அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. பழைய காதலின் காயங்களையும் புதிய காதலின் நம்பிக்கையையும் பேசும் ஒரு மென்மையான முக்கோணக் காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு இசை மூலம் உயிர் கொடுத்திருக்கிறார் ஹேசம் அப்துல் வஹாப். படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கல்லூரி கால காதல் தோல்வியால் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு, தனிமையில் வாழும் சிவில் இன்ஜினியர் அர்ஜுன் தாஸ். அவரின் கல்லூரியில் படித்து பல வருடங்களுக்கு பிறகு அர்ஜூன் தாஸை யதேச்சையாக சந்திக்கிறார் அதிதி சங்கர். அதிதி தன் காதலைச் சொல்ல, அர்ஜூன் தாஸ் அதனை ஏற்கத் தயங்குகிறார். ஒரு வழியாக கொஞ்சம் கொஞ்சமாக அர்ஜூன் தாஸை இயல்பானவராக மாற்றி திருமண நிச்சயதார்த்தம் வரை கொண்டு செல்கிறார் அதிதி. இந்தச் சூழலில் அர்ஜூன் தாஸின் கடந்த காலக் காதலியான சோனா ஒலிக்கல் மீண்டும் அவர் வாழ்க்கைக்குள் வரும்போது, அர்ஜூன் தாஸ் தன் பழைய காயங்களில் இருந்து மீண்டு புதிய காதலை ஏற்றாரா? இல்லையா? அவரின் காதல் பிரிவுக்கு காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
லோகேஷ் படங்களில் மிரட்டலான வில்லனாக பார்த்து பழக்கப்பட்டதாலேயே அர்ஜுன் தாஸ் எவ்வளவோ முயற்சி செய்தும் பல படங்களில் மென்மையானவராக நடித்தாலும் இன்னும் பழைய அர்ஜூன் தாஸ் தான் கண் முன் நிற்கிறார். ஆனால் இந்த படத்தில் அவரது தோற்றம், பாடி லாங்குவேஜால் ஒரு எமோஷனல் லவ்வர் பாயாக ஒரு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அதிதி ஷங்கர் ஒரு துள்ளலான, கலகலப்பான துறுதுறு கதாபாத்திரத்தில் படத்தை தூக்கி நிறுத்துகிறார். முதல் பாதி முழுக்க படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கிப் பிடிப்பதே அதிதி தான். அவ்வளவு க்யூட், அவரது கதாபாத்திரமும் அத்தனை அழகு. எப்படியாவது இவர் காதல் கைகூடிட வேண்டும் என ஏங்க வைக்கிறார். அறிமுக நாயகி சோனா ஒலிக்கல் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் நேர்த்தியாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் மட்டுமே கொஞ்சம் ஒட்டாமல் பயணிக்கிறது, ஆனால் நடிப்பில் குறையில்லை. அனுஷா, டிராவிட செல்வம், தேவதர்ஷினி,சித்ரா லக்ஷ்மணன், ஜென்சன் திவாகர் என மற்ற நடிகர்களும் நல்ல சாய்ஸ்.
இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் இப்படத்தின் மிகப்பெரிய பலம். படம் முழுக்க இசையால் ஆக்கிரமித்திருக்கிறார். பாடல்கள் ஒவ்வொன்றும் ஆன்மாவுக்கு நெருக்கமாக இருக்கிறது. நம்மை திரையரங்கில் அமர வைக்க அதிதி அடுத்து இசையும் மிக முக்கிய காரணம். அரவிந்த் விஸ்வநாதன் அழகான கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு படத்தை மிக மிக அழகாக்குகிறது. நாஷ் படத்தொகுப்பும் முக்கிய பங்காற்றியிருக்கிறது.
இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். ஒரு அழகான காதல் கதையை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தனித்துவமாக எழுதி ஒரு புத்துணர்ச்சியான படத்தை தந்திருக்கிறார். முதல் பாதி முழுக்க ரசிக்கும்படியும், அழகியலோடும் நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் வரும் நீளமான பிளாஷ்பேக் காட்சிகளால் கொஞ்சம் தொய்வடைகிறது. சில காதல் காட்சிகள் ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட பழைய பாணியில் இருப்பதும், ஃபிளாஷ்பேக் கதை நம்மால் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாததும் சிறு பலவீனம். ஆனாலும் எமோஷனல் மற்றும் ஃபீல் குட் தருணங்களால், வன்முறைப் படங்களுக்கு மத்தியில் ஒரு அழகான, புத்துணர்ச்சியான காதல் திரைப்படத்தை பார்த்த உணர்வை தருகிறது. கடந்த காலத்தை மறந்து, வாழ்க்கையின் ‘இரண்டாவது வாய்ப்பை’ எற்றுக் கொண்டு கொண்டாட வேண்டும் என்பதை மென்மையாகச் சொல்லியிருக்கிறது. காதலர்களும், இளைஞர்களும் தியேட்டரில் ரசிக்கக்கூடிய ஒரு ஃபீல்-குட் காதல் கதை இந்த ஒன்ஸ்மோர்.

