விடுதலை 1,2 படங்களின் வெற்றிக்குப் பிறகு ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் சூரி நடித்திருக்கும் அடுத்த திரைப்படம் “மண்டாடி”. முந்தைய திரைப்படம் மலை, காடு பின்னணியில் இருந்தது. இந்தப் படம் முற்றிலும் இன்னொரு திசையில் கடல் பின்னணியில் கடலோர மீனவர்களின் வாழ்க்கை மற்றும் பாரம்பரிய படகுப் பந்தயப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சென்னையில் ஒரு தீம் பார்க்கில் சாதாரண தொழிலாளியாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் சூரி. அந்த நேரத்தில் ஊரில் ஒரு பிரச்சினை என்பதால் சூரியின் நண்பனின் மகன் சூரி இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கும் பிரச்சினை துரத்த, ஓடி ஒளியாமல் பிரச்சினை நடந்த இடத்துக்கே அதாவது தனது சொந்த ஊரான முகவைப்பட்டினத்திற்கே திரும்புகிறார். வந்த இடத்தில் பாய் மரப் படகுப் போட்டியால் பிரச்சினை என்பது தெரிய வர, தான் ஒரு பயிற்சியாளராக அந்த அணியை வெல்ல வைக்கிறேன் என பொறுப்பேற்கிறார். அவரது கடந்த காலம் என்ன? அவர் ஏன் ஊரை விட்டு, படகுப் போட்டியை விட்டு போனார்? 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த போட்டியை வென்று கொடுத்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் சூரி. படத்துக்குப் படம் அவரது நடிப்பிலும் ஆளுமையிலும் மிகப்பெரிய முன்னேற்றம். காமெடி நடிகராக இருந்து வந்தாலும் இப்போது முழுமையாக சீரியஸ் நடிகராக, அழுத்தமான நடிப்பை தரும் நடிகராக, ஆக்ஷன் ஹீரோவாகவே மாறியிருக்கிறார். ஸ்டைலாக பீடி பிடிப்பதில் இருந்து கடலோர இளைஞராக அவரது உடல்மொழியும் நடிப்பும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. கடலுக்குள் எடுக்கப்பட்ட படகுப் போட்டி காட்சிகளிலும் அவரது கடும் உழைப்பு தெரிகிறது. முக்கியமான ஒரு எமோஷன் காட்சியில் நம்மை கண் கலங்க வைக்கிறார்.
சூரிக்கு நேர் எதிர் கதாபாத்திரத்தில் சுஹாஸ். தெலுங்கில் இருந்து தமிழில் அறிமுகமாகியுள்ள சுஹாஸ் ராவான நடிப்பால் மிரட்டுகிறார். படம் முழுக்க தன் வில்லத்தனத்தால் ஸ்கோர் செய்கிறார். நாயகி மஹிமா இரண்டு காலகட்டத்திலும் அந்தந்த வயதை மனதில் வைத்து முதிர்ச்சியான நடிப்பை அநாயசமாக வழங்கியுள்ளார். சத்யராஜ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் மிக மிக ஆளுமை செலுத்துகிறார். சண்டைக்காட்சியில் கூட மாஸ் குறையாத ஆளுமை. மிதுன் ஒரு கோபக்கார இளைஞனாக படம் முழுக்க வந்து மீண்டும் கவனம் ஈர்த்திருக்கிறார்.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக இருக்கிறது. கடலின் அழகையும், அதே கடலின் ஆக்ரோஷத்தையும் மிகச்சிறப்பாக படம் பிடித்து நாமே படகில் பயணிக்கும் உணர்வையும் கூட சில காட்சிகளில் நமக்கு தருகிறார். கூடவே படகுப் போட்டி காட்சிகளை எல்லாம் மிகச் சிறப்பாக வடிவமைத்த பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கும் பாராட்டுக்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். முக்கியமான உசுரே நீ தான் பாடல் மனதில் ரீங்காரமிடுகிறது. மண்டாடி பாடல் துடிப்பு. பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளிலும், படகுப் போட்டிகளிலும் படத்தின் வேகத்தை வெகுவாக கூட்டியுள்ளது.
இயக்குனர் மதிமாறன் புகழேந்தி. இதுவரை படகுப் போட்டியை படங்களில் பார்த்திருப்போம். ஆனால் உண்மையான படகுப் போட்டியின் உலகத்தை நம் கண்முன் நிறுத்துகிறார். தெரியாத பல விஷயங்களை படம் முழுக்க நமக்கு கதையினூடே சொல்லிக் கொண்டே வருகிறார். மண்டாடி என்பவர் யார், போட்டியின் விதிகள் எப்படி இருக்கும், போட்டி எப்படி இருக்கும், அதன் நுணுக்கங்கள் என்ன என்பதை எல்லாம் நமக்கும் சொல்லிக் கொடுப்பது போல பல ஆச்சரியமான விஷயங்கள் படம் முழுக்க இருந்தது புதுமையான அனுபவம். இடைவேளைக் காட்சியும், கிளைமேக்ஸில் இடம்பெறும் பிரம்மாண்ட படகுப் போட்டி சண்டைக் காட்சிகளும் கண்களுக்கு விருந்து. சில இடங்களில் வெற்றிமாறன் படங்களை பார்க்கும் உணர்வை கூட தந்திருக்கிறார் இயக்குனர். படத்துக்கு படம் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுக்கும் சூரி ‘மண்டாடி’ என்ற தரமான கமெர்சியல் எண்டர்டெயினரை தந்திருக்கிறார். குடும்பத்துடன் திரையரங்கில் சென்று ரசித்து விட்டு வாருங்கள்.
