Disclosure Day – விமர்சனம்!

இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 80 வயதிலும் இன்னமும் இன்றைய தலைமுறைக்கு ஈடு கொடுத்து மிகச்சிறந்த சினிமாக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் தொடாத ஜானர்களே இல்லை, எடுக்காத சினிமாக்களே இல்லை என சொல்லும் அளவுக்கு ஒரு ட்ரெண்ட் செட்டர் இயக்குனராக இருக்கிறார். இன்றும் நம்மை மிரள வைக்கும் படங்களை தந்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் “Disclosure Day”. “நாம் மட்டும் இந்த பிரபஞ்சத்தில் தனியாக இல்லை என்ற உண்மை வெளிப்பட்டால்… மனிதர்களின் உலகம் எப்படி மாறும்?” என்ற இழையை வைத்துக் கொண்டு அவர் எடுத்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, “கடந்த 80 ஆண்டுகாலமாக ஏலியன்கள் பூமிக்கு வந்து சென்றதற்கான அனைத்து வீடியோ ஆதாரங்கள் மற்றும் ரகசிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். சைபர் செக்யூரிட்டி நிபுணர் டேனியல் கெல்னர் (Daniel Kellner) மற்றும் வானிலை ஆய்வாளர் மார்கரெட் ஃபேர்சைல்ட் (Margaret Fairchild) ஆகிய இருவரும் இணைந்து அரசாங்கத்தால் மறைக்கப்பட்ட இந்த உண்மைகளைக் கண்டறிகின்றனர். இந்த ஆதாரங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் டிஜிட்டல் டேட்டா மூலம் மக்களுக்கு அம்பலப்படுத்த (Data Dump) அவர்கள் முய₹இ செய்கிறார்கள். இதைத் தடுக்க நினைக்கும் நிழல் உலக அரசு ஏஜெண்டுகளுக்கும், இவர்களுக்கும் இடையே நடக்கும் அதிரடி துரத்தல் தான் படத்தின் மீதிக்கதை.

இந்த திரைப்படத்தின் நடிகர்கள் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்கள். எமிலி பிளண்ட் மையக் கதாபாத்திரத்தில் அசத்துகிறார். ஜோஷ் ஓ’கானர், காலின் ஃபிர்த், ஈவ் ஹியூசன் மற்றும் கோல்மன் டொமிங்கோ ஆகியோரும் படம் பார்க்கும் அனுபவத்தை செழுமை ஆக்கியிருக்கிறார்கள்.

ஸ்பீல்பெர்க் உடன் இணைந்து டேவிட் கோப் திரைக்கதை எழுதியிருப்பது படத்துக்கு இன்னும் சிறப்பு சேர்த்திருக்கிறது. ஜான் வில்லியம்ஸ் இசையும் படத்துக்குள் நம்மை மேலும் உணர்வுப்பூர்வமாக ஒன்ற வைக்கிறது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்ற பெயர் அறிவியல் புனைவு திரைப்படங்களுக்கு புதிதல்ல. E.T. The Extra-Terrestrial, Jurassic Park, War of the Worlds போன்ற படங்கள் மூலம் மனிதர்களுக்கும் அறியப்படாத உலகங்களுக்கும் இடையிலான உறவை அவர் பலமுறை திரையில் காட்டியுள்ளார். அந்த வரிசையில், Disclosure Day அவரது இன்னொரு படைப்பு.

இந்த படம் அறிவியல், மனித உணர்வுகள், அறியப்படாத உலகம் ஆகியவற்றை இணைத்து பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக வந்திருக்கிறது. அதிரடி சாகசங்களை குறைத்து உணர்வுப்பூர்வமாக கதையை சொல்லியிருக்கிறார். ஏலியன்களின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் டெலிபதி ஆற்றலை காட்டிய விதமும் அருமை. ஒரு சாதாரண ஏலியன் திரைப்படமாக இல்லாமல், மனித சமுதாயத்தின் எதிர்வினைகளை ஆராயும் ஒரு பரபரப்பான திரில்லராக வந்திருக்கிறது. கிளைமாக்ஸில் நம்மை கொஞ்சம் கலங்கவும் வைக்கிறார் இயக்குனர் ஸ்பீல்பெர்க். மொத்தத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு ஒரு பெரிய சினிமா அனுபவத்தை தந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *