Tere Ishk Mein – விமர்சனம்!

ராஞ்சனா, அட்ராங்கி ரே படங்களை தொடர்ந்து தனுஷ் – ஆனந்த் எல். ராய். கூட்டணியில் உருவாகி இருக்கும் மூன்றாவது திரைப்படம் “தேரே இஷ்க் மே”. Love Triology என சொல்லும் அளவுக்கு மூன்றுமே காதல் படங்கள். மூன்று படங்களுக்கும் இசை ஏ.ஆர்.ரஹ்மான் தான். தனுஷுடன் நாயகியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார். இந்த படம் எப்படி இருக்கு? விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, இந்திய விமானப்படையின் சிறந்த வீரராக இருக்கும் தனுஷ் உயர் அதிகாரிகளை கேட்டு நடப்பதில்லை, கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறார் என ஒரு கவுன்சிலிங் அனுப்ப முடிவெடுக்கிறார்கள். அந்த சைக்காலஜி கவுன்சிலர் தான் நாயகி க்ரித்தி சனோன். தனுஷ் தான் என தெரிந்தவுடன் நிறைமாத கர்ப்பிணியான நாயகி லே லடாக் பகுதிக்கு சென்றே ஆக வேண்டும் என பிடிவாதமாக செல்கிறார். ஃபிளாஷ்பேக்கில் கல்லூரியில் தனுஷ் வன்முறையாளனாக சுற்றுகிறார். ஆய்வறிக்கை (thesis) தயார் செய்ய தனுஷ் உடன் பழகுகிறார். தனுஷ் காதலில் விழுகிறார். க்ரித்தி நான் என் ஆய்வறிக்கை வேலையை பார்க்குறேன், நீ காதல் பண்ணா பண்ணிக்கோ என சொல்கிறார். ஒரு கட்டத்தில் வன்முறை தனுஷை விட்டு விலகவில்லை என்பதால் க்ரித்தி தனுஷை விட்டு விலகுகிறார். அதன் பின் என்ன ஆனது? தனுஷ் எப்படி விமானப்படையில் சேர்ந்தார்? தனுஷை ஏன் நிறைமாத கர்ப்பிணி க்ரித்தி பார்க்க துடிக்கிறார்? என்பதை இதயம் ரணமாக, கண்கள் குளமாக மிக அழுத்தமாக சொல்லும் படமே “தேரே இஷ்க் மே”.

தனுஷ். சங்கர் என்ற கதாபாத்திரத்தில் உடல் எரிகிறது என சொல்லும் அந்த கதாபாத்திரமாகவே எந்த நேரம் வெடிப்பார் என சொல்ல முடியாத ஒரு volatile இளைஞனாக வாழ்ந்திருக்கிறார். விமானப்படை உடையில் அப்படியே கச்சிதமாக இருக்கிறார். காதல் காட்சிகளில் பல இடங்களில் நம் இதயத்தை கனமாக்குகிறார். க்ரீத்தி சனோன் படத்தை இன்னும் தூக்கி நிறுத்துகிறார். அப்படி ஒரு மெச்சூர்ட் நடிப்பில் அந்த கதாபாத்திரத்தால் படத்தை இன்னும் அமரத்துவம் ஆக்குகிறார். தனுஷை விட்டு பிரிந்த பின் போதையில் மூழ்கும் கதாபாத்திரத்தை இவ்வளவு தத்ரூபமாக வேறு யாரும் செய்திருக்க முடியாது.

தனுஷின் அப்பாவாக பிரகாஷ் ராஜ். ஒரு எழை நோட்டரி பப்ளிக்காக, தன் ஒரே மகனுக்காக வாழும் ஒரு கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். படத்தின் முக்கியமான காட்சியில் கலங்க வைக்கிறார். தனுஷின் நண்பர், நாயகியின் அப்பா என மற்ற நடிகர்களும் மிகச் சிறந்த நடிப்பை தந்து படத்தை இன்னும் தூக்கி பிடிக்கிறார்கள்.

தனுஷ், ஆனந்த் எல்.ராய், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்கள். ரஹ்மான் இசை படத்தை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்கிறது. நம் இதயத்தை மேலும் கனமாக்குகிறது ரஹ்மானின் பின்னணி இசை. டைட்டில் பாடல், ஜிகர் ஆண் வெர்ஷன், பெண் வெர்ஷன் உள்ளிட்ட எல்லா பாடல்களும் மனதை நிறைக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக இருக்கிறது.

இயக்குநர் ஆனந்த் எல். ராய் தனுஷ் உடன் இணைந்த மூன்று படங்களுமே காதல் படங்கள், ஆனாலும் அவை வழக்கமான காதல் படங்கள் இல்லை. அந்த வகையில் இந்த படமும் நம்மை அந்த உலகத்துக்குள் இழுக்கிறது. ராஞ்சனா, அட்ராங்கி ரே படங்களில் கலங்க வைத்ததை போலவே இந்த படத்திலும் நம்மை கலங்க வைத்து விட்டார். இப்படிப்பட்ட எமோஷன் தான் படத்தின் ஆன்மாவே. சிவா, பனாரஸ் விஷயங்கள் படத்தில் வந்த விதம் நம்மை இன்னும் பரவசப்படுத்துகிறது. மொத்தத்தில் ஆனந்த எல்.ராய், தனுஷ், ஏ.ஆர்,ரஹ்மான் Love Trilogy-யில் இந்த படமும் காலம் கடந்து நிற்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *