அருள்நிதி நடிப்பில் தகராறு என்ற கமெர்சியல் படத்தை இயக்கிய கணேஷ் விநாயகன், வீர சிவாஜி படத்துக்குப் பின் கமெர்சியல் ரூட்டில் இருந்து மாறி நல்ல சமூக கருத்துகளை உள்ளடக்கி தேன் என்ற சிறந்த படத்தை இயக்கி பெரும் பாராட்டுக்களை பெற்றார். தற்போது தேன் வரிசையில் அவர் இயக்கியிருக்கும் அடுத்த படம் “அருள்வான்”. அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் நடிக்க, மலைவாழ் மக்களின் வாழ்வியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, பூங்கொடி என்ற பழங்குடி மக்கள் வாழும் ஒரு மலை கிராமத்தில் வாழ்ந்து வரும் ஆரவ், ரம்யா பாண்டியன் தம்பதிக்கு கிருத்திகா ஒரே மகள். தேன் எடுப்பது, விவசாயம், இயற்கை சார்ந்த வாழ்வு வாழ்வது என வாழ்ந்து வரும் அந்த கிராம மக்கள் மீது ஃபாரஸ்ட் ரேஞ்சர் ஜான் விஜய் கடும் எரிச்சலில் இருக்கிறார். அந்த ஊரில் பள்ளியே இல்லை, ஆரவ் மகளுக்கு தானும் படிக்க வேண்டும் என்ற ஆசை. அதற்கு கலெக்டரிடம் பள்ளிக் கூடம் கட்டித்தர சொல்லி கோரிக்கை வையுங்கள் என பக்கத்து கிராமத்து ஆசிரியை சொல்கிறார். அதை மனதில் வைத்தி கலெக்டரை தேடி கிராமத்தை விட்டு டவுனுக்குள் வருகிறார் கிருத்திகா. வந்த இடத்தில் கலெக்டர் அருள்நிதியை பார்த்தாரா? அவர்கள் விரும்பிய பள்ளிக்கூடம், கல்வி கிடைத்ததா? அருள்நிதி என்ன செய்தார்? அந்த கிராம மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்ததா? என்பதே மீதிக்கதை.
நடிகர்களை பொறுத்தவரையில் யாருமே நாயகன் நாயகி என்ற பொது வட்டத்தில் அடைக்க முடியாதபடி எல்லோருமே அந்தந்த கதாபாத்திரங்களில் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியராக வரும் அருள்நிதி அதற்கேற்ப நன்கு படித்த ஒரு மனிதராக தோற்றத்திலேயே கலெக்டரை நம் கண் முன் நிறுத்துகிறார். இரண்டாம் பாதியில் தான் அவருக்கு வேலையே, ஆனாலும் நல்ல கதைக்கு மதிப்பளித்து நடித்ததற்காகவே ஒரு சல்யூட். ஆரவ், ஒரு சிறுமிக்கு அப்பாவாக நல்ல அழுத்தமான நடிப்பை தந்திருக்கிறார். முதல் பாதி முழுக்க வந்து மனதில் நிற்கிறார்.
ரம்யா பாண்டியன் ஆரவ் மனைவியாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக, அந்த மலை கிராமத்து பெண்மணியாகவே மாறி இருக்கிறார். இந்த மாதிரி நடிப்புக்கு தீனி போடும் படங்கள் என்றாலே ரம்யாவுக்கு அல்வா சாப்பிடுவது போல தான். இவர்களை எல்லாம் தாண்டி மனதில் நிற்கிறார் பேபி கிருத்திகா. அவர் தான் கதையின் மையப்புள்ளி. படிக்க வேண்டும் என்ற ஏக்கம், ஏதுமறியா பருவத்தில் அனுபவிக்கும் கொடுமைகள் என நம்மை கண் கலங்க வைக்கிறார். நிச்சயம் விருதுகள் பல தட்டிச் செல்வார் கிருத்திகா.
பத்திரிக்கையாளராக வரும் காளி வெங்கட், கலெக்டர் பிஏவாக வரும் வி டி வி கணேஷ் , ரேஞ்சராக வரும் ஜான் விஜய், ஒரு காட்சியில் வந்து போகும் ‘பருத்திவீரன்’ சரவணன், ஹரிஷ் உத்தமன் என மற்ற நடிகர்கள் எல்லோருமே நல்ல தேர்வு, நடிப்பு.
படத்தை பார்த்தாலே நிச்சயம் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் தான் ஒளிப்பதிவு செய்திருப்பார் என சொல்லி விடலாம். காடு, மலை போன்ற இயற்கை பின்னணியில் நடக்கும் கதை என்றாலே சுகுமாரை கூப்பிடுங்கப்பா என சொல்லும் அளவுக்கு அவரின் உழைப்பு அபாரம். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் இனிமையான பாடல்கள் நம்மையும் படத்துக்குள் ஈர்த்துக் கொள்கிறது.
இயக்குனர் கணேஷ் விநாயகன் ஏற்கனவே மலைவாழ் மக்களின் வாழ்வியல் பின்னணியில் தேன் என்ற படத்தை எடுத்து நம்மை எல்லாம் ஆச்சர்யப்படுத்தினார். இந்த முறை மலைவாழ் மக்களுக்கும் கல்வி அவசியம், அவர்கள் கல்வியின் அவசியத்தை உணர வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த படத்தை தந்திருக்கிறார். முதல் பாதி முழுக்க கிராம மக்களின் வாழ்க்கையை அவ்வளவு யதார்த்தமாக பதிவு செய்கிறார். இரண்டாம் பாதியில் அரசாங்கம் எப்படி செயல்படும் என்பதையும் சொல்கிறார். நல்ல நடிகர்கள் தேர்வு, தரமான மேக்கிங் என நல்ல படத்தை கொடுத்து மீண்டும் ஒரு முறை தான் ஒரு நல்ல இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். நிச்சயம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

