Mr X – விமர்சனம்!

FIR படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மனு ஆனந்த். மீடியம் பட்ஜெட்டிலும் ஒரு ஸ்பை திரில்லர் படத்தை உலகத் தரத்தோடு தர முடியும் என்பதை நிரூபித்தவர். அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் Mr.X. முதல் படத்தை போலவே இந்த படமும் ஒரு ஸ்பை திரில்லர் ஜானர் படம் தான். FIR போலவே இந்த படமும் கவனம் ஈர்க்குமா? வெற்றி பெறுமா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, RAW உளவு அமைப்பில் மிகச் சிறந்த ஒரு ஏஜெண்டாக இருக்கிறார் சரத்குமார். மிக ஆபத்தான அணு ஆயுதம் தயாரிக்கும் மூலப்பொருள் ஒன்றை பல வருடங்களாக எந்த நாட்டின் கையிலும் சிக்காமல் பாதுகாத்து வருகிறார். அவரை கைது செய்து அந்த ஆயுதத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி அதை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடிவு செய்கிறது. அதை தடுக்கும் பொறுப்பு ரா அதிகாரி மஞ்சு வாரியருக்கு வருகிறது. அவர் இந்தியாவிற்குள் ஹவாலா தடுப்பில் பணியாற்றும் உளவாளியான ஆர்யாவிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார். தன்னுடைய குழுவுடன்  இந்த மிஷனை மேற்கொள்ளும் ஆர்யா அதில் வெற்றி பெற்றாரா? அந்த சதிக்கும் பின்புலத்தில் இருப்பது யார்? கௌதம் கார்த்திக் இந்த கதையில் என்ன செய்கிறார்? பல நாயகிகள் இருக்க, அவர்கள் பங்கு என்ன? என்பதை அடுத்தடுத்த திருப்பங்களுடன் சொல்வதே மீதிக்கதை.

நாயகன் ஆர்யா. கதைக்கு ஏற்ப கச்சிதமான ஒரு உடலமைப்புடன் படம் முழுக்க அசத்துகிறார். ஆக்ஷன் காட்சிகளில் அது சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. காதல் காட்சிகளிலும், எமோஷன் காட்சியிலும் கூட அவர் நடிப்பை காட்டியிருக்கிறார். கௌதம் கார்த்திக் இன்னொரு ஹீரோ என நினைத்து உட்கார்ந்தால் மிரட்டல் வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார். தன் இயல்பான பாடி லாங்குவேஜ் மற்றும் நடிப்பால் நியாயம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்.

டைட்டில் கேரக்டரில் மிஸ்டர் எக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வரும் சரத்குமார் வெவ்வேறு தோற்றங்களில் வந்து அவர் ஆளுமையை நிரூபிக்கிறார். இளம் வயது உளவாளியாக, சீனியர் உளவாளியாக என இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார். மஞ்சு வாரியர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதே இளமைத் துடிப்புடன், ஆளுமை செலுத்துகிறார். ஆக்ஷன் காட்சிகளில் பட்டைய கிளப்புகிறார். ரைஸா வில்சன், அதுல்யா ரவி, அனகா என இளம் நாயகிகள் ஒவ்வொருவருமே படத்துக்கு கூடுதல் கலர் சேர்க்கிறார்கள். காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ் என மற்ற நடிகர்களும் அவர்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு ஒரு ஸ்பை திரில்லர் படத்துக்கு ஏற்ற நியாயத்தை செய்திருக்கிறது. வெளிநாடுகள், பாலைவனங்கள் என பிரமாண்டங்களை சிறப்பாக படம் பிடித்த அதே சமயம் சென்னையின் தெருக்கள், லோக்கல் ஏரியாக்கள் ஆகியவற்றை காட்டியதும் சிறப்பு.

திபு நினன் தாமஸ் இசையில் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னணி இசையை இன்னும் நம்மை ஒன்ற வைக்கிறது. கிளைமாக்ஸூக்கு முன்பு வரும் இசை எல்லாம் ஹாலிவுட் படங்களில் பார்க்கும் இசையை வழங்கியிருக்கிறார்.

இயக்குனர் மனு ஆனந்த். உளவாளிகளை பற்றிய படங்களை எடுப்பதில் அதீத ஆர்வம் போல. இந்த படத்திலும் சின்னதாக ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதை சுற்றி கதாபாத்திரங்களை ஓட விட்டு திரைக்கதை அமைத்திருக்கிறார். ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருப்பதாலே முதல் பாதியில் அடுத்தடுத்த கதாபாத்திர அறிமுகம் என கொஞ்சம் மெதுவாகவே கதைக்குள் செல்கிறது. இரண்டாம் பாதியில் பரபரப்பாக மைய நோக்கத்தை நோக்கி நகர்கிறது. சில காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பதும், சில லாஜிக் குறைபாடுகளும் படத்தின் தரத்தை சற்று குறைக்கிறது. சில விஷயங்களை ஆழமாக பேசாமல் விட்டதும் குறையாகவே தெரிகிறது. மொத்தத்தில் ஆக்ஷன் திரில்லர் ரசிகர்களுக்கும் சாதாரண ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் இந்த Mr.X.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *