One Man – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான பரிசோதனை முயற்சிகள், பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அப்படி எத்தனையோ முயற்சிகள் செய்யப்பட்டாலும் யாருமே நினைத்துப் பார்க்காத, செய்து பார்க்காத ஒரு முயற்சியை செய்திருக்கிறார் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். ஏற்கனவே வெங்காயம், பயாஸ்கோப் போன்ற படங்களை இயக்கிய அவர் கோடி ரூபாய்க்கும் குறைவான செலவில் சில, பல லட்சங்களில் திரைப்படத்தை தருபவர். அப்படி சங்ககிரி ராஜ்குமார் எழுதி, இயக்கி, அனைத்து கதாபாத்திரங்களிலும் அவரே நடித்து, அனைத்து தொழில்நுட்பங்களையும் கையாண்டு எந்த ஒரு நபரின் உதவியும் இன்றி உருவாக்கியிருக்கும் படம் தான் “ஒன் மேன்” (One Man). உலக சாதனையாக உருவாகியுள்ள இந்த ‘ஒன் மேன்’ திரைப்படம் எப்படி இருக்கு என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, 4 நாண்பர்கள் ஒரு விருது விழாவுக்காக ஒரு டிரைவரை அழைத்துக் கொண்டு காரில் கிளம்புகிறார்கள். வழியில் கார் பிரேக் டவுன் ஆக அதனைத் தொடர்ந்து அவர்கள் ஒரு மர்மமான இடத்துக்கு செல்ல நேர்கிறது, அங்கு ஒரு சயின்ஸ் லேப் இருக்க, அதில் இந்த உலகையே ஆளும் வாய்ப்பு கிடைக்கிறது. அதை அனுபவித்துப் பார்க்க நினைக்கும் அவர்கள் செய்யும் அடுத்தடுத்த விஷயங்களும், அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையை உணரும் தருணங்களுமே மீதிக்கதை.

கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, விஷூவல் எஃபெக்ட்ஸ், மேக் அப், காஸ்ட்யூம், சண்டைப் பயிற்சி, நடனம், டப்பிங் போன்ற கலைகளோடு ஒரு திரைப்படத்திற்குத் தேவையான அத்தனை தொழில்நுட்பப் பணிகளையும் தனி ஒருவராக செய்து முடித்திருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். அத்தனை கதாபாத்திரங்களிலும் அவரே தோற்றங்களை மாற்றிக் கொண்டு நடித்தும் இருக்கிறார். கிராஃபிக்ஸ் காட்சிகளின் உதவியோடு அத்தனையையும் செய்து முடித்திருக்கிறார். அத்தோடு ஒரே காட்சியில் வரும் 500-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களிலும் அவரே வெவ்வேறு ஒப்பனைகளில் நடித்துள்ளார். மேக்கிங்கை பார்க்கும்போது அவற்றுக்கான மெனக்கெடல் தெளிவாக தெரிகிறது.

ஹாலிவுட் திரைப்படம் போல உலகத்தை சுற்றி கதையை நகர்த்தியிருக்கிறார். ஆனாலும் அன்பை மையமாக கொண்டு திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். அமெரிக்காவில் நடக்கும் கார் சேசிங் மற்றும் வானவெளி ஆக்ஷன் காட்சிகள், ட்ரெயினில் நடக்கும் காட்சிகள், காடு மலை என நடக்கும் காட்சிகள் என அத்தனையும் ஒரு பிரமாண்ட படத்திற்கான அனுபவத்தையும், விறுவிறுப்பையும் தருகின்றன.

சில காட்சிகளில் எல்லாம் இதற்கு மற்றவர் உதவியை நாடியிருப்பார் என நினைக்கும்போது அதை கேமரா நகர்வுகளுக்காக அவரே பிரத்யேக மோட்டார்களை பயன்படுத்தியதை மேக்கிங்கில் பார்க்கும்போது அவரது உழைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. பல ஆண்டு தவமாக ஒற்றை மனிதனின் அசாத்திய உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது. ஒரே மனிதர் அனைத்து வேடங்களிலும் நடித்திருப்பதும், சுமாரான நடிப்பும் கொஞ்சம் அயற்சியை தருகிறது. ஆனால் தனி ஒருவராக அனைத்து வேலைகளையும் செய்து ‘ஒன் மேன்’ திரைப்படத்தை உருவாக்கியிருப்பது மிகப்பெரிய பரிசோதனை முயற்சி மட்டுமல்ல ஒரு சாதனை முயற்சி தான். அவரது அசாத்திய திறமையை நல்ல நல்ல நிறுவனங்களிடம் எடுத்துச் சென்று இன்னும் நேர்த்தியான படங்களை தந்தால் அவர் ஒரு நல்ல இயக்குனராகவும் பரிமளிப்பார். தமிழ் சினிமாவின் இந்த உலகளாவிய முயற்சியைக் கண்டிப்பாக திரையரங்குகளில் பார்த்து ரசிகர்கள் ஆதரவு தரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *