‘பிரேமலு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில், பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. நிவின் பாலி, மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரங்களில் ஜோடியாக நடித்துள்ள இந்த திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. ஒரு அழகான ரொமான்டிக் ஃபீல்-குட் திரைப்படமான இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கேரளாவின் அங்கமாலி பகுதியில் வசிக்கும் நாயகன் நிவின் பாலி, 30-களின் ஆரம்பத்தில் இருக்கும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் கேட்டரிங் தொழில் செய்து கொண்டு மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகிறார். குடும்ப சூழல் காரணமாக சொந்த ஊரை விட்டு நிவின் பாலியின் பக்கத்து வீட்டில் வந்து குடியேறுகிறார்கள் மமிதா பைஜூவின் குடும்பம். நிவின் பாலியை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக காதல் வயப்படுகிறார் மமிதா பைஜூ. வயது வித்தியாசத்தால் முதலில் அதை ஏற்க மறுக்கும் நிவின் பாலியும் மனதளவில் காதலில் விழுகிறார். இருவரும் காதலிக்க, அது குடும்பத்துக்கு தெரிய வர அதன் பின் என்ன ஆனது? காதல் கை கூடியதா? இருவரும் சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் நிவின் பாலி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வருடும் இதமான மென்மையான படங்களில் நடித்து வருகிறார். சர்வம் மாயா படத்தில் எப்படி ரசிக்க வைத்தாரோ அதே போல இந்த படத்திலும் படம் முழுக்க சின்ன சின்ன மேனரிசங்கள் மூலம், அப்பாவித்தனமான முகபாவங்களாலும், வெட்கப்படும் காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். மமிதா பைஜூ வழக்கம் போல மிகச்சிறப்பான நடிப்பால் நம் மனதில் குடிகொள்கிறார். நிவின் பாலியுடனான காதல் காட்சிகளில் அவ்வளவு யதார்த்தம். இருவருமே இருவருக்குள்ளும் இருக்கும் வயது வித்தியாசக் காதலை மிகவும் நேர்த்தியாகவும், எங்கும் முகம் சுளிக்க வைக்காத வகையிலும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். மமிதா துடிப்பான நடிப்பால் ஈர்க்கிறார்.
சங்கீத் பிரதாப் நிவின் பாலியின் தம்பியாக படம் முழுக்க அலப்பறை செய்கிறார். அவர் குறும்படம் எடுக்கும் காட்சிகளும், காதல் காட்சிகளும் எல்லாமே நம்மை ரசிக்க வைக்கிறது. வினய் ஃபோர்ட், ஸ்ரீந்தா, சுரேஷ் கிருஷ்ணா, ரோஷன் உட்பட மற்ற எல்லா நடிகர்களுமே மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
விஷ்ணு விஜய்யின் பின்னணி இசை படத்துக்கு மேலும் அழகும், ஆன்மாவும் சேர்க்கும் வகையில் மிக அழகாக அமைந்திருக்கிறது. பாடல்களும் கதைக்கு பெரும் பலம் சேர்த்துள்ளன. அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு படத்தை கூடுதல் அழகாக்கி இருக்கிறது.
மலையாளத்தில் இப்படிப்பட்ட ஃபீல்குட் திரைப்படங்கள் அடிக்கடி வருவது இயல்பான ஒன்று தான். ஆனாலும் அதில் ஒரு மாஸ்டர் என நிரூபித்த கிரிஷ் ஏ.டி. இந்த படத்தையும் மிகச்சிறப்பான ஒரு படமாக தந்திருக்கிறார். அவரின் வழக்கமான யதார்த்த நகைச்சுவையும், துள்ளலான வசனங்களும் படம் முழுவதும் ரசிக்க வைக்கின்றன. அவர் எடுத்துக் கொண்ட கதைக்களம் கொஞ்சம் சிக்கலான ஒன்று தான், வயது வித்தியாசத்துடன் வரும் காதல். ஆனாலும் அதை முகம் சுளிக்க வைக்காத அளவுக்கு மிக இயல்பாகவும், ரசிக்கும் விதத்திலும் கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட சிறந்த படங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் நம் விருப்பம். கண்ணை மூடிக் கொண்டு குடும்பத்துடன் சென்று ரசிக்க வேண்டிய மிக முக்கியமான திரைப்படம் தான் “பெத்லகேம் குடும்ப யூனிட்”.

