தமிழ் சினிமாவில் கிராமத்து படங்களின் வரவே குறைந்திருக்கும் நேரத்தில் அவ்வப்போது வெளியாகும் ஒரு சில படங்கள் மிகப்பெரும் வெற்றியையும் பெற்று வருகின்றன. அந்த வகையில் கிராமத்து வாழ்க்கை, கிராமத்து மனிதர்களின் உறவுகள், காதல் மற்றும் பஞ்சாயத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘பஞ்சாயத்துப்பட்டி’ திரைப்படம். இயக்குனர் மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படம், மிகப்பெரிய பிரம்மாண்டம் இல்லாமல் எளிமையான கதைக்களத்தில் பயணிக்கிறது. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, பஞ்சாயத்துப்பட்டி கிராமத்தின் நாட்டாமைக்கு பிறக்கும் இரட்டைக் குழந்தைகளான அமாவாசை மற்றும் பௌர்ணமி அதிகாரப் போட்டியில் இருக்கிறார்கள். அதற்கு தீர்வாக அமாவாசை முதல் பவுர்ணமி வரை ஒருவரும், பௌர்ணமி முதல் அமாவாசை வரை இன்னொருவரும் மாறி மாறி பஞ்சாயத்து தலைவர்களாக இருக்கின்றனர். தங்கள் கெத்தை காட்ட ஏதாவது பஞ்சாயத்து மாட்டாதா? என இருவரும் அலைகிறார்கள். இருவருக்கும் இடையேயான அதிகாரப் போட்டி ஒருபுறம் இருக்க, விஷ்ணுவும் கயல்விழியும் காதலித்து திருமணம் செய்து கொள்வதால் புதிய பிரச்சினை உருவாகிறது. காதலுக்கு எதிரான நாட்டாமை, அவர்களது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார். இதனால் நாயகனின் நண்பர்கள் நாட்டாமையிடம் கேட்கப்போக, கில்லி போட்டியில் ஜெயிச்சா உன் நண்மபை ஊருக்குள்ள சேர்த்துக்குறேன் என நாட்டாமை சவால் விடுகிறார். போட்டியில் வென்று நாயகனை ஊருக்குள் அழித்து வந்தார்களா? இந்தப் போட்டியின் முடிவு என்ன? என்பதே மீதிக்கதை.
நாயகன் ஜெய் மற்றும் வினோஸ்ரீ இடையேயான காதல் காட்சிகள் படத்தின் போக்கில் அழகான ஒரு அம்சமாக அமைந்துள்ளன. நாயகனின் நணபர்கள் ஸ்பேனர் பாண்டி, நட்டு போல்ட், அமெரிக்கா ரிட்டர்ன் கண்ணன் ஆகியோர் வரும் காட்சிகள் நகைச்சுவைக்கு துணை நிற்கின்றன. பௌர்ணமி நாட்டாமை கேசவன் மற்றும் அமாவாசை நாட்டாமை பிரபாகரன் ஆகியோரின் நடிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது. கேசவன் சிரிக்க வைக்க, பிரபாகரன் வில்லத்தனத்தில் கவனம் ஈர்க்கிறார்.
இயக்குனர் மோகன்தாஸே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். கிராமத்தின் இயல்பான அழகை பதிவு செய்திருப்பது சிறப்பு. திவாகர் மற்றும் ராஜிவ் இசையும் கதையின் களத்திற்கு ஏற்ற வகையில் எளிமையாக பயணிக்கிறது. மோகன்தாஸ் படத்தொகுப்பு மிக்ப்பெரிய பலம், படத்தின் நீளம் ஆகப்பெரும் ஆறுதல்.
இயக்குனர் மோகன் தாஸ், ஒரு எளிய கதைக்களத்தில் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை அழகாக சொல்லியிருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கிராமத்து இயல்பு தான். கதாபாத்திரங்களின் பேச்சு, தோற்றம், ஊரின் சூழல் என அனைத்திலும் ஒரு இயல்பான தன்மை தெரிகிறது. குறிப்பாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்டாமை கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் இருக்கும் அதிகார போட்டி படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கின்றன.
இருப்பினும், சில இடங்களில் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் தாண்டி பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்க்கும்போது ஒரு எளிமையான கிராமத்து பொழுதுபோக்கு படமாக ‘பஞ்சாயத்துப்பட்டி’ ரசிக்க வைக்கிறது.

