வள்ளுவன் – விமர்சனம்!

இயக்குனர் ஷங்கர் சாரதி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு கிரைம், ஆக்ஷன் திரில்லர் படம் தான் வள்ளுவன். சேத்தன் சீனு, ஆஷ்னா ஜவேரி, பிரேம், மனோபாலா ஆகியோர் நடித்துள்ள இப்படம் சென்னை மாநகரத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடைபெறும் மர்மமான கொலைகளை மையமாகக் கொண்டு நகர்கிறது. படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, அரசியல்வாதியான ராம்ஸ் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அந்த கொலையை செய்தது இன்னொரு அரசியல்வாதியும் ரவுடியும் தான் என்ற கோணத்தில் விசாரணையை நடத்துகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசிம்மன். விசாரணை நடக்கும் காலகட்டத்திலேயே ராஜசிம்மன் அவர் வீட்டில் கொலை செய்யப்படுகிறார். அதனையடுத்து வழக்கறிஞர் கராத்தே ராஜாவும் கொலை செய்யப்படுகிறார். இப்படி அடுக்கடுக்கான கொலைகள் நடக்கிறது. அதனை விசாரிக்க காவல்துறை அதிகாரி பிரேம் வருகிறார். இதற்கிடையில் நாயகன் சேத்தன் சீனு உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். ஆஷ்னா ஜவேரி முதியோர் இல்லத்தில் சேவை செய்வதை பார்த்து அவரை பின் தொடர்ந்து அந்த சேவையில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறார். இதற்கிடையில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பணக்காரன் ஒருவனும் இருக்கிறான். இப்படி ஒரு சொல்ல முடியாத ஒரு கொடூரமான குற்றத்தின் பின்னணியை பிரேம் எப்படி கண்டுபிடிக்கிறார்? உண்மையான கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.

சேத்தன் சீனு, ஒரு அறிமுக நாயகன். ஆனாலும் அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் உணர்ந்து நடித்திருக்கிறார். காதலா? அன்பா? என நம்மையே குழப்பி பின்னர் அதை வெளிப்படுத்தும் இடத்தில் நம் மனதில் நிற்கிறார். ஆக்ஷன், சேஸிங் என அத்தனையிலும் சிறப்பாகவே பங்களிப்பை செய்திருக்கிறார். நாயகி ஆஷ்னா ஜவேரி. கதையின் ஓட்டத்திற்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளார். முக்கியமான காட்சியில், முக்கியமான திருப்புமுனையையும் தந்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

மறைந்த நடிகர் மனோபாலா நடித்த கடைசி சில படங்களில் இதுவும் ஒன்று. வழக்கம் போல காமெடியில் ரசிக்க வைக்கிறார். பின்னணி குரல் மட்டும் கொஞ்சம் உறுத்தல். ராஜசிம்மன், ராம்ஸ், சாய் தீனா, கராத்தே ராஜா ஆகியோரின் அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

தொழில்நுட்ப அம்சங்களை பொறுத்தவரை ஒளிப்பதிவு நன்றாகவே இருக்கிறது. பல காட்சிகளையும் திரையில் ஒன்றி பார்க்க வைக்கிறது. பின்னணி இசை கதையுடன் பயணிக்க வைக்கிறது. ஷான் லோகேஷ் எடிட்டிங் படத்துக்கு கூடுதல் பலம்.

இயக்குனர் ஷங்கர் சாரதி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பாணியில் ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதே போல திரைக்கதையில் படத்தை எடுத்திருக்கிறார். பெரும்பாலும் ஷங்கர் பட பாணியில் இருப்பது நிமிர்ந்து உட்கார வைக்கிறது. தொடர் கொலைகள், அதை விசாரிக்கும் அதிகாரி, இந்த கொலைகளுக்கு இடையே நாயகனின் தனிப்பட்ட வாழ்க்கை என ஒரு ஷங்கர் படம் பார்த்த உணர்வையே தந்திருக்கிறார். ஃபிளாஷ்பேக் காட்சிகளும் படத்துக்கு ஆணிவேராக அமைந்திருக்கிறது. குற்றங்களின் பின்னணியில் இருக்கும் பழிவாங்கல் என்பதும் இன்னும் அழுத்தமாக அமைந்திருக்கிறது. சில இடங்களில் திரைக்கதை வேகம் மேலும் வலுப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றாலும், தொடர்ந்து ஆர்வத்தை ஏற்படுத்தும் காட்சிகளால் *வல்லுவன்* ஒரு சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் அனுபவத்தை வழங்குகிறது. மொத்தத்தில் கிரைம் பின்னணியில் நல்ல ஆக்ஷன் திரில்லர் படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு வள்ளுவன் ஒரு நல்ல விருந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *