சமூகத்தில் மிக மிக அச்சுறுத்தும் விஷயமாக இருக்கும் ஒரு விஷயத்தை, பெரும்பாலும் பேசத் தயங்கும் மிக முக்கியமான விஷயத்தை எடுத்து ஒரு விழிப்புணர்வு படமாக, முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘E1’. அதிகம் பரிச்சயமில்லாத நடிகர்களை வைத்து எந்த ஒரு வணிக சமரசமும் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை தயாரித்து, நடித்து இயக்கியிருக்கிறார்கள் சதா நாடார் & மோனிகா செலினா தம்பதி. படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஒரு அமைதியான அடுக்கு மாடிக் குடியிருப்பு, அங்கு கணவர் வேலை விஷயமாக வெளியே சென்றிருக்கும் வேலையில், நாயகி தன் கைக்குழந்தையுடன் தனியாக இருக்கிறார். அதே குடியிருப்பின் வெளியே மூன்று நபர்கள் ஏதோ சதித் திட்டத்துடன் அந்த குடியிருப்புக்குள் செல்ல திட்டமிட்டு, ஒருவன் மட்டும் உள்ளே நுழைகிறான். உள்ளே சென்ற அவன் அந்த குடியிருப்பில் ஒரு கொலையை செய்து அந்த சடலத்துடன் நாயகியின் வீட்டுக்குள் நுழைகிறான். வெளியே செல்ல முடியாமல் அந்த வீட்டில் நாயகியை மிரட்டி அங்கேயே இருக்கிறான். அங்கிருந்து எப்படி வெளியே சென்றான்? எதற்காக அந்த கொலை நடந்தது? பின்னணி என்ன? என்பதை சொல்லும் படமே இந்த E 1.
கதையின் நாயகி மோனிகா செலினா ஒரு கைக்குழந்தைக்கு தாயாக, தனியாக வீட்டில் இருக்கும் ஒரு இளம் பெண்ணாக குறிப்பிடதக்க நடிப்பை தந்திருக்கிறார். பதட்டத்தை மிக இயல்பாக அவரது முகத்தில் காட்டியிருக்கிறார். இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கும் பெண்களின் மனநிலையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சதா நாடார் மிக முக்கிய கதாபாத்தித்தில் இரண்டு பரிமாணங்களில் ஸ்கோர் செய்கிறார். முதல் பாதியில் மிரட்டும் அவர், இரண்டாம் பாதியில் அப்படியே நம்மை எமோஷனல் ஆக்குகிறார். ஃபிளாஷ்பேக் காட்சிகள் தான் படத்தின் உயிர்நாடி. குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் ஷிவ், சுந்தரம், கௌதம், சபரி மணிகண்டன், ஜெயசிவா, நிதீஷ் உள்ளிட்டோரின் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.
எம்.எஸ்.மனோகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் தீவிரத்தன்மைக்கு வலு சேர்த்துள்ளது. பல காட்சிகள் இருட்டில் நடந்தாலும் அதற்கேற்ற ஒளிப்பதிவை செய்து காட்சிகளை தத்ரூபமாகப் பதிவு செய்துள்ளார். ஈ.ஜே.ஜான்சன் பின்னணி இசை திரில்லர் காட்சிகளுக்கு தேவையான பதற்றத்தையும், விறுவிறுப்பையும் கொடுத்துள்ளது.
சதா நாடார் மற்றும் மோனிகா செலினா இருவரும் கதை, திரைக்கதை எழுதி இணைந்து இயக்கியுள்ளனர். ஹாலிவுட் படங்களின் பாணியில் சுமார் 75 நிமிடங்களில் சொல்ல வந்த கதையை மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். கமெர்சியல் அம்சங்கள் எதையும் திணிக்காமல் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள். சமூகத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து சிந்திக்க வைக்கும் ஒரு விழிப்புணர்வாகவும் அமைந்துள்ளது. தொடுதல் குறித்த விழிப்புணர்வு, தெரியாதவரிடம் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களையும் சொல்லியிருக்கிறார். நல்ல ஒரு கருத்தை சொல்லும் ஒரு படத்தை தந்து கவனம் ஈர்த்திருக்கிறார்கள் கப்புள் கிரியேஷன்ஸ் மோனிகா செலினா மற்றும் சதா நாடார்.

