பிரபல இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கர், தனது 6-வது சுயாதீன (Indie) பாடலான ‘ரதிமா’ (Radhimaa)-வை திங்க் இண்டி (Think Indie) நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
காதல் முறிவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடல், நவீன பாப் இசையையும் கவ்வாலி (Qawwali) சாயலையும் இணைத்து, ஒரு புதிய இசை அனுபவத்தை வழங்குகிறது. பிரியும் காதலை சோகமாக இல்லாமல், இளமைத் துடிப்புடனும் நேர்மறை உணர்வுடனும் எடுத்துரைக்கும் வகையில் சாய் அபயங்கர் இப்பாடலை அமைத்துள்ளார்.
இப்பாடலின் அழகிய இசை காணொளியில் சாய் அபயங்கருடன் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் தேஜோ பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வீடியோ, பாடலின் எனர்ஜியான இசைக்கும், அதில் உள்ள உணர்ச்சிகரமான கருப்பொருளுக்கும் வலு சேர்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
‘ரதிமா’ பாடல் ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று அனைத்து முன்னணி இசை தளங்களிலும் வெளியானது. இப்பாடலின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் (Rajalakshmi Engineering College) நடைபெற்றது. இதில் 13,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பாடலை பிரம்மாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தனது தனித்துவமான இசை அமைப்பால் ஏற்கனவே பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள சாய் அபயங்கரின் இந்த ‘ரதிமா’ பாடலும், இசைப் பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

