பவிஷ், நாக துர்கா நடிப்பில், அறிமுக இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘லவ் ஓ லவ்’. இன்றைய இளைஞர்கள் காதலை சொல்லும் அதிரடியான காதல் ட்ராமா திரைப்படமான இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் பவிஷ் காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டு துபாய் தப்பி செல்கிறார், அவரை கைது செய்யச் சொல்லி மாதர் சங்க தலைவி வனிதா போலீஸ் அதிகாரி செல்வராகவனிடம் வந்து நிற்கிறார். பவிஷை அழைத்து பேசுகிறார் செல்வராகவன். பவிஷ் அவரது காதல் சம்பவங்களை சொல்கிறார். மாத சம்பளத்தில் 2500 மீதம் இருந்தாலே அதை குடும்பத்துக்கு வைத்துக் கொள்ளுங்கள் என சொல்லும் பவிஷ், நாக துர்காவை காதலிக்க ஆரம்பித்த பின் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து அவர் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார். சம்பளத்தை மீறி கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் வரை கடன் வாங்குகிறார். ஒரு கட்டத்தில் நாக துர்காவின் அம்மாவுக்கு இவர்கள் காதல் தெரிய வர, பவிஷ் ஒரு கடன்காரன் என சொல்லி அவமானப்படுத்தி விட்டு போகிறார். இதில் மனமுடைந்து போன பவிஷ் குடும்பமே அவரை விட்டு போகிறது. காதலால் தன் குடும்பம், வாழ்க்கை, சந்தோஷம் எல்லாம் போக, நாக துர்கா மீண்டும் பவிஷை சுற்றி வருகிறார். நான் உன்னை பார்த்துக் கொண்டது போல ஒரு 4 மாதம் என்னை பார்த்துக் கொள்ள முடியுமா? என சவால் விடுகிறார். நாக துர்கா என்ன செய்தார்? அவரது காதல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
நாயகன் பவிஷ். இரண்டாவது படம், ஒவ்வொரு காட்சியிலும் ஆரம்ப கால தனுஷின் மேனரிசங்களை அப்படியே பிரதிபலிக்கிறார். காதல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். திருவிளையாடல் ஆரம்பம் காலத்து தனுஷை பல இடங்களில் நினைவுபடுத்துகிறார். நாயகி நாக துர்கா, பவிஷ்க்கு ஏற்ற நல்ல ஒரு ஜோடி. துடுக்கான கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார்.
செல்வராகவன் போலீஸ் அதிகாரியாக கொஞ்ச நேரமே வந்தாலும் ஸ்கோர் செய்கிறார். வனிதாவுக்கு கச்சிதமான கதாபாத்திரம், மாதர் சங்கத்தின் தலைவியாக புகுந்து விளையாடி இருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் அப்பா கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பு.
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில் காட்சிகள் மிகவும் கலர்ஃபுல்லாக, கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ஃபாக்ஸன் இசையில் பாடல்கள் ஒகே ரகம், வாடி செல்ல குட்டி ரீமிக்ஸ் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் ஓகே ரகம்.
இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன். அறிமுக படத்திலேயே இளம் ரசிகர்களை குறி வைத்து காதல் படத்தை தந்திருக்கிறார். காதலிக்காக செலவு செய்யும் நாயகன் ரோமியோ ஜூலியட் படத்தை நினைவுபடுத்துகிறது. முதல் பாதி முழுக்க ரகளையான காட்சிகளை வைத்து நிரப்பி வைத்திருக்கிறார். இரண்டாம் பாதியும் முழுக்க இப்படி தான் இருக்குமோ என நினைக்கும்போது படத்தின் எமோஷனல் காட்சிகள் வந்து கொஞ்சம் நியாயம் செய்கிறது. கொஞ்சம் முதிர்ச்சியான திரைக்கதையுடன் கையாண்டிருக்கலாம். கொஞ்சம் பழமைவாத காட்சிகள், மேக்கிங்கிலும் மெனக்கெடல் கொஞ்சம் குறைவாக இருப்பது பின்னடைவாக அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் வந்திருக்கும் மற்றுமொரு இந்த ஜென் Z காதல் கதை. ஒரு முறை பார்க்கலாம்.

