இது ரீ-ரிலீஸ் காலம். கடந்த காலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காலத்தால் அழிக்க முடியாத பல கிளாசிக் படங்களை இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு காட்ட பல படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் விஜயகாந்த் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படம், புரட்சிக் கலைஞராக இருந்த அவரை கேப்டன் என அழைக்கப்பட காரணமாக அமைந்த படம் கேப்டன் பிரபாகரன். ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான அதிரடி ஆக்ஷன் திரைப்படம்.
விஜயகாந்தின் 100வது படமாக உருவான இந்த படம், சந்தன கடத்தல் வீரப்பனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மன்சூர் அலிகான் வீரபத்திரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அறிமுகமான படம். தற்போது 2025-ல் 4K தரத்தில் மறுபதிப்பு செய்யப்படு ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. எப்படி இருக்கு இந்த மறுபதிப்பு.. பார்க்கலாம்.
விஜயகாந்து ஆக்ரோஷமான நடிப்பால் படத்தைத் தாங்குகிறார். அவரது ஆக்ஷன் காட்சிகளும், உணர்ச்சிமிக்க வசனங்களும் ரசிகர்களை கவர்ந்தவை. இளம் வயது விஜயகாந்த், அவ்வளவு வசீகரம். மன்சூர் அலிகான் முதல் படத்திலேயே அப்படி ஒரு வில்லத்தனமான நடிப்பு. மீசை இல்லாத வாலிப வயது சரத்குமாரை திரையில் பார்ப்பது ஒரு புத்தம் புது உணர்வு. ரம்யா கிருஷ்ணனின் ஆட்டமா தேரோட்டமா பாடல் படத்துக்கு மிகப்பெரிய விசிட்டிங் கார்டு.
இளையராஜாவின் இசை காதுகளுக்கு இனிமை. பாசமுள்ள பாண்டியரே, ஆட்டமா தேரோட்டமா பாடல்கள் திரையில் பார்க்கும்போது வியக்க வைக்கிறது. ரசிக்க வைக்கிறது. விஜயகாந்த் என்றாலே காலை சுழற்றி அடிப்பார் என்ற அந்த விஷயம் இந்த படத்தில் நன்றாகவே பார்க்க முடியும். அத்தனை ஆக்ஷன் காட்சிகளும் விறுவிறுப்பை கூட்டுகின்றன. குறிப்பாக ரயிலை சேஸ் செய்யும் குதிரை வீரர்கள் சண்டைக் காட்சியை படமாக்கிய விதம் பிரமிக்க வைக்கிறது.
1990களின் பிரமாண்ட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. திரையில் பிரமாண்டத்தை நம் கண் முன்னே விரிக்கிறார். அவரது இயக்கத்தில் அந்த காடு, மலை, அருவிகள், ரயில் ஆக்ஷன் காட்சிகளை காட்டிய ஒளிப்பதிவாளர் ராஜராஜனும் பாராட்டுக்குரியவர். பல காட்சிகள் காடுகளில் இருட்டில் படமாக்கப்பட்டவை, அவற்றை எப்படி எடுத்திருப்பார்கள் என நினைக்கும்போதே பிரமிப்பு நம்மை தொற்றிக் கொள்கிறது. 90களின் தமிழ் சினிமாவின் தரத்திற்கு ஏற்ப சிறப்பாக அமைந்த படம், இப்போது பார்த்தாலும் ரசிக்கக் கூடிய படம்.

