சர்தார் 2 – விமர்சனம்!

2022-ஆம் ஆண்டு பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்ற ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் சர்தார் 2’, தற்போது பல மடங்கு பிரமாண்டமாக, முதல் பாகத்தின் அதே கதாபாத்திரங்களுடன் சில புதிய கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாட்டிற்கு பேரழிவு ஏற்படுத்தக் கூடிய உயிரியல் ஆயுதம் (Bio-weapon) ஒன்றை கைப்பற்ற வில்லன் எஸ்.ஜே.சூர்யா துடிக்கிறார். அதை ஆக்டிவேட் செய்ய மூன்று சாவிகள் தேவைப்படுகிறது. அந்த மூன்று சாவிகளை மூன்று முக்கியமான இந்திய ரகசிய உளவாளிகள் ரகசிய இடங்களில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள். அவர்களை ஒவ்வொருவராக வேட்டையாடி அந்த சாவிகளை கைப்பற்றும் முனைப்பில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவை சர்தார் & விஜி என தந்தை, மகன் என இருவரும் இணைந்து எப்படி அந்த திட்டத்தை முறியடித்தனர்? எஸ்.ஜே.சூர்யாவின் பின்னணி என்ன? அவர் ஏன் நாட்டை அழிக்கத் துடிக்கிறார்? என்பதே மீதிக்கதை.

நாயகன் கார்த்தி முதல் பாகம் போலவே இந்த படத்திலும் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் கலக்கி எடுத்திருக்கிறார். விஜி கதாபாத்திரத்தில் ஜாலியான கார்த்தியும், சர்தார் கதாபாத்திரத்தில் அழுத்தமான எமோஷனலான நடிப்பை தந்துள்ளார். ஆங்கில படங்களுக்கு இணையான சாகச காட்சிகளிலும் அசத்துகிறார். இண்டர்வல் காட்சியில் தெறிக்க விடுகிறார்.

கார்த்தியை மிஞ்சும் ஒரு கதாபாத்திரத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா தனது தனித்துவமான உடல்மொழியால் மிரட்டுகிறார். ஸ்டைலிஷ் வில்லனாக படம் முழுக்க வலம் வருகிறார். சில இடங்களில் அவருக்கே உரித்தான நடிப்பால் சிரிக்கவும் வைக்கிறார். முத பாகத்தில் வந்த ரஜிஷா விஜயன் ஒரு சின்ன கேமியோவாக வந்து போகிறார். ஆக்ஷன் அவதாரத்தில் மாளவிகா மோகனன் தெறிக்க விட்டிருக்கிறார். ஆஷிகா ரங்கநாத் இளம் வயது கார்த்தியுடன் இணைந்து பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். யோகி பாபு சில காட்சிகள் வந்தாலும் சிரிக்க வைக்கிறார். அச்யுத் குமார், ஆஷிஷ் வித்யார்த்தி, நிழல்கள் ரவி, பாபு ஆண்டனி, அவினாஷ் என மற்ற நடிகர்களும் நல்ல பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய ஹைலைட். ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போன்ற பிரமாண்டம், சேஸிங், ஆக்ஷன் சாகச காட்சிகள் என ரசிக்க வைத்திருக்கிறார். கேமரா கோணங்கள் ஆக்‌ஷன் காட்சிகளை மிக பிரமாண்டமாகக் காட்டியிருக்கிறார். ராஜீவன் அரங்க அமைப்புகள் படத்துக்கு பேருதவி புரிந்திருக்கிறது. படத்தின் பிரமாண்டத்தை மேலும் கூட்டியிருக்கிறது.

சாம்.சி.எஸ் 100வது படம். பின்னணி இசைக்கு பெயர் போன சாம் இந்த படத்திலும் தெறிக்க விட்டிருக்கிறார். கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு இசைக்கப்பட்டிருக்கும் தீம் மியூசிக், பின்னணி இசை எல்லாமே மாஸை கூட்டுகிறது. கோன் வருவான் பாடலும், அதை உபயோகப்படுத்திய விதமும் சிறப்பு.

1000+ கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக கிராபிக்ஸ் & விஎஃப்எக்ஸ் (VFX) பணிகளும் பாராட்டத்தக்க வகையில்  அமைந்திருக்கின்றன. படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் முதல் பாகத்தில் ஸ்பை திரில்லர் ஜானருக்குள் ஒரு நல்ல சமூக கருத்தை விதைத்திருந்தார். இந்த படத்திலும் மிக முக்கியமான ஒரு சமூக கருத்தை பேசியிருக்கிறார். அதிகப்படியான ஆன்டிபயாடிக்ஸ் (Antibiotics) பயன்பாடு குறித்த ஒரு சமூக அக்கறையை பேசியிருக்கிறார். வெறும் கருத்தை பேசி போரடிக்காமல் ஒரு விறுவிறுப்பான திரில்லர் படமாக தந்திருக்கிறார். படத்தின் நீளம் அதிகமாக இருப்பது குறையாக இருக்கிறது, ஒரே விஷயத்தை கொஞ்சம் நீளமாக சொன்ன உணர்வும் எழுகிறது. இது போல சின்ன சின்ன குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் பிரமிக்க வைக்கும் பிரமாண்டமான ‘சர்தார் 2’ நிச்சயம் உங்களை ரசிக்க வைக்கும். குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *