டபுள் ஆக்குபன்சி – விமர்சனம்!

நடிகை குஷ்பூவின் மகள் அனந்திகா சுந்தர் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் “டபுள் ஆக்குபன்சி”. அறிமுக இயக்குனர் அஸ்வின் கந்தசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தில் சந்ஷோஷ், வினோத் கிஷன், சம்யுக்தா, ரேஷ்மா நடித்திருக்கிறார்கள். படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, பல ஆண்டுகள் குழந்தை இல்லாத போஸ் வெங்கட், வினோதினி தம்பதிக்கு நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு குழந்தை பிறக்கிறது. பிறந்தது முதலே பகலில் பெண்ணாகவும், இரவில் ஆணாகவும் மாறுவதை கண்டு அவர்கள் பெற்றோரே அதிர்ச்சியாகிறார்கள். பின் கொடைக்கானலுக்கு போய் வளர்க்கிறார்கள். இளம்பெண்/பையனாக வளரும் நேரத்தில் பெற்றோர் இறந்து போக, சென்னை வந்து வாழ்கிறார்கள். பகலில் பெண்ணாக இருக்கும் நாயகி ரேஷ்மாவை காதலிக்கிறார் உடன் வேலை செய்யும் ஆராய்ச்சியாளர் வினோத் கிஷன். இரவில் ஆணாக மாறும் சந்தோஷ் ஒரு பாரில் வேலை செய்கிறார். ஆடை வடிவமைப்பாளர் சம்யுக்தாவும் சந்தோஷூம் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். தங்கள் காதலர்களிடம் இந்த ரகசியத்தை சொல்ல முடியாமல் தவிக்கும் சந்தோஷ், ரேஷ்மா அதை எப்படி கையாண்டார்கள்? ஒரு முக்கியமான பிரச்சினையில் சிக்கிக் கொள்ள அதில் இருந்து எப்படி மீண்டார்கள்? என்பதே மீதிக்கதை.

நாயகன் சந்தோஷ். அறிமுகப் படம் என்றாலும் அப்படி தெரியாத அளவுக்கு அசால்ட்டாக, ரசிக்கும்படியாக நடித்திருக்கிறார். இரவில் பாரில் வேலை செய்வது, ரேஷ்மாவின் உணர்வுகளை புரிந்து கொண்டு கண்ணீர் வடிப்பது, காமெடியில் கலாட்டா செய்வது என ஒரு நல்ல சிறப்பான அறிமுகப் படமாக அமைந்திருக்கிறது. இன்னொரு நாயகன் வினோத் கிஷன். பல படங்களில் மிரட்டலான நடிப்பில் பார்த்துப் பழகிய நமக்கு, இன்னொசன்ஸ் கலந்த ஒரு இளைஞனாக ரசிக்க வைக்கிறார்.

சம்யுக்தா விஸ்வநாதன் ஒரு மேல்தட்டு வர்க்க பெண்ணாக, மாடர்ன் பெண்ணாக கச்சிதமாக பொருந்திப் போகிறார். சந்தோஷ் உடனான ரொமான்ஸ் காட்சிகளில் காதல் ரசம் சொட்டுகிறது. ரேஷ்மா வெங்கடேஷ் இயற்கையான அழகு, தனக்கென ஒரு நோக்கத்தை தாங்கிக் கொண்டிருப்பது, வினோத் கிஷன் உடனான காதல் என ரசிக்க வைக்கிறார். விடிவி கணேஷ் காமெடியில் தியேட்டர் குலுங்குகிறது. பகவதி பெருமாள், விச்சு என மற்ற நடிகர்களும் சிறப்பு. ஒரு கேமியோ கதாபாத்திரம் பெரிய சர்ப்ரைஸ்.

சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு படத்தை கூடுதல் அழகாக்கி இருக்கிறது. சாம் சி.எஸ் இசை மின்னலடிக்குது பாடலும், உயிரே பாடலும் மனதில் தங்குகிறது. பின்னணி இசையில் யூத்தை கவரும் வகையில் பின்னி எடுத்திருக்கிறார்.

இயக்குனர் அஸ்வின் கந்தசாமி. ஒரு புதுமையான கான்செப்டை எடுத்துக் கொண்டு அதில் காதல், காமெடி, எமோஷன் என சரிவிகிதத்தில் ரசிக்கும் விதத்தில் கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார். முதல் பாதி முழுக்க ஒரே ரகளை, இரண்டாம் பாதியில் எமோஷனலாக மனதையும் தொடுகிறார். ஃபேண்டசியான கதை என்றாலும் பல காட்சிகளை அழகாக சேர்த்து நம்மை கன்வின்ஸ் செய்து ரசிக்க வைத்திருக்கிறார். ஆண் பெண்ணாக மாறுவது, பெண் ஆணாக மாறுவது என இருந்தாலும் முகம் சுளிக்கும் காட்சிகள் எதுவும் இல்லாமல் குடும்பத்தோடு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸில் பார்ட் 2-க்கு ஒரு பெயரோடு லீட் கொடுத்திருப்பதும் நல்ல ஒரு ஐடியா. மொத்தத்தில் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு கலகல கலாட்டாவான படம் இந்த “டபுள் ஆக்குபன்சி”!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *