நல்ல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்கிறார்கள் – அருண் கார்த்தி!

பவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பனிவிழும் இரவு’. அருண் கார்த்தி கதாநாயகனாகவும், எனாக்ஷி கங்குலி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் செ.ரா. ராஜேஷ் இயக்கியுள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு, படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சதா முருகன் பேசியதாவது, “பனிவிழும் இரவு என்பது மாறுபட்ட, கவித்துவமான தலைப்பு. நான் ஒரு பாடலாசிரியரும் கூட. சமீபகாலமாக வெளியாகும் பல தமிழ்ப் படங்களுக்குத் தமிழின் அழகையும் பெருமையையும் தாங்கும் தலைப்புகள் அமைவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதனால், அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம். ஆண்டுதோறும் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் தமிழ் சினிமாவில், இதுவரை சொல்லப்படாத மாறுபட்ட கதைக்களத்தை இந்தப் படத்தின் மூலம் முன்வைத்திருக்கிறோம். கதாநாயகன் அருண் கார்த்தி பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக இருந்தாலும், திரையில் தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களைக் கண்கலங்க வைத்துவிடுவார். கதாநாயகி எனாக்ஷி கங்குலி தமிழை அறியாதவராக இருந்தாலும், தனது நடிப்பால் படத்துக்கு மெருகூட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும் இப்படத்தில் இணைந்த நான், கதைக்களம் பிடித்ததால் தயாரிப்பிலும் ஈடுபட்டேன். மற்றொரு தயாரிப்பாளர் ஜெயக்குமார் தங்கவேல் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்தப் படத்தை வித்தியாசமான படைப்பாக உருவாக்கியிருக்கிறோம்”.

ஒரு திரைப்படத்தை உருவாக்குவதை விட அதைத் திரையரங்குகளுக்குக் கொண்டு சென்று வெளியிடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அந்தச் சவாலை ஏற்று ARK புரொடக்ஷன்ஸ் சார்பில் தனசேகர் மற்றும் சஞ்சய் ஆகியோர் எங்களுக்குப் பெரும் ஆதரவாக இருக்கிறார்கள். ‘பனிவிழும் இரவு’ திரைப்படத்தின் கதைக்களம் மிகவும் வித்தியாசமானது. படத்தின் ஆறாவது ரீல் தொடங்கும் வரையிலும் அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்களால் கணிக்க முடியாது. அப்படியொரு சுவாரசியமான திரைக்கதையுடன் இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது குறைந்தது நூறு குடும்பங்களாவது அதன் மூலம் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் பெறுகிறார்கள். எனவே, எங்களைப் போன்ற சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களின் படைப்புகள் தரமாக இருக்கும்போது, ஊடக நண்பர்கள் தங்களுடைய விமர்சனங்கள் மூலமாக எங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல் பேசியதாவது, “மதுரையில் திருமணப் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்த நான், பின்னர் கேமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களை வாடகைக்கு வழங்கும் தொழிலில் ஈடுபட்டேன். அதன் மூலமாகத் திரைத்துறையுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. சினிமாவில் நமக்கென ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற ஆசையில் ‘பனிவிழும் இரவு’ திரைப்படத்தின் பணியில் ஈடுபட்டேன். குறைந்த பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். குறிப்பாக, சேரன் ராஜ், சரவண சக்தி உள்ளிட்ட கலைஞர்கள் என் மீது நம்பிக்கை வைத்து, எந்தத் தயக்கமும் இல்லாமல் இப்படத்தில் பணியாற்றினார்கள். அவர்களுடைய ஆதரவு எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தது.

‘பனிவிழும் இரவு’ படத்தின் கதைக்களத்தில் பல சுவாரசியமான அம்சங்களும் திருப்பங்களும் இருக்கின்றன. அவற்றை இப்போதே முழுமையாக வெளிப்படுத்த விரும்பவில்லை. படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்குப் புதிய அனுபவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆரம்பத்தில் குறைந்த பட்ஜெட்டில் தொடங்கிய இப்படத்தின் தயாரிப்புச் செலவுகள், பின்னர் சில காரணங்களால் அதிகரித்தன. அந்தச் சூழலில் தயாரிப்பாளர் சதா முருகன் எனக்கு உறுதுணையாக இருந்தார். அவருடைய ஆதரவு இந்தப் படத்தைத் தொடர்ந்து உருவாக்குவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது தனி மனிதரால் மட்டும் சாத்தியமாகக்கூடிய விஷயம் அல்ல. ஒட்டுமொத்தப் படக்குழுவினரின் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் மிகவும் அவசியம் என்பதை இந்தப் படத்தின் மூலம் நான் உணர்ந்துகொண்டேன். ‘பனிவிழும் இரவு’ திரைப்படம் ரசிகர்களுக்குப் பிடித்தமான படமாக அமையும் என்றும், அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் நம்புகிறேன்.

திரை ஆர்வலர் கேபிள் சங்கர் பேசியதாவது, “இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களின் வெற்றி விகிதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சுமார் 20 படங்களுக்கு மேல் வணிக ரீதியாகவும் லாபகரமாகவும் அமைந்துள்ளன. நல்ல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மூலமாகவும் சிறிய படங்கள் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சிறிய படங்களுக்கான வெற்றி விகிதம் அதிகமாக இருப்பது ஆரோக்கியமான விஷயம்.

‘பனிவிழும் இரவு’ படத்தின் கதாநாயகன் அருண் கார்த்தியைப் பாராட்ட வேண்டும். கதாநாயகனாக நடித்திருப்பதுடன், இப்படத்தின் உருவாக்கத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். கதாநாயகன் என்ற பந்தா இல்லாமல், படக்குழுவினருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றியிருப்பது பாராட்டுக்குரியது. அவரது அர்ப்பணிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, படத்தின் உச்சக்கட்டத்திற்கு அருகில் அவரது நடிப்பு சிறப்பாகப் பேசப்படும் என்று நம்புகிறேன். கதாநாயகி எனாக்ஷி கங்குலி மிகவும் இனிமையான பெண். இந்தப் படத்தில் மென்மையான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும் எனது வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் சதா முருகன் இப்படத்தைச் சிறப்பாகக் கொண்டு வருவதற்காகக் கடந்த ஒன்றரை மாதங்களாகக் கடுமையாக உழைத்திருக்கிறார். படத்தின் வெளியீட்டுப் பணிகள், சென்சார் தொடர்பான நடவடிக்கைகள் என அனைத்திலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் ஒரே அணியாக இணைந்து பணியாற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கருப்பு நம்பியார் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படமாக அமையும் என்று நம்புகிறேன். ‘பனிவிழும் இரவு’ திரைப்படம் பல்வேறு மாற்றங்களைக் கடந்து, தற்போது சுவாரசியமான திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டுப் பணிகளை மேற்கொள்ளும் தனசேகர் மற்றும் சஞ்சய் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நடிகர் உறியடி சுருளி பேசியதாவது, “சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் வெற்றி பெறுவது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். எனது ‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் கிடைத்த அனுபவத்தைப் போல, ‘பனி விழும் இரவு’ படக்குழுவினருக்கும் நல்ல வெற்றி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சில நேரங்களில் வெற்றி தாமதமாகக் கிடைத்தாலும், அது சிறப்பான வெற்றியாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. இந்தப் படத்தில் பணியாற்றிய அருண் கார்த்தி, ஓம் செல்வா மற்றும் சதா முருகன் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைய வேண்டும். அதற்கு ஊடக நண்பர்களான உங்களுடைய ஆதரவு மிகவும் முக்கியம். உங்கள் ஆதரவுடன் இப்படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நடிகர் கருப்பு நம்பியார் பேசியதாவது, “பனி விழும் இரவு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான சதா முருகன் சார், ஜெயக்குமார் சார், செல்வா சார் மற்றும் விநியோகஸ்தர்களான சஞ்சய், தனசேகரன் சார் ஆகிய அனைவருக்கும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியையும், மகிழ்ச்சியையும், லாபத்தையும் பெற்றுத் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும், கேபிள் சங்கர் சாருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். திறமையுடன் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் சினிமா கலைஞர்கள் அனைவருக்கும் நிச்சயமாக மிகச்சிறந்த வெற்றிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ‘பனிவிழும் இரவு’ படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். சுகமே சூழ்க!

தயாரிப்பாளர் சிவசாமி பேசியதாவது, “ஒரு ஆசிரியர் ‘பனிவிழும் இரவு’ திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார் என்றால், அந்தப் படத்தின் உள்ளடக்கம் எந்த அளவுக்குப் பக்குவமாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆசிரியராகப் பணியாற்றுவதுடன், இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் தன்னை இணைத்துக்கொண்டு இந்தப் படத்தைத் தயாரித்திருப்பது சிறப்பான விஷயம். இன்றைய தலைமுறைக்குத் தேவையான படமாக இது இருக்கும் என்று முழுமையாக நம்புகிறேன். ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் அவர்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். ‘இன்ஸ்பெக்டர் சூர்யா’ படத்தில் அவர் பணியாற்றியபோது, ஒரு சிறிய குறை இருந்தாலும் அதைச் சரிசெய்யாமல் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். தனக்குத் திருப்தி ஏற்படும் வரை மீண்டும் படமாக்க வேண்டும் என்று கூறுவார். அப்படிப்பட்ட அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அவர் ஒளிப்பதிவு செய்துள்ள ‘பனிவிழும் இரவு’ படத்தைப் பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன். இயக்குநர் ராஜேஷ் ஏற்கெனவே பல படங்களில் நடித்தும், இரண்டு படங்களை இயக்கியும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். அவருடைய பணிகளையும் நேரில் பார்த்திருக்கிறேன். எனவே, இந்தப் படமும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கதாநாயகன் அருண் கார்த்தி படத்தின் விளம்பரப் பணிகளில் காட்டும் ஈடுபாடு பாராட்டுக்குரியது. அவர் எவ்வளவு ஆர்வத்துடன் இந்தப் படத்தில் பணியாற்றுகிறார் என்பதைப் பார்க்கும்போதே, படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. புதுமையான விஷயங்களைத் திரையில் கொண்டுவருவது எளிதல்ல. ஆனால், ஒருமுறை அறிமுகமான புதுமை பின்னர் வழக்கமான ஒன்றாக மாறிவிடும். அந்த வகையில், ‘பனிவிழும் இரவு’ ஒரு புதுமையான முயற்சியாக இருக்கும் என்று நம்புகிறேன். இப்படத்தின் தலைப்பே மனதுக்கு இதமான உணர்வைத் தருகிறது. அதே நேரத்தில், இது ஒரு திரில்லர் படம் என்பதால், அந்த இதமான சூழலுக்குள் விறுவிறுப்பும் உணர்ச்சிகளும் இணைந்திருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு அதிக விளம்பர வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்கள் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கிராமங்களிலும் எளிய மக்களிடமும் ஏராளமான திறமைகள் மறைந்திருக்கின்றன. அவர்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளையும் அனுபவங்களையும் கற்பனையுடன் இணைத்துப் புதிய கதைகளை உருவாக்குகிறார்கள். அத்தகைய திறமைகளை வெளிக்கொண்டு வரும் திரைப்படமாக ‘பனிவிழும் இரவு’ அமையும் என்று நம்புகிறேன். சிறிய படங்களையும் அவற்றின் முயற்சிகளையும் ஊடக நண்பர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ‘பனிவிழும் இரவு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!

இயக்குநர் சுரேஷ் பாபு  பேசியதாவது, “இங்கு இருப்பவர்களில் பலரும் எங்களுடைய இன்ஸ்பெக்டர் சூர்யா படக்குழுவைச் சேர்ந்தவர்கள் தான். குறிப்பாக, இந்தப் படத்தின் இயக்குநர் எனது நண்பரும், மச்சானுமான செ.ரா. ராஜேஷைப் பற்றிச் சொல்ல வேண்டும். முதலில் தயாரிப்பாளராகத்தான் அவர் இந்தப் படத்தில் இணைந்தார். நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். அதன்பிறகு, என்னுடைய இன்ஸ்பெக்டர் சூர்யா படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் ஒரு சிறந்த நடிகர். இரண்டு படங்களை முடித்துவிட்டு, இன்று இயக்குநராகத் தனது முதல் படத்தை வெளியிடும் நிலைக்கு வந்திருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்ததாக, சதா முருகன் சாரைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவரும் எங்களுடன் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டிய தயாரிப்பாளர். இன்று எங்கள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து பனிவிழும் இரவு படத்தில் பணியாற்றியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அடுத்ததாக, இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார். நான் பல படங்களில் இணை இயக்குநராகவும் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறேன். அந்த அனுபவத்தில், ஒரு திரைப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறேன். ஒரு காட்சியைச் சிறப்பாக அமைப்பது, சரியான ஃபிரேமில் படமாக்குவது எனப் பல விஷயங்களில் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு மிகவும் அவசியமானது.

ஜெயக்குமார் போன்ற திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவது படத்துக்குப் பெரிய பலம். இந்தப் படத்தில் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்திருக்கிறோம். பனிவிழும் இரவு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். இந்தப் படத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விநியோகஸ்தர் தனசேகரன் பேசியதாவது, “ஒரு நாள் இந்தப் படத்தைப் பற்றி எனக்குத் தகவல் கிடைத்ததும், படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரைத் தொடர்புகொண்டேன். அவர்களை என் அலுவலகத்துக்கு அழைத்துப் பேசினேன். படத்தின் உள்ளடக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையைச் சரியான முறையில் மக்களிடம் கொண்டு சென்றால், வெற்றிப் படமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன என்று சொன்னேன். அதன்பிறகு, இந்தப் படத்தை முன்னெடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தோம். பின்னர் கேபிள் சங்கர் சாரையும் தொடர்புகொண்டு பேசினேன். அவரும் படத்தைப் பார்த்துவிட்டு, இதன் உள்ளடக்கத்தில் சிறப்புகள் இருப்பதாகக் கூறினார். இந்தப் படத்துக்காக சுமார் 45 நாட்கள் இரவு பகலாகப் பல வேலைகளைச் செய்திருக்கிறோம்.

இந்தப் படத்தின் கதாநாயகன் அருண் கார்த்தி சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமா இவரைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பெரிய கதாநாயகர்களின் தேதிகள் கிடைக்காமல் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள் அருண் கார்த்தியை நம்பித் தேர்வு செய்யலாம். இந்தப் படத்தில் அவர் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகியும் சிறப்பாக நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் சதா முருகன் படத்துக்கு அருமையான இசையைக் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் எடுத்திருக்கும் காட்சிகள் என்னையே வியக்க வைத்தன. ஒரு சிறிய படத்துக்குள் இவ்வளவு பிரம்மாண்டமான காட்சிகளை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான், இதை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இன்றைக்கு சிறிய படங்களைத் திரையரங்குகளுக்குக் கொண்டு செல்வது மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. அந்தச் சூழலில், இந்தப் படத்துக்கு உதவியாக இருந்த உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அவர்களுக்கும், எனது நண்பர் ராமசாமி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாகக் கூறி, உடனடியாக முன்னெடுக்கச் சொன்னார் ராமசாமி. மீடியா பாலு அவர்களுக்கும், இயக்குநர் சாமிநாதன் அவர்களுக்கும், கேபிள் சங்கர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் மீது எனக்கு இருந்த நம்பிக்கையால்தான், பலரையும் தொடர்புகொண்டு இதை மக்களிடம் கொண்டுசேர்க்கத் தொடர்ந்து முயற்சி செய்தேன். தயாரிப்பாளர் சதா முருகன் அவர்களும் இயக்குநர் ராஜேஷ் அவர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

இன்றைக்கு தமிழ் சினிமாவில் சிறிய படங்கள் வெற்றி பெறுவது குறித்துப் பல கேள்விகள் எழுகின்றன. சிலர் மலையாளப் படங்களைப் போல நம்மிடம் ஏன் தரமான படங்கள் வருவதில்லை என்று கேட்கிறார்கள். அந்தக் கருத்தை உடைக்கும் படமாக பனிவிழும் இரவு இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதற்கான தகுதி இந்தப் படத்துக்கு இருக்கிறது. இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இதுவரை நண்பர்களுடன் இணைந்து சுமார் 150 படங்களை வெளியிட்ட அனுபவம் எனக்கு இருக்கிறது. ஆனால், இந்தப் படத்தை என் தங்கையின் மகனுடன் இணைந்து தனிப்பட்ட முறையில் முன்னெடுத்துச் செல்கிறேன். எங்களுடைய ARK புரொடக்ஷன்ஸ் நல்ல படங்களைத் தொடர்ந்து வழங்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறேன். பனிவிழும் இரவு படத்துக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி, வணக்கம்!

விநியோகஸ்தர் ராமகிருஷ்ணன் பேசியதாவது, “இந்தப் படத்தின் விநியோகப் பணிகளை முழுமையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தனசேகரன் சார், சஞ்சய் உள்ளிட்டவர்கள் கேட்டுக் கொண்டார்கள். இடையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தாலும், இந்தப் படத்தை வெளியிடுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். அதனால், சிறிய படங்களாக இருந்தாலும் அவற்றுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து, மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறோம். சிறிய படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எங்களை அணுகினால், அவர்களுக்குத் தேவையான பணிகளைச் சிறப்பாகச் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம். இதற்காகச் சம்பளம் வாங்காமல் கூட எங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு கொடுக்க வேண்டும். எங்களால் முடிந்த அளவுக்குச் சிறிய படங்களுக்கு உதவுவோம். நன்றி, வணக்கம்!

நாயகி எனாக்ஷி கங்குலி பேசியதாவது, “முதலில் இங்கு என்ன பேசுவது என்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது. இருந்தாலும், தமிழில் பேச வேண்டும் என்று ஒரு சிறிய உரையைத் தயாரித்திருக்கிறேன். தமிழில் எனக்கு முழுமையாகப் பேசத் தெரியாது. இதுவரை இந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தான் அதிகமாகப் பேசியிருக்கிறேன். இந்தப் படத்தில்கூட வசனங்கள் பேசும்போது எனக்கு உதவியாகத் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசும் வாய்ப்பு இருந்தது. தமிழ் திரையுலகில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம்.

ஜே.கே. சார், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் முழுவதும் எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருந்தீர்கள். நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு என்னால் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்று நம்புகிறேன். கதாநாயகன் அருண் ஒரு அற்புதமான சக நடிகர். படப்பிடிப்பின்போது எனக்குத் தேவையான உதவிகளைச் செய்ததுடன், என்னுடைய வசதி மற்றும் தேவைகள் குறித்தும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டார். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தப் படத்தைத் தயாரித்து ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. கேபிள் சங்கர் சாருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இங்கு வந்திருக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் வளர்ந்து வரும் தயாரிப்பாளர்கள்; நானும் வளர்ந்து வரும் நடிகைதான். எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். இந்தப் படத்தை மக்களிடமும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்க நீங்கள் உதவ வேண்டும். உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி!

கதாநாயகன் அருண் கார்த்தி பேசியதாவது, “ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து, அந்தப் படம் வெளியாகும் இந்தத் தருணத்தில் நான் என்ன உணர்கிறேன் என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த மேடையில் நான் பேசும்போது, “டான்” படத்தின் கிளைமாக்ஸில் வருவதுபோல, என் அப்பா எங்கோ ஒரு மூலையில் நின்று கொண்டு என்னைப் பெருமையுடனும் சந்தோஷத்துடனும் பார்த்துக் கொண்டிருப்பார் என்ற நம்பிக்கையோடு என் பேச்சைத் தொடங்குகிறேன். லவ் யூ பா, மிஸ் யூ பா! என்னுடைய பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை எனக்குத் துணையாக இருக்கும் என் அம்மா, தம்பி, சித்தி, சித்தப்பா, நண்பர்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. பனிவிழும் இரவு திரைப்படம் உருவான கதையைச் சொல்ல வேண்டும் என்றால், முதலில் எனக்கு ஜே.கே. பிரதர் அவர்களைத்தான் தெரியும். அவருடன் ஏற்கெனவே ஒரு பயணத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அவர்தான் இயக்குநர் ராஜேஷ் பிரதர் ஒரு த்ரில்லர் கதையை வைத்திருப்பதாகச் சொன்னார். கதையைப் படித்தவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு பல விவாதங்கள், சந்தேகங்களுக்கான விளக்கங்கள் என எல்லாம் முடிந்து இந்தப் படத்தைத் தொடங்கினோம்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் சதா முருகன் சார் பற்றிக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். நாங்கள் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தினோம். சாதாரணமாக நகரத்தில் படப்பிடிப்பு நடத்துவதே சவாலான விஷயம். அப்படியிருக்கும்போது, கொடைக்கானலில் எத்தனையோ சிரமங்களை எதிர்பார்த்தோம். ஆனால், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சதா முருகன் சார் எங்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். அவருடைய நகைச்சுவை உணர்வு, எல்லோரையும் உற்சாகமாக வைத்திருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அடுத்ததாக, ஜே.கே. பிரதர். ஒரு த்ரில்லர் படத்துக்கு ஒளிப்பதிவு மிகவும் முக்கியம். இயக்குநர் ராஜேஷ் சாரும் ஜே.கே. பிரதரும் இணைந்து எங்களைச் செல்லமாகப் படுத்திய பாடு இருக்கிறதே! கொடைக்கானல் பனிமூட்டத்தில் ஷாட் வேண்டும் என்று சொல்லி, எங்களை ஸ்வெட்டர், ஜெர்கின் எதுவும் இல்லாமல் எங்களுடைய காட்சிகளுக்கான உடைகளிலேயே நடிக்க வைப்பார்கள். அப்போது கஷ்டமாக இருந்தாலும், இறுதியாகப் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கேபிள் சங்கர் சாருக்கும் என் நன்றி. என்னுடைய திரைப்பயணத்தின் தொடக்கத்திலேயே ஒரு நொடி படத்தைப் பார்த்துவிட்டு, “தம்பி, உன்னுடைய குரலும் நடிப்பும் நன்றாக இருக்கிறது; நீ பெரிய ஆளாக வருவாய்” என்று ஊக்கமளித்தவர் அவர். இந்தப் படத்தையும் பார்த்து விட்டு சில திருத்தங்களைச் சொல்லி எங்களுக்கு வழிகாட்டினார். சிறிய படங்கள் நன்றாக இருந்தால் அவற்றுக்கு ஆதரவு கொடுப்பதில் அவர் எப்போதும் முனைப்பாக இருப்பார். எங்கள் இரண்டு எடிட்டர்களான எம். செல்வா பிரதர், புவனேஷ் பிரதர் இருவரும் சிறப்பாகப் பணியாற்றி படத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் பிரதர், கதையை முதலில் என்னிடம் சொன்னபோது எந்த அளவுக்கு உழைப்பேன் என்று நினைத்தாரோ, அதைவிட அதிகமாக மெனக்கெட்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

படப்பிடிப்பு முடிந்த பிறகு, இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஏ.ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தனசேகரன் சார், சஞ்சய் பிரதர், ராமகிருஷ்ணன் சார் ஆகியோர் பெரிய அளவில் ஆதரவு கொடுத்தார்கள். போஸ்டர் வெளியீட்டிலிருந்து படத்தின் விளம்பரப் பணிகள் வரை தனசேகரன் சார் தொடர்ந்து உதவி செய்திருக்கிறார். அவர்களுக்கு என் நன்றி. என்னுடன் நடித்த எனாக்ஷி கங்குலி மிகவும் அருமையான சக நடிகை. நாங்கள் இருவரும் சில நேரங்களில் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போட்டுக் கொள்வோம்; ஆனால், எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. அவருக்குத் தமிழ் தெரியாத நிலையிலும், வசனங்களை மனப்பாடம் செய்து, அந்தக் கதாபாத்திரத்துக்காகத் தொடர்ந்து பயிற்சி எடுத்து மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது. கஜராஜ் சார் மிகவும் எளிமையானவர். படப்பிடிப்பில் என்னை ஊக்கப்படுத்தி, பல விஷயங்களை அன்புடன் சொல்லிக் கொடுத்தார். கருப்பு நம்பியார் சார் இந்தப் படத்தில் ஒரு காவல் நிலையத்தையே உண்மையான இடம்போல மாற்றிவிட்டார். அவருடைய இயல்பான நடிப்பு நிச்சயமாகப் பேசப்படும். சேரன் ராஜ் சாரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். உறியடி சுருளி அண்ணன் சிறிய பட்ஜெட்டில் நல்ல கதையுடன் உருவாகும் படங்களுக்கு எப்போதும் ஊக்கம் கொடுப்பவர். சரவண சக்தி சார் ஏற்கெனவே இயக்குநராக இருப்பதால், அவருடன் நடித்தபோது ஒரு காட்சியை எப்படி மேம்படுத்தலாம் என்பதை நேரடியாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. சரண் அண்ணனும் எங்கள் படத்தைப் பார்த்துவிட்டு ஊக்கமளித்ததோடு, பத்திரிகைத் துறை சார்பாக எங்களால் முடிந்த அளவுக்கு ஆதரவு தருவதாகச் சொன்னார். இப்படி ஒவ்வொருவரும் இந்தப் படத்துக்கு அளித்த ஆதரவும் பங்களிப்பும் எனக்கு மிகவும் முக்கியமானது.

இறுதியாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு நொடி படத்தின் போது என்னைப் பற்றி நீங்கள் எழுதிய நல்ல விமர்சனங்களும், கொடுத்த ஆதரவும் எனக்குப் பல வாய்ப்புகளைப் பெற்றுத்தந்தன. அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. அதேபோல, பனிவிழும் இரவு படத்தையும் நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை மட்டும் உங்கள் விமர்சனங்களில் வெளிப்படுத்தாமல் இருந்தால், அது படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும். இந்தப் படம் அக்டோபர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குக்கு வந்து படத்தைப் பாருங்கள். இதைச் சிறிய படம் என்று சொன்னாலும், கதைக்குத் தேவையான அனைத்தையும் எங்களால் முடிந்த அளவுக்கு முழுமையாகச் செய்திருக்கிறோம். விளம்பரப் பணிகளிலும் எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்திருக்கிறோம். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பும் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நன்றி, வணக்கம்!

இயக்குநர் செ.ரா. ராஜேஷ் பேசியதாவது, “என்னை ஈன்றெடுத்த என் தாய், தந்தையையும், என்னைக் கலை உலகத்துக்கு அழைத்து வந்த கலைத்தாயையும் வணங்கி, முதலில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்தை உருவாக்குவதற்குப் பல சிரமங்களைச் சந்தித்திருக்கிறோம். ஒரு திரைப்படத்தை எடுப்பதைவிட, அதை வெளியிடுவதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்கள் இன்னும் அதிகம். குறிப்பாக, கடந்த 30 நாட்களாக நாங்கள் அனுபவித்த சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்தச் சூழலில் எனக்குப் பக்கபலமாக இருந்த தயாரிப்பாளர் சதா முருகன் அண்ணனுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் சினிமாவுக்கு ஒரு நடிகனாக வர வேண்டும் என்ற ஆசையில்தான் வந்தேன். இதுவரை சுமார் 15 சிறிய படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் சில வெளியாகியுள்ளன; சில படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன. நான் முதன்முதலில் சதா முருகன் அண்ணனிடம் சொன்ன கதை பகையாறு. அந்தப் படம் தற்போது வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறது. அதற்கிடையில், பனிவிழும் இரவு படத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கதையைப் பற்றி நாங்கள் விவாதித்தபோது, இது எதிர்காலத்தில் நிஜமாகக்கூடிய ஒரு விஷயம் என்பதால், தாமதிக்காமல் படமாக்கலாம் என்று சதா முருகன் அண்ணன் ஊக்கமளித்தார். அவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் படம் முழுவதும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. பட்ஜெட் தொடர்பாகச் சில சிரமங்கள் ஏற்பட்டபோது, சதா முருகன் அண்ணன் எங்களுக்குப் பக்கபலமாக இருந்து மீண்டும் நம்பிக்கையுடன் பயணிக்க உதவினார். இந்தப் படத்தின் கதாநாயகன் அருண் கார்த்திக்கைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு இயக்குநராகச் சொல்கிறேன், அவர் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதைவிட, படப்பிடிப்பின்போதும் அதற்குப் பிறகும் எனக்குக் கொடுத்த ஆதரவு மிகவும் பெரியது. உதவி இயக்குநர்கள் செய்ய வேண்டிய பல வேலைகளைக்கூட அவர் தானாக முன்வந்து செய்திருக்கிறார். “ப்ரோ, நான் பார்த்துக் கொள்கிறேன்; நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்று ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குத் துணையாக இருந்தார். அவருடைய அன்புக்கும் ஒத்துழைப்புக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை வெளியிடுவதற்குப் பெரும் ஆதரவு அளித்த ஏ.ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தனசேகரன் அண்ணன், சஞ்சய் பிரதர், ராமகிருஷ்ணன் சார் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் ஒரு இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்தை அவர்கள் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அதேபோல, கேபிள் சங்கர் சார் படத்தைப் பார்த்துவிட்டு, இது வெற்றி பெறும் என்று நம்பிக்கையளித்ததுடன், என்னென்ன செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டினார். அவருடைய ஆதரவு எனக்கு மிகப்பெரிய பலம்.

என்னுடைய எடிட்டர்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். எம்.எஸ். செல்வா அண்ணன் இந்தப் படத்தின் பணிகளில் முக்கியப் பங்காற்றினார். அவருடைய தனிப்பட்ட பணிச்சூழல் காரணமாகத் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில், என்னுடைய முதல் படத்தின் எடிட்டரான புவனேஷை வைத்து இந்தப் படத்தை நிறைவு செய்தோம். இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் சினிமாவுக்கு வந்தது ஒரு நடிகராக வேண்டும் என்ற ஆசையில் என்றாலும், பின்னர் தயாரிப்பாளராகவும் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 2018ஆம் ஆண்டு, கொரோனா காலத்துக்கு முன்பாக, இரண்டாவது சுதந்திரம் என்ற படத்தின் மூலம் தயாரிப்புப் பயணத்தையும் தொடங்கினேன். சினிமா எனக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. பல ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கிறேன். வாய்ப்புகளைத் தேடிச் சென்றபோது கிடைக்காத அனுபவங்கள், நாமே ஒரு வாய்ப்பை உருவாக்கும்போது பலருக்கு உதவ முடியும் என்ற புரிதலைக் கொடுத்தன. நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் உழைத்தால், தமிழ் சினிமா நிச்சயமாக நம்மை ஒரு நல்ல இடத்துக்குக் கொண்டு செல்லும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் கதாநாயகியாக எனாக்ஷி கங்குலியைத் தேர்வு செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கதையைப் பற்றி விவாதித்தபோது, ஜெயக்குமார் தங்கவேல் அவர்கள் தான் கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட கலைஞர்களைத் தேர்வு செய்தார். ஆரம்பத்தில் எனக்கும் சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால், படப்பிடிப்பில் எனாக்ஷி அனைவருடனும் நன்றாக ஒத்துழைத்து, தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்தார். அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்வுக்கு வந்திருக்கும் சிவசாமி சார் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எனது முந்தைய பணிகளைப் பார்த்து, எனக்கு அடுத்த வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார். அவருடைய தயாரிப்பில் நான் படம் இயக்கும்போது, என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து மிகச் சிறப்பாகச் செய்வேன். சதா முருகன் அண்ணனுடன் எனக்கு இருக்கும் உறவு வெறும் திரைப்படப் பயணத்தோடு முடிந்து விடக்கூடியது அல்ல. அவருடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற அன்பும் நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. அவருக்கு நான் மூன்று படங்களைக் கொடுத்திருக்கிறேன்; இனியும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். பனிவிழும் இரவு படத்தைப் பொறுத்தவரை, இது எங்களுடைய உழைப்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் முயற்சி. படத்தை உருவாக்கியதிலிருந்து வெளியீட்டுக்குக் கொண்டுவரும் வரை எங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவுதான் எங்களைப் போன்ற புதிய இயக்குநர்களுக்கு மிகப்பெரிய ஊக்கம். அனைவருக்கும் நன்றி, வணக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *