நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, ஒரு பக்க கதை போன்ற தரமான, தனித்துவமான படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்த இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் ‘பத்தா’. கேங்க்ஸ்டர் கதை பின்னணியில் மென்மையான, மனதை வருடும் மனிதநேயத்தை வலியுறுத்தும் கதையையும் சொல்ல முடியும் என்பதை நிரூபிக்க இயக்குனர் எடுத்திருக்கும் படமாகவே இதை பார்க்க முடிகிறது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, 1986-ல் சென்னையில் ஒரு பகுதியில் வசிக்கும் நாயகன் விஜய் சேதுபதி (பத்தா) ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். கொடூரமான அவரது குணாதிசயத்தால் ஊரே அவரை பார்த்தால் பயந்து தள்ளி நிற்கும். தன்னுடைய கோபத்தால் ஊரில் பெரும்பாலானோரை அடித்து துவைத்து அவரகளின் பகைக்கும் ஆளாகிறார். அந்த ஊர் பள்ளிக்குள் ஒரு கோடை விடுமுறையின்போது எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்கிறார். பள்ளியின் கழிவறையில் அந்த ஊரை சேர்ந்த சிறுவன் விஜய் சேதுபதியை தற்செயலாக உள்ளே வைத்து பூட்டி விடுகிறான். பத்தாவை பார்த்தாலே நடுங்கும் அந்த சிறுவன் கதவை திறந்தால் தன்னையும் அவர் ஏதாவது செய்து விடுவார் என பயந்து கதவை திறக்காமல் ஓடி விடுகிறான். விஜய் சேதுபதி காணாமல் போக, அந்த ஊரே அவரை தேட, விஜய் சேதுபதி எங்கிருக்கிறார் என்பதை தெரிந்த ஒரே நபரான அந்த சிறுவன் என்ன செய்தான்? விஜய் சேதுபதி வெளியே வந்தாரா? அவனுக்கும் சிறுவனுக்கும் இடையே உருவாகும் பந்தம் என்ன? சிறுவன் செயலால் விஜய் சேதுபதியிடம் ஏற்படும் மாற்றம்? என பல விஷயங்களை மிக யதார்த்தமாக அழகாக, ஆழமாக பேசுகிறது இந்த பத்தா.
பத்தா என்கிற பக்தவச்சலமாக நாயகன் விஜய் சேதுபதி. வழக்கம் போல அவரது யதார்த்த நடிப்பால் நம்மை ரசிக்க வைக்கிறார். பல காட்சிகளில் அவரின் ரவுசு பட்டைய கிளப்புகிறது. ஒரு பந்தாவான டானாக கெத்தாக சுற்றும்போதும், கழிவறையில் மாட்டிக் கொண்ட பின் இயலாமையும் கோபமும் கலந்த சராசரி மனிதனாகவும், தான் எவ்வளவு கேவலமான மனிதனாக இருந்திருக்கிறேன் என உணரும்போதும் என பல்வேறு உணர்வுகளை மிக அழகாக நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி லிஜோமோல் ஜோஸ் நடிப்பு ராட்சசி, எந்த வேடம் கொடுத்தாலும் இயல்பான, அமைதியான நடிப்பால் வலு சேர்ப்பவர் இந்த படத்திலும் ஒரு effortless performance-ஐ தந்திருக்கிறார்.
படத்தின் நிஜ கதாநாயகன் குழந்தை நட்சத்திம் சாய் பிருத்விராஜ் தான் என விஜய் சேதுபதியே சொன்னது 100% உண்மை. படம் முழுக்க சாய் ஒவ்வொரு ரியாக்ஷனும், முகத்தில் காட்டும் பதட்டமும், கிளைமாக்ஸ் காட்சியில் காட்டும் எமோஷனும் என தேசிய விருது வாங்கக் கூடிய ஒரு அற்புதமான நடிப்பு. சாய்க்கு இன்னும் பெரிய உயரங்கள் காத்திருக்கு. அஜய் கோஷ், அர்ஜுன் சிதம்பரம், சாந்தி பாலகிருஷ்ணன், சஹஸ்ரா, ஹரி என மற்ற நடிகர்கள் அனைவருமே மிகச்சிறந்த நடிப்பை தந்து படத்தை இன்னும் சிறப்பாக்குகிறார்கள்.
1986 காலகட்டத்தில் நடக்கும் இந்த கதையை ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர் என மூவரும் உழைப்பைக் கொட்டி மிக யதார்த்தமாக நம் கண் முன் நிறுத்துகிறார்கள். அந்த கால தெருக்கள், வாகனங்கள், மனிதர்களின் ஆடை மற்றும் சிகை அலங்காரம் என ஒவ்வொன்றிலும் அந்த யதார்த்தம் தெரிகிறது. சாய் அபயங்கர் வயதுக்கு மீறிய ஒரு படம். ஆனாலும் காட்சிகளுக்குத் தகுந்தாற்போல சிறப்பான இசையை வழங்கியுள்ளார். பின்னணி இசையிலும் அவரது treatment படத்தின் தரத்தை இன்னும் ஒரு படி உயர்த்துகிறது. படத்தொகுப்பாளரின் பங்கும் அளப்பரியது. குறிப்பாக கழிவறை காட்சிகளை தேவையான நீளத்தில் கொடுத்து சலிப்பு தட்டாதவாறு பார்த்துக் கொண்டுள்ளார்.
இயக்குநர் பாலாஜி தரணீதரன். வணிகப் படங்கள் கொடுத்து ரேஸில் முந்திக் கொண்டு ஓட வேண்டும் என நினைக்கும் இன்றைய திரையுலகில் சினிமாவை ஒரு கலையாக அணுகி, தான் சொல்ல நினைக்கும் கருத்துக்களை சொல்லும் ஒரு அற்புதமான இயக்குனர். முந்தைய படங்களை பார்த்தாலே எல்லோருக்கும் புரியும். இந்த முறை வழக்கமான கேங்ஸ்டர் படங்களின் தன்மையிலிருந்து முற்றிலும் விலகி, ஊருக்குள் பகட்டாக திரியும் ஒருவன், ஒரு சாதாரண மனிதனாக மாறும் அகச்சிக்கல்களை மிக நேர்த்தியாகவும் நகைச்சுவையுடனும் கையாண்டுள்ளார். அதைத் தாண்டி மனிதநேயத்தையும், உறவுகளின் முக்கியத்துவத்தையும் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் ஆர்ப்பாட்டமில்லாமல் இயல்பான காட்சிகள் மூலமே சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மனது நிறையும் பல காட்சிகள் படத்தில் ஆரம்பம் முதலே வந்து கொண்டே இருக்கிறது. பல வசனங்கள் நம் மனதை தொடுகின்றன. மொத்தத்தில் குடும்பத்துடன் திரையரங்க்குக்கு சென்று சிரித்து ரசித்து விட்டு, மனநிறைவுடன் வெளியே வரக்கூடிய ஒரு தரமான படைப்பு இந்த பத்தா.
SK CINEMAS Rating: 4/5

