லோகேஷ் கனகராஜின் இணை இயக்குனர் மற்றும் பாடலாசிரியரான விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கும் காதல் திரைப்படம் ‘ஹாய்’. ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். மறைந்த இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் கடைசியாக நடித்த படங்களில் மிக முக்கியமான படம் இது. படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் கவின் ஒரு இன்ட்ரோவெர்ட். காதலில் எப்பவுமே தான் ஒரு ஃபெயிலியர் என நினைப்பவர். தனக்கு பிடித்த பெண்ணிடம் காதலை சொல்லப் போக, அவள் ரிஜெக்ட் செய்ய, அதன் பின்னர் ஒரு விரக்தியில் வீட்டை விட்டு வெளியூருக்கு ஓடிப் போகிறார். அதே போல தனக்கு பிடிக்காத ஒருவருக்கு தன்னை திருமணம் செய்து வைக்க குடிகார அப்பாவும், உறவினர்களும் எண்ண, அது பிடிக்காமல் ஊரை விட்டு ஓடிப் போகிறார். ஊரை விட்டு ஓடிப் போன இந்த இரண்டு பேரும் ஒரு புள்ளியில் சந்திக்க, அவர்களுக்குள் ஏற்படும் நட்பு, கவினுக்கு நயன் மேல் காதலாகவும் மாறுகிறது. மீண்டும் காதலை சொல்வதில் சில சிக்கல்கள் வர, அதற்குள் குடும்பத்தினர் இவர்களை கண்டுபிடித்து வந்து சேர, கவின் ஒருதலைக் காதல் என்ன ஆனது? நயன்தாரா, கவின் காதலர்கள் ஆனார்களா? அவர்கள் குடும்பத்தினர் என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.
நாயகன் கவின். இன்னொரு சமகால இளைஞர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரம். வழக்கம் போலவே கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். முந்தைய படங்களை விட இந்த படத்தில் சற்றே கொஞ்சம் மாறுபட்ட ஒரு பாடி லாங்குவேஜில் அசத்துகிறார். சில காட்சிகளில் கலங்கவும் வைக்கிறார். நயன்தாராவுடனான கெமிஸ்ட்ரியும் நன்றாகவே இருக்கிறது. நயன்தாரா கொஞ்சம் போல்டான பெண்ணாக கதவை உடைத்துக் கொண்டு எக்ஸிட் (என்ட்ரி) கொடுப்பது, அருவாளும் கையுமாக கவினிடம் அறிமுகம் ஆவது என கொஞ்சம் அழுத்தமான கதாபாத்திரம் தான். ஈஸியாக ஸ்கோர் செய்கிறார்.
மறைந்த பாக்யராஜ், படத்தின் மிகப்பெரிய சொத்து. அவர் வரும் காட்சிகள் எல்லாமே ஆளுமை செலுத்துகிறார். காமெடி காட்சிகள், வசனங்கள் என எல்லாவற்றிலும் அவரை பார்க்கும்போது நல்ல ஒரு கலைஞரை இழந்து விட்டோமோ என்ற உணர்வு தான் எழுகிறது. ராதிகா அடுத்தடுத்து சம்பவம் தான் என்பது போல மீண்டும் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் கவினின் அம்மாவாக மனதில் நிற்கிறார். பிரபு நாயகியின் அப்பாவாக கொஞ்சம் எமோஷனலான கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். சத்யன், பாலா ஹாசன், பெப்ஸி விஜயன், ரெஞ்சி பணிக்கர், அம்ருதா ஸ்ரீனிவாசன், விடிவி கணேஷ், காவ்யா அறிவுமணி, என மற்ற நடிகர்களும் அவரவர் பங்கை அழகாகவே செய்திருக்கிறார்கள்.
ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் எல்லாமே ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக ரசகுல்லா பாடல் துள்ளல். பின்னணி இசையிலும் படத்தின் ஜீவனை அழகாக நமக்கு கடத்துகிறார். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு படத்தை கலர்ஃபுல்லாக காட்டுவதோடு கதைக்குண்டான தன்மையையும், உணர்வுகளையும் படம் முழுக்க நமக்கு தருகிறது.
இயக்குனர் விஷ்ணு எடவன். சிம்பிளான காதல் கதையை எழுதி அதை திரைக்கதை மற்றும் உருவாக்கத்தில் ரசிக்க வைத்திருக்கிறார். காதல், குடும்ப உறவுகளின் உன்னதம் என பல காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கிறது. முதல் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாக காதல், நகைச்சுவையுடன் நகர்கிறது. இரண்டாம் பாதியில் முக்கியமான எமோஷன் காட்சிகளும், குடும்பக் காட்சிகளும் படத்துக்கு ஜீவனாக அமைந்திருக்கிறது. ஆங்காங்கே அழுத்தமான வசனங்களும் சிறப்பு. 2:24 மணி நேரம் ஓடினாலும் பெரிதாக தொய்வில்லாமல் குடும்பத்துடன் ரசித்துப் பார்க்கக் கூடிய ஒரு அழகான, ஃபீல்-குட் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணு எடவன். மொத்தத்தில் ஹாய் நிச்சயம் ரசிக்கக் கூடிய நல்ல ஒரு ஃபீல் குட் ரொமான்ஸ் ட்ராமா. வாழ்த்துக்கள் கவின் & ஹாய் டீம்.

