இன்றைய தலைமுறையின் காதல் கதை “2கே லவ் ஸ்டோரி”!

இயக்குநர் சுசீந்திரன் முழுக்க புதுமுகங்களை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘2K லவ் ஸ்டோரி’. இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் நாயகன் ஜெகவீரை அறிமுகம் செய்யும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் மக்கள் நாயகன் ராமராஜன் கலந்து கொண்டு ஜெகவீரை அறிமுகப்படுத்தி வாழ்த்தினார்.

அப்போது ராமராஜன் பேசும்போது, “நான் என் படம் தவிர்த்த எந்த ஊடக நிகழ்ச்சிக்கும் இதுவரை சென்றதில்லை. ஆனால் சுசீந்திரனுக்காக இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். இப்போது எல்லோரும் ’2கே கிட்ஸ்’என்ற வார்த்தையை அதிகம் சொல்கிறார்கள். அன்றும், இன்றும், என்றும் காதல் கதைகள் தான் நன்றாக ஓடும். காதல் கதையை சரியாக சொன்னால் எல்லோருமே ஏற்றுக் கொள்வார்கள். சுசீந்திரன் படத்தில் எப்போதுமே ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். திரைப்படத்துறை எப்போதும் நன்றாக இருக்க வேண்டும். அனைவருக்கும் படம் தயாரிக்கும் எண்ணம், தைரியம் வர வேண்டும்” என்றார்.

முன்னதாக வரவேற்று பேசிய இயக்குனர் சுசீந்திரன், “என்னை நானே மீட்டெடுக்க உதவிய திரைப்படம் தான் இந்த 2கே லவ் ஸ்டோரி. என் வாழ்க்கையில் நிறைய மேஜிக் நடந்திருக்கிறது. இப்படத்திலும் எனக்கு நிறைய பாஸிடிவ்வான விஷயங்கள் நடந்தது. இயற்கையும் இந்த படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தது. பிரேமலு மாதிரி நல்ல ஒரு கலகலப்பான பொழுதுபோக்கு படமாக இருக்கும். 2K தலைமுறையின் காதல், நட்பு என அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகி உள்ளது. வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *