இருமுடி கட்டு – விமர்சனம்!

இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில், ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘இருமுடி கட்டு’. தனது வழக்கமான கமெர்சியல் அம்சங்களை தள்ளி வைத்து விட்டு கதையை மையமாக வைத்து, ரவி தேஜா முற்றிலும் மாறுபட்ட அவதாரத்தில் நடித்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஆத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்த ரவிதேஜா, பிரியா பவானி ஷங்கருக்கு ஒரே ஒரு மகள். மகள் மீது கொள்ளை அன்பு கொண்ட ரவி தேஜா குடிக்கு அடிமையான ஒரு தந்தை. மகளின் வேண்டுகோளுக்கிணங்க ஐயப்பசாமிக்கு மாலை அணிந்து அந்த மண்டலம் முழுக்க விரதமிருக்கிறார். அந்த சமயத்தில் முழுக்க பக்தியில் மட்டுமே கவனம் செலுத்துவார். கோவிலுக்கு போய் விட்டு வந்த அடுத்த வினாடியே குடியில் இறங்கி விடுவார். அந்த கிராமத்தில் உள்ள பள்ளி செல்லும் பெண்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதன் பின்னணியில் உள்ளது யார்? பெண்கள் பாதுகாப்பின் அவசியம் என்ன? தந்தை மகள் பாசம் பற்றி முழுக்க பேசும் படமே இந்த இருமுடி கட்டு.

நாயகன் ரவி தேஜாவின் எதார்த்தமான நடிப்பு படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. வழக்கமான மாஸ் ஹீரோ இமேஜை தள்ளி வைத்து விட்டு மகள் பாசத்துக்காக என்ன வேணாலும் செய்யும் ஒரு சாதாரண மனிதராக, அதே சமயம் தப்பு நடந்தால் தட்டிக் கேட்பவராகவும் நடித்திருக்கிறார். இருமுடி கட்டி, ஐயப்ப பக்தராக பஜனை பாடி இதுவரை பார்க்காத ஒரு ரவி தேஜாவை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்.

ரவி தேஜாவின் மனைவியாக பிரியா பவானி சங்கர். ஒரு குழந்தைக்கு அம்மாவாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரவி தேஜா, பிரியா இடையிலான அன்யோன்யம், பிணைப்பு திரையில் பார்க்க அவ்வளவு இயல்பாக இருக்கிறது. சாய் குமார் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் குருசாமியாக அழுத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஸ்வாசிகா இதுவரை பார்க்காத ஒரு நெகடிவான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். குழந்தை நட்சத்திரம் பேபி நட்சத்திரா படத்தின் ஆதார ஜீவனாக இருந்து படம் முழுக்க வியாபித்திருக்கிறார். அஜய் கோஷ் சின்ன கதாபாத்திரமானாலும் கவனம் பெறுகிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் படத்திற்குத் தேவையான ஆன்மீக அதிர்வையும், விறுவிறுப்பையும் தந்துள்ளன. ஐயப்ப பஜனை பாடல்கள் எல்லாம் தியேட்டரில் பார்க்கும்போது நம்மையே பரவச நிலைக்கு தள்ளுகிறது. பின்னணி இசையிலும் முத்திரை பதிக்கிறார் ஜிவி பிரகாஷ். விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். அந்த இயற்கை எழில் கொஞ்சும் ஊரை நமக்கு விருந்தாக்குகிறார். பிரவீன் புடியின் படத்தொகுப்பு கச்சிதம்.

இயக்குனர் சிவா நிர்வாணா. ஏற்கனவே மஜிலி போன்ற படங்களில் எமோஷனல் ட்ராமாவை அழகாக கையாண்டிருப்பார். இந்த படத்திலும் ஒரு அழகான ஃபேமிலி ட்ராமாவை பக்தி கலந்து முக்கியமான பெண்கள் பாதுகாப்பு பிரச்சினைகளையும் சிறப்பாக பேசியிருக்கிறார். ஐயப்ப சாமி, கல்வி, பெண்கள் பாதுகாப்பு, தந்தை மகள் பாசம் என அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து சிறப்பான ஒரு படமாக தந்திருக்கிறார். கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அழகான லொகேஷன்களில் படம் பிடித்து நல்ல ஒரு டிரீட் கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் எமோஷனல் ரோலர்கோஸ்டர் என்று சொல்லும் அளவுக்கு நம்மை கலங்க வைக்கிறார். ஆக்ஷன் இருந்தாலும் அதை உணர்வுப்பூர்வமான திரைக்கதையின் மூலம் மறக்கடிக்கச் செய்து நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார். பக்திப் பட ரசிகர்களும் கொண்டாடும் ஒரு படமாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று ரசித்து விட்டு வரும் ஒரு நல்ல தரமான படம் இந்த இருமுடி கட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *