அதன் பின் என்ன ஆனது? நாயகி என்ன ஆனார்? நாயகி எங்கு போனார்? அந்த சூழலில் இருக்கும் மனிதர்களுக்கும் நாயகி காணாமல் போனதற்கும் ஏதும் சம்பந்தம் இருக்கிறதா? என்பதே மீதிக்கதை.
நாயகன் அருண் கார்த்தி, நல்ல அழகான ஒரு சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார். இளம் பெண்களை கவரும் ஒரு நாயனகாக வருவார் என்பதற்கான அம்சங்கள் எல்லாமே இருக்கிறது. படத்திலும் நல்ல ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவருக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு, அதை பயன்படுத்து கதாபாத்திரத்தை இயல்பாக பிரதிபலித்துள்ளார்.
நாயகி எனாக்ஷி கங்குலி உணர்வுப்பூர்வமான ஒரு கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை தந்துள்ளார். ஆரம்ப காட்சிகளில் எல்லாம் ஒரு நிதானத்துடனும், கனிவுடனும் நடந்து கொள்ளும் கதாபாத்திரம். மென்மையான நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
கருப்பு நம்பியார் நடித்த படங்களிலேயே அவரின் கேரியரில் சிறந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும். கிளைமாக்ஸில் அவர் காட்சிகள் எல்லாம் மிகச்சிறப்பு. இன்ஸ்பெக்டராக சேரன் ராஜ் கம்பீரமாக வந்து போகிறார். சரவண சக்தி காமெடி காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. கஜராஜ், ‘உறியடி’ சுருளி மற்ற நடிகர்கள் என எல்லோருமே கதையின் ஓட்டத்திற்குத் தேவையான திருப்பங்களை வழங்கி, த்ரில்லர் அனுபவத்திற்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜெயக்குமாரின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மலைப்பாதைகளையும், இருள் நிறைந்த சூழலையும், த்ரில்லர் கதைக் களத்திற்குத் தேவையான மர்மமான மூடும் மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளார். சதா முருகனின் பின்னணி இசை த்ரில்லர் காட்சிகளுக்குத் தேவையான பதற்றத்தையும் விறுவிறுப்பையும் துல்லியமாக கொடுத்திருக்கிறது. கதையை தொய்வில்லாமல் நகர்த்திச் செல்ல எடிட்டிங் கச்சிதமாக உதவி புரிந்துள்ளது.
இயக்குநர் எஸ்.ஆர்.ராஜேஷ், ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையை தேவையற்ற கமர்ஷியல் சமரசங்கள் ஏதுமின்றி நேர்த்தியாகக் கையாள முயற்சி செய்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். கொஞ்சம் சின்ன கதையாக இருந்தாலும் அதை 2 மணி நேரம் திரைக்கதை மூலம் உட்கார வைத்திருக்கிறார். சில இடங்களில் வழக்கமான த்ரில்லர் கிளிஷே காட்சிகள் வந்தாலும், கிளைமாக்ஸ் திருப்பங்கள் அட போட வைக்கின்றன. தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இயக்குனரின் விஷனை அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறது. மொத்தத்தில் திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும் இந்த ‘பனி விழும் இரவு’.

