ரூம் பாய் – விமர்சனம்!

ACM சினிமாஸ் நிறுவனம் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, அறிமுக நாயகன் நிகில் நடித்திருக்கும் படம் “ரூம் பாய்”. ரிவெஞ்ச் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை ஜெகன் ராயன் எழுதி இயக்கியிருக்கிறார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகன் நிகில் ஏலகிரியில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் வேலைக்கு சேர முயற்சிக்கிறார். பின் அங்கு ரூம் பாயாக வேலைக்கு சேர்கிறார். அங்கு மர்மமான முறையில் சில கொலைகளும் நடக்கின்றன. இதற்கிடையில் மறுபுறம் இன்பதுரை என்வவர் காணாமல் போக, அந்த வழக்கை காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இன்னொரு புறம் ஒரு கும்பல் சிலரிடம் வீடியோக்களை காட்டி பிளாக் மெயில் செய்து பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுகிறது. ஹோட்டலில் நடக்கும் கொலைகளின் பின்னணி என்ன? பிளாக் மெயில் கும்பல் யார்? இன்பதுரை காணாமல் போன வழக்கு விசாரணை என்ன ஆனது? என இந்த மூன்று கதைகளையும் இணைக்கும் புள்ளி தான் இந்த படத்தின் மீதிக்கதை.

நாயகன் நிகில். தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகர்களுக்கு நீண்ட நாட்களாகவே பஞ்சம் இருந்து வருகிறது. அந்த குறையை போக்கும் விதமாக எண்ட்ரி ஆகியிருக்கிறார் நிகில். இயல்பான, அமைதியான நடிப்பின் மூலம் ஈர்க்கிறார். முக்கிய எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். ஆக்ஷன் காட்சியிலும், காதல் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். அரண்மனை 4 படத்தில் நடித்த ஹர்ஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சில காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சியில் வந்து செல்கிறார். கதையில் அவருக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. இருந்தாலும் அவரது அழகால் நம்மை ரசிக்க வைக்கிறார்.

இமான் அண்ணாச்சி ஒரு சில காட்சிகளே வந்தாலும் கலகலக்க வைக்கிறார். youtube புகழ் காத்து கருப்பு கலை காமெடி காட்சிகள் எல்லாமே ரசிக்க வைக்கின்றன. பிர்லா போஸ், இன்ஸ்டா புகழ் கற்பகம் மற்றும் கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின் என மற்ற நடிகர்களும் அவரவர் பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு குத்துப்பாட்டுக்கு வந்து குதூகலப்படுத்துகிறார்.

சி.பாரதி ராஜன் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. ஏலகிரி பின்னணியை அழகாக படம் பிடித்துள்ளார். அந்த ஹோட்டல் உட்பட அனைத்து லொகேஷன்களும் படத்தில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. வேலன் சகாதேவன் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்.

இயக்குனர் ஜெகன் ராயன். ஒரு ஹோட்டல் பின்னணியில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை தந்திருக்கிறார். முதல் பாதி முழுக்க ஒரு சஸ்பென்ஸொடு கதையை நகர்த்தி கொண்டு சென்று இரண்டாம் பாதியில் பல கேள்விகளுக்கு பலப்பல திருப்பங்களுடன் விடை தந்திருக்கிறார். இரண்டாம் பாதி முழுக்க அடுத்தடுத்த திருப்பங்களுடன் நம்மை கட்டிப்போடுகிறார். அத்தோடு கதையின் மைய எமோஷனும் மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது. படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு வித நிறைவை கொடுக்கிறது அந்த எமோஷன் காட்சிகள். ஒரு ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த இன்வெஸ்டிகேஷன், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படம் நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *