தமிழ் சினிமாவில் வாரிசுகள் நடிக்க வருவதும், சிலர் வெற்றி பெற்று உச்சம் பெறுவதும், பலர் ஒரு நல்ல வெற்றி கிடைக்காதா? என ஏங்குவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் “ஃபீனிக்ஸ்”. சண்டைப்பயிற்சியாளர் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். படம் எப்படி இருக்கு? சூர்யா சேதுபதி நாயகனாக வெற்றியை சுவைத்தாரா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, படத்தின் ஆரம்ப காட்சியிலேயே சூர்யா சேதுபதி MLA சம்பத் ராமை நடுரோட்டில் மக்கள் முன்பு 36 இடங்களில் வெட்டி கொலை செய்து விட்டார் என்ற குற்றத்துக்காக சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கிறார்கள். அங்கு இருக்கும்போதே அவரை கொல்ல அங்கிருக்கும் சிலரை ஏவி விட அவர்களை அடித்துப் நொறுக்கி விடுகிறார் சூர்யா. பின் வட மாநிலத்தில் இருந்து கொலை செய்யும் ஒரு கும்பலை அனுப்பி விட அவர்களையும் அடித்து நொறுக்குகிறார். அவரை ஏன் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்? MLA-வை கொலை செய்யும் அளவுக்கு சூர்யாவுக்கு என்ன நோக்கம்? இறுதியில் அவர்களிடம் இருந்து அந்த பிரச்சினையை எப்படி முடித்தார் என்பதே மீதிக்கதை.
சூர்யா சேதுபதி, ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதியுடம் படம் முழுக்க வரும் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். கொஞ்சம் கொழுகொழுவென்று இருந்த சூர்யா தற்போது கடும் உடற்பயிற்சிக்கு பின் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார். முதல் படத்திலேயே ஆக்ஷனுக்கு பஞ்சம் இல்லாத ஒரு படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆக்ஷனிலும் பட்டைய கிளப்புகிறார். மசாலா ஹீரோவாக என்ட்ரி ஆகும் முதல் பட ஹீரோக்களுக்கு மத்தியில் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார். அதற்கேற்ப படம் முழுக்க கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார். அதிகம் பேசாமல் ஆக்ஷனில் மட்டுமே ஸ்கோர் செய்கிறார். ஒரு பாடல் காட்சியிலும் நடனம் ஆடி கலக்கியிருக்கிறார்.
வரலக்ஷ்மி வில்லத்தனமான ஒரு கதாபாத்திரத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மிரட்டுகிறார். திலீபன், சம்பத் ராம், தேவ தர்ஷினி, முத்துக்குமார், அபி நக்ஷத்ரா, ஹரிஷ் உத்தமன், அஜய் கோஷ், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், காக்கா முட்டை விக்னேஷ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு வெற்றிமாறன் படங்களை பார்ப்பதை போன்ற ஒரு உணர்வை தருகிறது. சிறைக் காட்சிகள், வடசென்னை காட்சிகள், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றை காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. சாம் சி.எஸ் இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது.
இந்திய அளவில் பல பிரமாண்ட படங்களுக்கு சண்டைக் காட்சிகளை அமைத்த அனல் அரசு இயக்குனராக மாறியிருக்கிறார். எப்படி எடுப்பாரோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அதை தன்னுடைய திரைக்கதை மற்றும் மேக்கிங் மூலம் உடைத்து எறிந்திருக்கிறார். MMA சாம்பியன்ஷிப் போட்டியை காட்டிய விதமும் படத்தின் ஒரு முக்கிய சிறப்பம்சம். மற்ற சண்டைக் காட்சிகளை எடுத்த விதம் படத்தின் பெரும்பலம். ஒரே படத்தில் ஆக்ஷன், ஸ்போர்ட்ஸ், எமோஷன் என அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து நல்ல ஒரு கமெர்சியல் சினிமாவை கொடுத்திருக்கிறார். சூர்யா சேதுபதிக்கு நல்ல ஒரு சிறப்பான எண்ட்ரியை தந்திருக்கிறது இந்த “ஃபீனிக்ஸ்”.

