தாய் நிலம் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் ஈழ மக்களின் வாழ்வியலை பேசும் படைப்புகளுக்கு எப்போதும் ஒரு தனித்துவமான இடமுண்டு. அந்த வரிசையில் போர் காலகட்டத்திலும், அதற்கு பின்னான காலத்திலும் சொந்த மண்ணை விட்டுப் பெயர்ந்து வாழும் மக்களின் வலி நிறைந்த போராட்டங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள உணர்வுப்பூர்வமான திரைப்படம் ‘தாய் நிலம்’. படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, இலங்கை ஈழப்போர் சமயத்தில் தாயை இழந்த சிறுமி நேஹாவுடன் எப்படியாவது உயிரை காப்பாற்றிக் கொள்ள படகில் தப்பித்து வருகிறார் தந்தை அமர் ராமச்சந்திரன். எல்லாவற்றையும் இழந்து தமிழகத்துக்குள் அகதிகளாக வரும் தந்தையும் மகளும் அகதி முகாமுக்கு செல்லாமல் தங்களுக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். பெரிதாக மக்கள் கூட்டம் இல்லாத ஒரு ஊரில் தெருவோரத்தில் பஸ் ஸ்டாப்பில் தன் சிறு வயது மகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறார். பக்கத்தில் இருக்கும் பெட்டிக் கடைக்காரர் பாலா சிங் அவரால் முடிந்த உதவிகளை செய்கிறார். இலங்கை தமிழர் என்பதால் வீடு கிடைப்பதிலும் சிக்கல் வர, ரோட்டோரத்திலேயே வசிக்கும் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? மகளை பாதுகாப்பாக வளர்த்தாரா? வந்த இடத்தில் அவர்களுக்கு வாழ்க்கை அமைந்ததா? என்பதை மிக மிக உணர்வுப்பூர்வமாக சொல்வதே மீதிக்கதை.

பெரும்பாலும் அறிமுகம் இல்லாத நடிகர்களே திரையில் தோன்றினாலும் அந்த உணர்வே இல்லாதவாறு நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். மறைந்த நடிகர் பாலா சிங் இந்த படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். அவரது அனுபவமிக்க நடிப்பு பேருதவி புரிந்திருக்கிறது. கதையின் நாயகனாக வரும் அமர், அவரது மகள் நேஹா அமர் இருவருமே மிகச்சிறந்த நடிப்பை தந்திருக்கிறார்கள். எந்த சூழலிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என சொல்லி வளர்க்கும் அப்பாவாக, தான் பட்டினி கிடந்தாவது மகளுக்கு ஆசைப்பட்ட பிரியாணி வாங்கிக் கொடுக்கும் அப்பாவாக, எந்த சூழலிலும் அழக்கூடாது வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என சொல்லி வளர்க்கும் அப்பாவாக மனதில் நிற்கிறார்.

மறுபுறம் எந்த ஆதரவும் இல்லாமல் நாடு விட்டு வந்து வாழ்ந்தாலும் அப்பாவின் மீது உயிரையே வைத்திருக்கும் மகளாக, மற்ற சிறுவர்களை பார்க்கும்போது படிப்பின் மீது ஏக்கம் கொள்வது, ரோட்டோரத்தில் வசித்தாலும் பள்ளிக்கு தானே எழுந்து ரெடியாகி செல்வது என நம் மனதில் ஆழமாக பதிகிறார். நிமிஷா நம்பியார், தீபக் பிரபாகரன் என மற்ற நடிகர்களும் யதார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார்கள்.

சில நிமிடங்கள் வரும் ஈழத்து காட்சிகளையும், படம் முழுக்க வரும் அந்த தமிழக கிராமத்தையும் அவ்வளவு இயல்பாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசாத் பிரணவம். காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப Color grading-ம் மிகச்சிறப்பு. இப்படத்தின் உயிர்நாடியாக அமைந்திருக்கிறது அப்பச்சனின் இசை. இதமான, நம்பிக்கையூட்டும் இசை, உணர்வுப்பூர்வமான பின்னணி இசை என அந்த சோகமும் கதையின் ஆழத்திற்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கின்றன.

இயக்குநர் அபிலாஷ் தேவ் இப்படி ஒரு மனதை விட்டு அகலாத ஒரு கதையை எடுத்து நம்மையும் கலங்க வைக்கிறார். படம் முழுக்க இவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விடாதா என நம்மையும் ஏங்க வைக்கிறார். போர், அரசியல் போன்ற கோணத்தில் அணுகாமல், மனிதாபிமானம் மற்றும் சொந்த மண் மீதான ஏக்கம் என்ற புள்ளியில் மிக நேர்மையாக இந்த படத்தை கையாண்டுள்ளார். பார்வையாளர்களின் மனதைத் தொடும் வகையில் தான் மொத்த படமும் நகர்கிறது. அகதிகளின் முகங்களில் தெரியும் இயலாமையும், ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விடாத என ஒவ்வொரு நாளும் வலியுடன் நகரும் வாழ்க்கை நம் நெஞ்சை நெகிழச் செய்கிறது. பொழுதுபோக்கு படங்களுக்கு மத்தியில் இந்த மாதிரியான ஈழத் தமிழர் வாழ்வியலை பற்றி சிந்திக்க வைக்கும் தரமான படைப்பாக பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் அபிலாஷ். நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் இந்த தாய்நிலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *