இன்றைய தமிழ் சினிமா இளம் ஹீரோக்களில் தனது வித்தியாசமான கதைத்தேர்வுகள் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றவர் நடிகர் அசோக் செல்வன். ‘போர்த்தொழில்’ விக்னேஷ் ராஜா கதை எழுத, அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் ஜோடியாக நடித்துள்ள இந்த படம் ஒரு ரொமாண்டிக் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் காதலித்து குடும்பத்தை எதிர்த்து திருமணம் புரிந்த இளம் தம்பதி. சென்னையில் நகர வாழ்க்கையில் ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்யும் இருவருக்கும் அந்த வாழ்க்கையே வெறுப்பை தருகிறது. கல்லூரி படிக்கும்போதில் இருந்தே ப்ரீத்தி முகுந்தனின் கனவான Homestay ஒன்றை அமைத்து வாழ ஆசைப்படுகிறார்கள். அதற்காக வேலையை விட்டு இருக்கும் பணத்தை வைத்து, நகையை விற்று, கடன் வாங்கி மலைப்பகுதியில் ஒரு அழகான வீட்டை வாங்கி அதனைத் தங்கும் விடுதியாக மாற்றுகிறார்கள். அங்கு சென்ற நாளில் இருந்தே அந்தப் பகுதியை சேர்ந்த உள்ளூர் எம்.எல்.ஏ. கதிர் பாலு மற்றும் அவரது ஆட்கள் அந்த வீட்டின் மீது கண் வைக்கின்றனர். டூரிஸம் அனுமதி வாங்க உதவுதாக சொல்லி, பணத்தையும் வாங்கிக் கொண்டு அலைய விடுகிறார்கள். தங்கள் கனவு நிறைவேறாமல் இருக்கும் வருத்தத்துடன், அந்த உள்ளூர் எதிரிகளை சமாளித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். தங்களது கனவு இல்லத்தையும் உயிரையும் காப்பாற்றிக் கொண்டார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் அசோக் செல்வன் சாக்லேட் பாயாக பார்த்து வந்தவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக பார்ப்பதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் தான். ஆக்ஷன் காட்சிகளிலும் பட்டைய கிளப்புகிறார். காதல் காட்சிகளிலும் இளமை துள்ளல். ஒரு இளம் கணவனின் காதல், தவிப்பு, கோபம், இயலாமை, ஆக்ரோஷம் என அத்தனையையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். 70 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் காட்சி முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்றாலும் அதை துணிச்சலோடு செய்ததற்கு பாராட்டுக்கள்.
நாயகி ப்ரீத்தி முகுந்தன். அத்தனை அழகு, இளைஞர்களை கவரும் இளமை துடிப்பு, அத்துடன் புத்திசாலித்தனமான அணுகுமுறை என கதைக்கு தேவையான உணர்வுகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தை விட்டு காதலுக்காக அசோக்குடன் வந்த பின்பும் அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு நிற்கும் பெண்ணாக நம்மை கவர்கிறார்.
நாயகன், நாயகியை அடுத்து படத்தில் மிரட்டும் மும்மூர்த்திகளாக வரும் வில்லன்கள் எம்எல்ஏவாக வரும் கதிர் பாலு, இன்ஸ்பெக்டராக வரும் மகா, வக்கீலாக வரும் சாபுமோன் அப்துல் சமத் படம் முழுக்க நமக்கு ஒரு வித பதட்டத்தையும் பயத்தையும் கூட்டுகிறார்கள். இரண்டாம் பாதி முழுக்க எப்போ எதை செய்வார்கள் என அசோக், பிரீத்தியையும், கூடவே நம்மையும் அந்த பயத்திலேயே வைத்திருக்கிறார்கள். நடிகை ரேவதி ஒரு சின்ன கேமியோவில் வந்து செல்கிறார்.
ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன் தன் ஒளிப்பதிவால் படத்தை மிகவும் கிளாஸாக காட்டியிருக்கிறார். மலைப்பகுதியில் நடக்கும் காட்சிகளில் அழகும், அதே சமயம் பதட்ட உணர்வும் நம்மை உணர வைத்திருக்கிறார். குறுகலான இடங்களில் எல்லாம் ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விட்டிருக்கிறார். கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் எல்லாமே காதலை அழகாக உணர வைக்கிறது. பின்னணி இசையிலும் படத்தின் தன்மையை ஆழமான உணர வைக்கிறார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் சண்டைக் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்.
விக்னேஷ் ராஜா எழுதிய கதையை இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் மிக அழகான ஒரு திரைக்கதையுடன் ஒரு நல்ல காதல் கலந்த ஆக்ஷன் த்ரில்லராக மாற்றியிருக்கிறார். ஆரம்ப காட்சிகள் எல்லாம் காதலில் திளைக்க, மலைப்பகுதிக்கு சென்ற பின் பதட்டத்தில் தள்ளுகிறது. அசோக் செல்வன், பிரீத்தி கெமிஸ்ட்ரி படத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறது. காதல் ஜோடி, மூன்று வில்லன்கள் என ஐந்து முக்கிய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு நல்ல ஒரு திரில்லர் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் கார்த்திகேயன். மொத்தத்தில் ‘அன்பில் அவன்’ நிச்சயமாக ஒருமுறை பார்த்து ரசிக்கக் கூடிய நல்ல ஒரு திரை அனுபவம்.

