கட்டா குஸ்தி 2 – விமர்சனம்!

2022-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. நாயகிக்கு ஹீரோவுக்கு இணையாக அல்லது கொஞ்சம் அதிகமாகவே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் மிகச்சிறந்த ஃபேமிலி எண்டர்டெயினராக மெகா ஹிட் அடித்தது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது அதன் இரண்டாம் பாகம் “கட்டா குஸ்தி 2” வெளியாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக நாயகன் விஷ்ணு விஷாலுக்கும், நாயகி ஐஸ்வர்யா லட்சுமிக்கும் 5,6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. குஸ்தியில் வெற்றி மேல் வெற்றி பெற்று அரசாங்க வேலையில் பணி புரிகிறார் ஐஸ்வர்யா. நாயகன் விஷ்ணு விஷால் ஹவுஸ் ஹஸ்பண்டாக வீட்டையும், குழந்தையையும் பார்த்துக் கொள்கிறார். ஐஸ்வர்யாவை தோற்கடிக்க நினைக்கும் அவரது பயிற்சியாளர் சில சதி வேலைகளில் ஈடுபடுகிறார். அதில் விஷ்ணு விஷாலை அவருக்கே தெரியாமல் சிக்க வைக்கிறார். ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷால் தான் தன்னை விளையாட்டில் தோற்கடிக்க நினைக்கிறார் என எண்ணும் ஐஸ்வர்யா கணவரை பிரிந்து வாழ்கிறார். குழந்தைக்காக இருவரும் சேர்ந்தார்களா? ஐஸ்வர்யா மறுபடியும் விளையாட்டில் தன்னை நிரூபித்தாரா? என்பதை கலகலப்பாக சொல்லும் படமே இந்த கட்டா குஸ்தி 2.

நாயகன் விஷ்ணு விஷால். படிக்காத வெகுளியாக, அப்பாவித்தனமான நடிப்பால் வழக்கம் போல நம்மை சிரிக்க வைக்கிறார், ரசிக்க வைக்கிறார். நாயகி ஐஸ்வர்யா லட்சுமியுடனான காட்சிகளில் எல்லாம் செம்ம கெமிஸ்ட்ரி. குஸ்தி காட்சிகளில் அவர் செய்யும் அலப்பறை ரசிக்க வைக்கிறது. மகளுடனான காட்சிகளில் அவ்வளவு அழகான பாண்டிங். நாயகி ஐஸ்வர்யா லட்சுமி, கண்டிப்பான மனைவியாக, அம்மாவாக, குஸ்தி வீராங்கணையாக அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். அவர் முறைக்கும்போதே அவ்வளவு அழகு. குஸ்தி காட்சிகளில் எல்லாம் அவ்வளவு அர்ப்பணிப்பு.

இவர்களின் மகளாக வரும் குழந்தை நட்சத்திரம் சாரா ஸியானா, செம கியூட். படம் முழுக்க வருபவர் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார். பல காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார். இனி நிறைய படங்களில் எதிர்பார்க்கலாம். கருணாஸ் வரும் காட்சிகள் எல்லாமே அவரது காமெடியால் தியேட்டர் அதிர்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் அவர் மனைவி சம்பந்தப்பட்ட காட்சிகளில் குபீர் சிரிப்பு நிச்சயம். சாரவின் டீச்சராக வரும் மோக்ஷா வரும் காட்சிகள் எல்லாம் காமெடிக்கு உத்திரவாதம். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு கேமியோ ஓரளவு பலம் சேர்க்கிறது. காளி வெங்கட், முனீஷ் காந்த், கருணாகரன், தாரக் பொன்னப்பா, கஜராஜ் என ஒவ்வொரு நடிகரும் படத்துக்கு பெரும் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு ஒரு கமெர்சியல் படத்துக்கு என்ன தேவையோ அதை மிகச் சிறப்பாக தந்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நன்று. சம்பவக்காரி பாடல் மனதில் பதிகிறது. இதை தாண்டி படத்தில் வரும் ஒரு எவர்கிரீன் பாடல் வரும் காட்சி மொத்த தியேட்டரும் தெறிக்கிறது. காட்சி மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருப்பதால் அது மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

இயக்குனர் செல்லா அய்யாவு. கட்டா குஸ்தி முதல் பாகம் ஒவ்வொரு ரசிகருக்கும் ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜாக இருந்தது, அதுவும் இடைவேளை காட்சி செம்ம மாஸ் என்பதாலேயே மிகப்பெரிய ஹிட் அடித்தது. பார்ட் 2 எடுத்தது வெறும் கல்லா கட்டும் முயற்சியோ என நினைத்த நேரத்தில் முதல் பாகத்துக்கு இணையான திரைக்கதையுடன், எதிர்பார்ப்பை எந்த வகையிலும் குறைக்காமல் ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை கலகலப்பாக கொண்டு சென்று நல்ல ஒரு கமெர்சியல் படத்தை கொடுத்து ஜெயித்திருக்கிறார் இயக்குனர். நல்ல நடிகர்கள், குடும்ப ரசிகர்களை கவரும் நகைச்சுவை மற்றும் எமோஷன் காட்சிகள் என நல்ல ஒரு பேக்கேஜ். படத்தின் இடைவேளை, ஒரு பாடல் காட்சி சீன், கோர்ட் சீக்வன்ஸ், கிளைமாக்ஸ் என நிறைய சுவாரஸ்யமான மொமெண்ட்ஸை வைத்து ஒரு பைசா வசூல் எண்டர்டெயினராக ஆக்கியிருக்கிறார்கள். மொத்ததில் குடும்பத்துடன் சென்று ரசித்து விட்டு வரக்கூடிய படம் தான் “கட்டா குஸ்தி 2”.

SK Cinemas – 4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *