பேட்மேன் சீரிஸ், இன்செப்ஷன், இண்டர்ஸ்டெல்லர் உட்பட பல படங்களை தந்து தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்த கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் “தி ஒடிஸி”. உலகப் புகழ்பெற்ற கிரேக்க காவியமான ‘ஒடிஸி’யை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. முழுப்படமும் IMAX ஃபிலிம் கேமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் முழுநீளத் திரைப்படம் என்ற பெருமையுடன் வெளியாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, இதாகா (Ithaca) என்ற கிரேக்கத் தீவின் அரசனான ஒடிசியஸ், ‘ட்ரோஜன் ஹார்ஸ்’ என்ற போர்த் தந்திரத்தை பயன்படுத்தி அகமெம்னானுக்காக போரை வென்று தருகிறார். அவரது மகன் டெலிமாக்கஸ், ஒடிசியஸ் போருக்கு சென்றபோது கைக்குழந்தையாக இருந்தவன், தற்போது வாலிபனாக வளர்ந்து நிற்கிறான். கிட்டத்தட்ட 10 ஆண்டு போர் முடிந்து ஒடிசியஸ் இதாகா திரும்பும் வழியில், அவரது பயணத்திற்கு கடவுள்களாலும், அசுரர்களாலும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. ஒடிஸியஸ் இனி திரும்ப வாய்ப்பு இல்லை என சொல்லி எங்களில் யாரையாவது மணந்து கொள் என பல இளவரசர்களும், அரசர்களும் அந்த இதாகா அரண்மனையை ஆக்கிரமித்து இருக்கின்றனர். வழியில் வந்த தடைகளை கடந்து ஒடிஸியஸ் இதாகா நாட்டை அடைந்தாரா? அவரது மனைவியையும், மகனையும் சந்தித்தாரா? சதிகாரர்களை என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.
இதாகா அரசன் ஒடிஸியஸாக மேட் டாமன் அவரது நடிப்பாலும், ஆஜானுபாகுவான தோற்றத்தாலும் கம்பீரமாக நிற்கிறார். போரில் வெற்றியை தேடித் தருவது, படை வீரர்களை வழிநடத்துவது என படம் முழுக்க நிறைந்திருக்கிறார். அவருக்கும் அவரது நாய்க்குமான காட்சி எமோஷனல், அந்த கிளைமாக்ஸ் காட்சியில் மாஸ் தெறிக்க விடுகிறார். அன்னா ஹேத்வே இதாகாவின் அரசியாக வாழ்ந்திருக்கிறார். கணவரை பிரிந்த தவிப்பு, அரண்மனையில் எதிரிகளை கையாள வேண்டிய நிர்பந்தம் என அவர் நடிப்பு அபாரம்.
ஒடிஸியஸ் மகனாக டாம் ஹாலண்ட் , கொஞ்ச நேரம் வரும் கதாபாத்திரம் என்றாலும் அசத்துகிறார். ஒரு சூழ்ச்சி மிகுந்த கதாபாத்திரத்தில் வில்லனாக ராபர்ட் பேட்டர்சன் அவர் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். Zendaya அதினா என்ற ஒரு கடவுள் கதாபாத்திரத்தில் ஒடிஸியஸை வழி நடத்துகிறார். லூபிடா நியாங்கோ, சமந்தா மார்டன் ஆகியோரும் நல்ல நடிப்பை தந்திருக்கிறார்கள்.
ஹாய்டே வான் ஹாய்டெமா ஒளிப்பதிவு தரம். சாதாரண ஸ்கோப் வெர்சனில் பார்த்த நமக்கே காட்சிகளை பிரமாண்டமாக காட்டியிருக்கிறார் என்றால் IMAX 70MM திரையில் பார்ப்பவர்கள் அனுபவம் நிச்சயம் பரவச அனுபவம் தான். கடல், மலைகள், தீவுகள் என அத்தனையுமே ரொம்ப புதுசு. லுட்விக் கோர்டான்சன் இசை தேவையான இடங்களுக்கு அதிரடியும், மற்ற இடங்களில் சைலன்ஸூம் என நல்ல ஒரு திரை அனுபவத்தை வழங்கும் இசையை தந்திருக்கிறார்.
இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன். எந்த கதையை எடுத்தாலும் அவரது முத்திரை இல்லாமல் இருக்காது. எல்லோருக்கும் தெரிந்த கதையை இம்முறை எடுத்திருந்தாலும் அதை அவரது கண்ணோட்டத்தில் தந்திருக்கிறார். முதல்முறையாக ஒரு எபிக் படத்தை இயக்கியிருக்கும் நோலன், எதையும் மாற்றி குழப்பாமல் ஃபேண்டஸி விஷயங்களையும் அப்படியே வைத்திருக்கிறார். ஒரிஜினல் கதையை அப்படியே தழுவி எடுத்திருக்கிறார். கதாபாத்திர தேர்வில் மட்டும் சில முரண்கள் இருப்பதை சொல்லாமல் தவிர்க்க முடியவில்லை. முந்தைய படங்களில் எல்லாம் சில முக்கியமான காட்சிகளை IMAX-ல் படம் பிடித்த நோலன் இம்முறை மொத்த படத்தையுமே IMAX-ல் எடுத்து அசத்தியிருக்கிறார். மொத்தத்தில் IMAX டிக்கெட் கிடைக்கும் பட்சத்தில் முழு அனுபவத்தை உணருங்கள். இல்லையென்றாலும் சாதாரண திரையரங்கிலும் பார்த்டு ரசிக்கக் கூடிய ஒரு சிறந்த படம் தான் இந்த ‘தி ஒடிஸ்’.

