Don’t Trouble The Trouble – விமர்சனம்!

இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி present செய்ய, எஸ்.எஸ்.கார்த்திகேயா மற்றும் ஆர்க்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கத்தில் வெளியாகியுள்ள ஃபேன்டஸி காமெடி திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble). ஃபகத் பாசில் நாயகனாக நடிக்க, சாரா பலேகர் என்ற குழந்தை நட்சத்திரம் நடித்துள்ள இப்படம் குழந்தைகளை கவரும் அம்சங்களோடு வெளியாகியிருக்கிறது. இந்த படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

படத்தின் கதைப்படி, ஹைதராபாத் நகரின் ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவராக இருக்கும் ஃஃபகத் பாசில், எப்படியாவது எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருக்கிறார். வாங்கிய கடனுக்காக உள்ளூர் தாதாக்களிடம் சிக்கித் தவிக்கிறார். சிறுவர் சிறுமிகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிடுகிறார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக சாரா பலேகர் என்ற சிறுமியை பார்க்க, அவரை கடத்தி பணம் பறிக்க முயல்கிறார். சாதாரண குழந்தை போலத் தோற்றமளிக்கும் அந்தச் சிறுமிக்கு சில அசாதாரண சக்திகள் இருப்பதையும் ஃபகத் தெரிந்து கொள்கிறார். அந்தச் சிறுமியின் சக்தியை வைத்து பணம் பண்ணலாம் எனவும் நினைக்கிறார். ஆனால் இதற்கிடையில் அந்த சிறுமி தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை நினைத்து குற்ற உணர்வுக்கும் ஆளாகிறார். இறுதியில் அந்த சிறுமி யார்? அவருக்கு ஏன் சக்தி இருக்கிறது? இருவரும் இணைந்து செல்லும் பயணம் எப்படி இருக்கிறது? என்பதை காமெடி, எமோஷன் கலந்து குழந்தைகள் ரசிக்கும் வகையில் சொல்லியிருப்பதே மீதிக்கதை.

ஃபகத் பாசில் சாதாரணமாகவே நடிப்பு அரக்கன். இந்த படத்தில் காமெடி மற்றும் எமோஷனில் கலக்கி இருக்கிறார். அதே நேரம் சுயநலத்துடன் செய்யும் சில காரியங்கள் கோபத்தை ஏற்படுத்துகின்றன. சிறுமியோடு இணைந்து வரும் அத்தனை காட்சிகளுமே ரசிக்க வைக்கின்றன. சாரா பலேகர் என்ற குழந்தை நட்சத்திரம் இந்த படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். கியூட்டான நடிப்பாலும், ஃபகத் மீது முழு நம்பிக்கை வைக்கும் அப்பாவித்தனமான காட்சிகளிலும், கோபப்படும் காட்சிகளிலும் என ஃபகத் பாசிலுகு இணையாக படம் முழுக்க தன் இருப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சௌரப் சச்தேவா, மகேஷ் மஞ்ரேக்கர், சுப்பாராஜு, வெங்கடேஷ் காகமானு, திவ்யா பிள்ளை என மற்ற நடிகர்களும் அவரவர் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

பிராட் பிரான்சிஸின் (Brad Francis) ஒளிப்பதிவு ஹைதராபாத் நகரை மிக அழகாக, கலர்ஃபுல்லாக, ரிச்சாக காட்டியிருக்கிறார். மேஜிக் காட்சிகளில் வரும் விஎஃப்எக்ஸ் அருமை. கால பைரவாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை படத்தின் ஃபேண்டஸிக்கு ஏற்றாற்போல துள்ளலாகவும் உற்சாகமாகவும் அமைந்துள்ளது. படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி, ஒரு மாயாஜாலம் கலந்த ஃபேண்டஸி படத்தை குழந்தைகளை மையப்படுத்தி எடுத்திருக்கிறார். ஆனால் அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் இந்த படத்தை தந்திருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் மெதுவாக ஆரம்பித்தாலும் பேபி சாரா பலேகர் கதைக்குள் வந்தவுடன் படம் வேகமெடுக்கிறது. ஒரு ஜாலியான ரோலர் கோஸ்டர் பயணமாக அமைந்திருக்கிறது. காமெடி எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறதோ அது போலவே எமோஷனும் படத்தின் அதீத பலம். கடைசி 30 நிமிடங்களில் நம் மனதை தொடுகிறார்கள். மொத்தத்தில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் சென்று ரசிக்க ஏற்ற ஃபேன்டஸி எண்டர்டெய்னர் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *