ஹாலிவுட்டில் 1987ஆம் ஆண்டு வெளியாகி இருந்த He-Man படத்தின் ரீபூட் வெர்ஷன் தற்போது ‘He-man and The Masters of the Universe’ என்ற பெயரில் உலகம் முழுக்க வெளியாகி இருக்கிறது. இந்தியாவிலும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பிராந்திய மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, எடெர்னியா என்ற கிரகத்தின் இளவரசன் ஆடம் சிறுவனாக இருக்கும்போது அவரது கிரகத்தை தீய சக்தி ஸ்கெலெடர் தாக்குகிறார். அந்த தாக்குதலில் இருந்து இளவரசரை காத்து பூமிக்கு அனுப்புகிறார் காசில் கிரேஸ்கல். சிறுவனாக இருந்து வாலிபனாக மாறிய ஆடம் அந்த கிரகத்தில் சக்தி மிக்க வாளுடன் பூமிக்குள் குதிக்க, அந்த வாளையும் தேடி அலைகிறார். ஒரு வழியாக அந்த வாளை கண்டுபிடிக்க, அதே நேரம் சிறுவயதில் தோழியாக இருந்த டீலா உடன் மீண்டும் எடெர்னியா கிரகத்திற்கு செல்கிறார். அங்கு ஸ்கெலெடர் அந்த கிரகத்தையே சிதைத்திருப்பதை பார்த்து வேதனை அடைகிறார். சக்தி மிக்க அந்த வாளைக் கொண்டு ‘ஹீமேன்’ (He-Man) ஆக உருவெடுத்து, சிறைபட்டு இருக்கும் தந்தை உடன் சேர்ந்து தீயசக்தி ஸ்கெலெடரை கொன்று எடெர்னியா உலகத்தை எப்படி மீட்கிறார் என்பதே மீதிக்கதை.
‘He-Man’-ஆக நிக்கோலஸ். ஆஜானுபாகுவான இளைஞனாக, கட்டுமஸ்தான உடலுடன் வலம் வருகிறார். ஆனாலும் குழந்தை தன்மையுடன் ரசிக்க வைக்கிறார். பாடகர் கார்த்திக் குரலும் அவருக்கு பக்கா மேட்ச். டீலாவாக கமீலா மெண்டிஸ். நாயகனின் தோழியாக முக்கியமான விஷயங்களை சொல்லித் தருபவராகவும், ஒரு வீராங்கணையாகவும் அசத்துகிறார்.
Skeletor-ஆக Jared Leto ஆகியோர் நடித்துள்ளனர். பார்க்கவே பயங்கரமான கோரமான தோற்றத்தில் மிரட்டுகிறார். Man-At-Arms கதாபாத்திரத்தில் Idris Elba நடித்துள்ளார். காமெடியும் ரசிக்க வைக்கிறார்.
Travis Knight இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஹீமே ரசிகர்களுக்கு கொண்டாட்டமான படமாகவும் , முழு விருந்தாகவும் அமைந்திருக்கிறது. ஏற்கனவே பழைய ஹீமேன் படத்தை பார்த்தவர்கள் இந்த படத்தை இன்னும் ரசிப்பார்கள். புதிய ரசிகர்களும், என்ன படம் என தெரியாமல் தியேட்டருக்குள் செல்லும் ரசிகர்கள் கூட நிச்சயம் இந்த கதாபாத்திரங்களாலும், அந்த அழகிய எடெர்னியா உலகத்தாலும் ஈர்க்கப்படுவார்கள். அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோ மிக பிரமாண்டமாக தயாரித்திருப்பதும் கூடுதல் பலம். ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு மற்றும் சிஜி தொழில்நுட்பம் என அத்தனையும் மிகச்சிறப்பாக கையாளப்பட்டிருப்பது படத்தை மேலும் மெருகேற்றி இருக்கிறது. மொத்தத்தில் குழந்தைகளை அழைத்து சென்று குடும்பத்துடன் ஜாலியாக பார்த்து விட்டு வரக் கூடிய ஒரு படம் தான் இந்த “He-man and The Masters of the Universe”.

