தில்ராஜா – திரை விமர்சனம்

இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் சத்யா, ஷெரீன், சம்யுக்தா, வனிதா விஜயகுமார், ஞான சம்பந்தம், இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பாலா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தில்ராஜா. பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்ததா இந்த “தில்ராஜா”? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகன் விஜய் சத்யா தன் மனைவி ஷெரின் மற்றும் மகளுடன் சென்னையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அடிப்படையில் ரஜினி ரசிகரான இவர் செய்வது ஆர்க்கிடெக்ட் வேலை, ஆனால் தனக்கு பிடித்த மெக்கானிக் வேலையையும் தன் ஆசைக்காக செய்து வருகிறார். ஒரு நாள் தன் மகள் பிறந்தநாளுக்காக குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று விட்டு காரில் வீடு திரும்பும்போது எதிர்பாராத ஒரு பிரச்சினையில் அமைச்சர் வெங்கடேஷ் மகன் இறந்து விடுகிறார். அமைச்சரோ, போலீஸோ தன் பக்கம் திரும்பும் முன் குடும்பத்தை காப்பாற்ற அவர் என்ன செய்கிறார்? என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார் என்பதே மீதிக்கதை. இந்த கதையை நான் லீனியர் முறையில் சுவாரஸ்யமாக சொல்ல திரைக்கதை செய்திருக்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.

நாயகன் விஜய் சத்யா, அறிமுகமே மாஸ் ஹீரோ போல ஓபனிங் பாடல், சண்டைக்காட்சி என அதிரடியாக அறிமுகம் ஆகிறார். ஆஜானுபாகுவாக நல்ல கட்டுமஸ்தான உடற்கட்டு அவரது ஆக்ஷன் காட்சிகளுக்கு நம்பகத்தன்மையை கொடுக்கிறது. சட்டையை கழட்டி அவர் போடும் சண்டைக்காட்சி நன்றாகவே இருக்கிறது. தன் குடும்பத்துக்காக எந்த எல்லைக்கும் போவேன் என்பதை தன் கதாபாத்திரத்தின் மூலம் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஷெரீன் நாயகியாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியால் ரசிக்க வைக்கிறார். போலீஸ் அதிகாரியாக சம்யுக்தா வெறுமனே நடந்து கொண்டே இருக்கிறார்.

இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பாலா காமெடிகள் அந்த ளவுக்கு ரசிக்கும்படியாக இல்லை. சில நேரங்களில் கடுப்பேற்றுகிறது. வனிதா விஜயகுமார், ஏ.வெங்கடேஷ் கதாபாத்திரங்கள், நடவடிக்கைகள் எல்லாமே அரதப்பழசாக இருப்பதால் அந்தளவுக்கு கதைக்கு வலு சேர்க்கவில்லை.

இசையமைப்பாளர் அம்ரீஷ் பாடல்கள் ஓரளவுக்கு ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக ஓபனிங் பாடல், அதில் அவரே வந்து நாயகன் விஜய் சத்யா உடன் ஆடி விட்டு போயிருக்கிறார். பின்னணி இசை கொஞ்சம் அதிரடி. சத்தம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. மனோ நாராயணனின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சேஸிங் காட்சிகளில் நல்ல உழைப்பு.

சரத்குமார், விஜய், பிரஷாந்த் என பல முன்னணி நடிகர்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ், இந்த தலைமுறையுடனும் போட்டி போட்டு ஒரு பரபரப்பான ஆக்ஷன் திரில்லரை இயக்கியிருக்கிறார். நாயகன் விஜய் சத்யா நல்ல தேர்வு. அதே போல மற்ற நடிகர்கள் தேர்விலும், மேக்கிங்கிலும் கொஞ்சம் புதுமையை புகுத்தியிருந்தால் அது படத்துக்கு பலமாக அமைந்திருக்கும். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ், செண்டிமெண்ட் என ஒரு கமெர்சியல் பேக்கேஜை கொடுக்க அவர் எடுத்த முயற்சிக்கு பாராட்டுக்கள். அதே நேரம் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் நன்றாகவே வந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *