ஆல் பாஸ் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் மனித உறவுகளின் ஆழத்தை சொல்லும் படங்கள் பெரும்பாலும் வருவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே வெளிவருகின்றன. அப்படி நடுத்தர வர்க்க மக்களின் யதார்த்த வாழ்வியலை பேசும் ஒரு குடும்ப திரைப்படமாக, கொஞ்சம் கிரைம் திரில்லர் அம்சங்களை தூவி உருவாகியுள்ள திரைப்படம் “ஆல் பாஸ்”. இயக்குநர் மைதீன் இயக்கத்தில் வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஜனனி, ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த வாரம் வெளியாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, வடசென்னையில் உள்ள ஒரு காலனியில் ஜெயபிரகாஷ், சுப்ரமணியம் சிவா, பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோரின் மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மூன்று வீட்டில் வசித்தாலும் கிட்டத்தட்ட ஒரு கூட்டுக் குடும்பம் போல தான் வாழ்கிறார்கள். மூத்தவரான ஜெயப்பிரகாஷ் பேச்சுக்கு மூன்று குடும்பங்களும் கட்டுப்பட்டு நடக்கின்றன. எந்த முடிவாக இருந்தாலும் அண்ணனை கேட்டு தான் முடிவெடுக்கிறார்கள். உண்மையான சொந்த பந்தங்களை விட நெருக்கமாக வாழ்ந்து வரும் குடும்பத்தினருக்கு அரசியலுக்காக எம்எல்ஏ வைத்திருக்கும் 5 கோடி ரூபாய் கிடைக்கிறது. ஜெயபிரகாஷ் பேச்சை தட்டாத அந்த மூன்று குடும்பங்களும் அந்த பணம் வந்த பின் மனம் மாறுகிறார்கள், சுயநலமாக சிந்திக்கிறார்கள். ஒரே குடும்பமாக இருந்த அவர்கள் உறவிலும் விரிசல் விழுந்து, பிரிந்து விடுகிறார்கள். இதற்கிடையில் பணத்தை இழந்த எம்எல்ஏ அதை தேடி வர, அந்தச் சூழலை அந்த மூன்று குடும்பங்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? குடும்பங்கள் ஒன்று சேர்ந்தனவா? துஷ்யந்த், ஜனனி காதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கதையின் இளம்ஜோடியாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் & ஜனனி குணசீலன். ஆனால் படத்தின் கதை இந்த மூன்று குடும்பங்களை சுற்றித் தான் பெரும்பாலும் நகர்கிறது. எனினும் படத்தின் இரண்டு முக்கியமான காட்சிகளில் துஷ்யந்த் ஸ்கோர் செய்கிறார். ஜனனி ரொம்பவே கியூட்டான ஒரு கதாபாத்திரத்தில் வந்து போகிறார்.

கதையின் நாயகனாக படம் முழுக்க தெரிபவர் ஜெயப்பிரகாஷ் தான். அவரது யதார்த்தமான குணச்சித்திர நடிப்பால் நம்மை கவர்கிறார். நம் வாழ்க்கையே மாறி விடும் என்ற சூழலிலும் நேர்மை தவறாத, உழைப்பை மட்டுமே நம்புகிற மனிதராக மனதில் நிற்கிறார். அவரது மனைவியாக செந்தி குமாரி, அனுபவமிக்க நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

சுப்பிரமணியம் சிவா, பிரசன்னா பாலச்சந்திரன் இருவரும் ஜெயபிரகாஷின் தம்பிகள் போன்ற கதாபாத்திரம். ஆரம்ப காட்சிகளில் நெகிழ வைப்பதும், இரண்டாம் பாதியில் அவர்கள் மோதிக் கொள்ளும் காட்சிகளில் ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள். வினோதினியும் நாயகியின் அம்மாவாக, யதார்த்த குடும்பத் தலைவியாக வாழ்ந்திருக்கிறார். சரத் லோகிஷ்தவா, சத்யா, அருவி மதன், சஞ்சய், கோகுல், கதிர், மோகனா, ரோஷன் பஷீர், மூர்த்தி மற்றும் மற்ற நடிகர்களுமே படத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் யதார்த்த உணர்வை அப்படியே நமக்கும் கடத்துகின்றன. மெலடி பாடல் இதம், ஆல் பாஸ் பாடல் துள்ளல். மென்மையான மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு அவரின் பின்னணி இசை மிகப்பெரிய பலம்.

வடசென்னையின் குறுகிய தெருக்களையும், காலனியின் யதார்த்த வாழ்வியலையும், அந்த நடுத்தரக் குடும்பங்களின் வீடுகளையும் அவ்வளவு இயல்பாக நமக்கு காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் தில் ராஜூ. 2 மணி நேரத்தில் படத்துக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பாஸ்கர்.

இயக்குநர் மைதீன், உழைக்காமல் கிடைக்கும் பணத்தால் எந்த மகிழ்ச்சியும் கிடைக்கப் போவதில்லை, பணத்தை விட உறவுகள் மேன்மையானது என்பதையும் மிக அழகான ஒரு திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் நடுத்தர குடும்பங்கள் vs அரசியல்வாதி வில்லன் என்ற கோணத்தில் கதையின் இருக்கும் என நினைத்தால் முற்றிலும் மாறாக வேறு ஒரு ரூட்டில் சென்று நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவில் இல்லாமல், கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தையும், மனிதநேயம் எங்குமே குறையக் கூடாது என்ற தத்துவத்தையும் மிக எளிய காட்சிகளுடன் சொல்லியுள்ளார். இயல்பான வசனங்கள், யதார்த்த வாழ்வியல், எளிய மனிதர்கள் என அத்தனையையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். மனித உறவுகளின் மேன்மையை சொல்லும் இந்த ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் அமர்ந்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *