ஏழு கடல் ஏழு மலை – விமர்சனம்!

இயக்குனர் ராம், தமிழ் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இயக்கியதோ வெறும் ஆறே படங்கள் தான். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான படங்கள். தனித்துவமான படைப்புகள். தற்போது நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி நடிப்பில் ஒரு காவியத் தன்மையோடு வெளியாகியுள்ள வித்தியாசமான படைப்பு தான் ‘ஏழு கடல் ஏழு மலை’. வணிக சட்டகங்களுக்கு அடங்கிய திரைக்கதையாக அல்லாமல், மனித வாழ்வின் தத்துவங்களையும் பேசும் இப்படம் எப்படி இருக்கிறது? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சுமார் 8,800 ஆண்டுகள் வாழும் சாகாவரம் பெற்ற ஒரு மனிதனான நிவின் பாலி, பல காலகட்டங்களை கடந்து ஏதோ ஒரு தேடலுடன் வாழ்ந்து வருகிறார். மறுபுறம் குடும்பத்திற்காக பிறந்த குழந்தையைக் கூட 8 ஆண்டுகளாக பார்க்காமல் அரபு நாடுகளில் வேலை செய்து விட்டு சொந்த ஊருக்கு மகிழ்ச்சியுடன் வந்து கொண்டிருக்கிறார் சூரி. ஒரு ரயில் பயணத்தில் இருவரும் சந்திக்க, இருவருக்குமான முரண் தொடங்குகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டுடன் வாழும் நிவின் பாலி சிறு எலியிடம் கூட அன்பு காட்டும் மாமனிதன். சுயநலம் மிகுந்த இந்த உலகில் தான், தன் குடும்பம் என வாழ நினைக்கும் சாதாரண மனிதனாக சூரி. இதற்கிடையில் சாகாவரம், சாகாவரம் பெற்றவனின் காதல், அவன் அனுபவிக்கும் வலி, மனிதநேயம், இருவருக்கும் இடையேயான தத்துவார்த்த மோதல் ஆகியவற்றை பேசுவதே மீதிக்கதை.

நாயகன் நிவின் பாலி. கிட்டத்தட்ட 8,800 ஆண்டுகள் வாழ்ந்த சோர்வு, சிலர் வரமாக கருதும் சாகாவரத்தின் வலி, காதலியை பார்க்கும் ஏக்கம் மற்றும் அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தும் மனது என மிகச்சிறந்த ஒரு கதாபாத்திரத்தில் மிக மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆழ்ந்த, அமைதியான உடல்மொழி, முன்னொரு காலங்களில் அவரிடம் இருந்த ஆர்வமும், இன்றைய சூழலில் இருக்கும் வெறுமையும் என அந்த கதாபாத்திரத்தின் பண்புகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

சூரி நாயகனாகம் ஹீரோவாக மாறும் முன்பே நடிக்க ஆரம்பித்த படம். அதனாலேயே கொஞ்சம் பழைய சூரி நம் கண் முன் வந்து போகிறார். சாதாரண மனிதனாக உணர்வுகளை பிரதிபலிக்கிறார். சில இடங்களில் சிரிக்க வைத்தும் சில இடங்களில் சிந்திக்க வைத்து விட்டும் போகிறார். அஞ்சலி இல்லாத ராம் படமா என எண்ணும் அளவுக்கு தங்க மீன்கள் தவிர்த்து எல்லா படங்களிலும் அஞ்சலி முக்கிய அங்கமாகவே இருக்கிறார். இந்த படத்திலும் சில காட்சிகளே வந்தாலும் கதையில் ஒரு ஏஞ்சல் போல வந்து உணர்வுப்பூர்வமாக வலு சேர்க்கிறார்.

ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பசுமை, தனுஷ்கோடியின் வெண்மை, இன்றைய காலகட்டத்தின் வெறுமை என அத்தனையையும் சிறப்பாக திரையில் வடித்திருக்கிறார். ட்ரெயின் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை. யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் ஆன்மாவாக செயல்பட்டிருக்கிறது. ஏழேழு மலை தாண்டி, மறுபடி நீ, ஞாயும் போன்ற பாடல்கள் எல்லாமே நம் உணர்வுகளை பீறிட்டு எழ வைக்கிறது. பின்னணி இசையிலும் மிகச்சிறப்பு. சந்தோஷ் தயாநிதியின் இசை பங்களிப்பும் மிகச்சிறப்பு.

இயக்குநர் ராம் எப்போதும் போல அவரது உலகில் நம்மை ஈர்த்து ஒரு கதையை சொல்லியிருக்கிறார். ஒரு Bed time story போல சொல்லத் துவங்கும் இந்த கதையை நாமும் அப்படியே அணுகினால் இன்னும் கூடுதலாக ரசிக்கலாம். சாகாவரம் என்ற ஐடியாவை அணுகிய விதமும், அதன் மூலம் மனிதநேயத்தை சொல்லிய விதமும், காலம் கடந்த காதலின் மீதான தேடலும் என நம் உணர்வுகளுடன் விளையாடி இருக்கிறார். பெரும்பாலும் நிவின் பாலி, சூரி இடையேயான உரையாடல்களாக நகரும் திரைக்கதையில் கடந்த காலப் பயணங்கள் நமக்கு சிறந்த அனுபவத்தை தருகின்றன. குறிப்பாக 20 ஆண்டுகள் முன்பு தனுஷ்கோடியில் நடக்கும் கதை இன்னும் உணர்வுப் பூர்வமாக அமைந்திருக்கிறது. திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு இருந்தாலும் ஒரு மாறுபட்ட உலகத்தை பார்த்த அனுபவத்தை தருவதில் இந்த படம் வெற்றி பெறுகிறது. வித்தியாசமான அனுபவத்தை தேடும் ரசிகர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *