‘கேஜிஎஃப்’ இமாலய வெற்றிக்குப் பிறகு, இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த யாஷின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு ‘டாக்ஸிக்’. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்கியிருக்கிறார் கீது மோகன்தாஸ். கேஜிஎஃப் மூலம் இந்திய சினிமாவில் முத்திரை பதித்த யாஷ், இந்த டாக்ஸிக் படத்தின் மூலம் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை படைத்தாரா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, 1947 காலகட்டத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவா பின்னணியில் கதை நகர்கிறது. கோவாவின் பெரும் போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை ஆளும் Darrell D’Silvaவின் நம்பிக்கைக்குரிய வலது கரமாக இருக்கிறார் யாஷ். அவரது அக்கா நயன்தாரா சிறுவயதில் பல கஷ்டங்களுக்கு இடையில் யாஷை வளர்த்தவர். அவருக்கு யாஷ் அந்த நகரத்தையே ஆள வேண்டும் என்பது விருப்பம். கேங்க்ஸ்டர் தலைவன் மகள் தாரா சுதாரியா யாஷை விரும்ப திருமணம் செய்ய நிச்சயம் செய்கிறார்கள். ஆனால் யாஷ் வாழ்க்கையில் சர்க்கஸ் கலைஞர் கியாரா அத்வானி நுழைகிறார். யாஷ் வாழ்வில் கடந்து செல்லும் பல பெண்கள் பற்றியும், யாஷ் பெற்ற மகன் பற்றியும் நகர்கிறது மீதிக்கதை. அந்த சாம்ராஜ்யத்தை யாஷ் கைப்பற்றினாரா? யாருடன் காதல் வாழ்க்கையை நடத்தினார்? அவருக்கு பிறந்த வாரிசுகள் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.
கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு அதே ராக்கி பாய் உடல்மொழியில் இந்த படத்திலும் மிரட்டலான உடல்மொழி, நீண்ட தாடி, கம்பீரமான குரல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் என ரசிகர்கள் ஈர்க்கிறார். காதல், காமம், பாசம், ஆக்ஷன் என எதில் இறங்கினாலும் எல்லையை தொடாமல் நிறுத்த மாட்டார் என்பது போல இறங்கி அடித்திருக்கிறார். குடி, புகை பிடித்தல், பெண்களுடன் உறவு என கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். டிக்கெட் என்ற இன்னொரு கதாபாத்திரத்தில் முற்றிலும் மாறுபட்ட யாஷை பார்த்தது இன்ப அதிர்ச்சி. அதை ட்ரைலரில் காட்டாமல் வைத்திருந்தால் ரசிகர்களுக்கு இன்னும் சர்ப்ரைஸாக அமைந்திருக்கும்.
படத்தில் எங்கு திரும்பினாலும் நாயகிகள் பட்டாளம் தான். அதில் அதீத முக்கியத்துவம் நயன்தாராவுக்கு தான். ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் அக்காவாக வந்து ஓரளவு மனதில் நிற்கிறார். சர்க்கஸ் கலைஞராக வந்து கியாரா அத்வானி அவருடைய கவர்ச்சி மற்றும் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். தாரா சுதாரியா சில காட்சிகள் வந்தாலும் அவருக்கு ஒரு நோக்கம் இருந்தது கதையின் போக்கை மாற்றுகிறது. ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி இரிவரும் கொஞ்சம் வீணடிக்கப்பட்ட உணர்வு எழுகிறது. சுதேவ் நாயர் அதிகம் பேசாமல் படம் முழுக்க வந்து போகிறார். மற்ற வெளிநாட்டு நடிகர்கள் கதைக்கு நம்பகத்தன்மை அளிக்கிறார்கள். குழந்தை நட்சத்திரங்கள் நல்ல சாய்ஸ்.
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை (BGM) மாஸ் காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறது. பாடல்கள் எல்லாம் கதையுடன் பார்க்க நன்றாகவே இருக்கிறது. தபாஹி பாடல் உற்சாகமூட்டுகிறது. ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு இருண்ட, பழங்கால கோவாவை மிகச்சிறப்பாக பிரதிபலிக்கிறது. சில காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் உள்ளது. ஹாலிவுட் சண்டை இயக்குனர் ஜே.ஜே.பெரியுடன் இணைந்து அன்பறிவ் மாஸ்டர்கள் அமைத்த சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் ரத்தமும் சதையுமாக மிரட்டலாக உள்ளன.
இயக்குனர் கீது மோகன்தாஸ். இந்த மாதிரி ஒரு உலகத்தை உருவாக்க மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார். அவருடன் சேர்ந்து யாஷூம் கதை, திரைக்கதை எழுதியிருப்பதால் ஏதோ ஒரு குழப்பம் ஏற்பட்டு விட்டதோ என எண்ண வைக்கிறார்கள். மூத்தோன் போன்ற சினிமாவை எடுத்தவர் மசாலா படத்தை எடுத்திருப்பதும், கேஜிஎஃப் போன்ற படத்தில் நடித்தவர் இப்படி ஒரு படத்தில் நடித்ததும் கொஞ்சம் ஆச்சர்யம் தான். கதை, திரைக்கதையை விட ஆக்ஷன், வயலன்ஸ் மற்றும் 18+ விஷயங்களில் தான் அதீத கவனம் செலுத்திய உணர்வு எழுந்திருக்கிறது.
இன்னொரு பெரிய பிரச்சினை படத்தின் நீளம் சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள். இவ்வளவு நீளமான திரைக்கதையில் பல காட்சிகள் தேவையின்றி இழுக்கப்பட்ட உணர்வைத் தருகின்றன. குறிப்பாக, இரண்டாம் பாதியில் மெதுவாக நகரும் காட்சிகள் ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கின்றன. உஜ்வல் குல்கர்னியின் எடிட்டிங் முதல் பாதியில் விறுவிறுப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதியின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். அதிகப்படியான வன்முறை மற்றும் பலவீனமான வசனங்கள் அடுத்த குறை.
‘டாக்ஸிக்’ யாஷின் மாஸ் அவதாரத்தையும், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளையும், ஹாலிவுட் தர மேக்கிங்கையும் திரையரங்கில் ரசிக்க விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து. சாதாரண ரசிகர்களுக்கு நிச்சயம் கொஞ்சம் சுமாரான படமாகவே அமைந்திருக்கிறது.

