அமரம் – விமர்சனம்!

இயக்குநர் திரு அருள் கிருஷ்ணன் இயக்கத்தில், ராஜன் தேஜஸ்வர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘அமரம்’. அதிகார வர்க்கத்தால் நசுக்கப்படும் மலைக்கிராம மக்களின் வலியையும், சரியான கல்வி கிடைக்காமல் கிடைத்த அடியாள் வேலையை செய்து பிழைப்பை ஓட்டு நாயகன் வாழ்வியலையும், வன்முறைச் சூழலில் சிக்கிக் கொள்ளும் ஒரு இளம் பெண் வாழ்க்கையையும், மிக மிக யதார்த்தமாக பேச முயன்றிருக்கும் இந்த படம் எப்படி இருக்கிறது? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஒரு மலை கிராமத்தில் வாழும் நாயகன் தேஜேஸ் மற்றும் மரியம் ஜார்ஜ், சாய் தீனாவிடம் கூலிக்கு கொலை செய்யும் ஒரு அடியாட்களாக வாழ்ந்து வருகிறார்கள். கூலிக்காக தொடர்ந்து அவர்கள் கொலை செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் நாயகியின் தந்தையை கொலை செய்ய, அந்த கொலையால் மனமுடைந்த நாயகி யார் அந்த கொலையை செய்தது? கொலைக்கான காரணம் என்ன? என்பதை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என கிளம்புகிறார். சென்ற இடத்தில் என்ன ஆனது? நாயகிக்கு ஏற்படும் சிக்கல் என்ன? கூலிப்படையாக இருக்கும் நாயகன் என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.

நாயகன் ராஜன் தேஜேஸ்வர். நீண்ட தாடி, முரட்டுத் தோற்றம் மற்றும் பெரும்பாலும் பேசாமல் இருக்கும் ‘அருகன்’ கதாபாத்திரத்தில் ஒரு நல்ல நடிப்பையே வழங்கியிருக்கிறார் ராஜன் தேஜஸ்வர். அந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். அடியாளாக கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகி ஐரா அகர்வால் அழகாக இருக்கிறார். தந்தையை இழந்து தவிக்கும் மகளாக, ஒரு வித பயத்துடனும், குழப்பத்துடனும் இருக்கும் மகளாக நல்ல நடித்திருக்கிறார்.

ஜார்ஜ் மரியான் நாயகனை வளர்த்தெடுக்கும் உறுதுணையாக இருக்கும் நல்ல ஒரு கார்டியனாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். சாய் தீனா நல்லவரா கெட்டவரா என நாம் குழம்பும் விதமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இறுதியில் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறார். நாகி நீடு ஒரு வழக்கமான வில்லனாக வந்து போகிறார். ஹரீஷ் பெரடி, கல்கி ராஜன் ஆகியோரும் நல்ல பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.

இதுவரை சினிமாவில் அதிகம் பேசப்படாத காட்டப்படாத கிழக்கு தொடர்ச்சி மலைக்கிராமங்களின் அழகியலை துல்லியமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இது படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்து, காட்சிகளுக்குத் தேவையான பதைபதைப்பைக் கொடுத்துள்ளது. மிக்கி ஜே மேயர் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையும் படத்துக்கு நல்ல ஒரு பங்களிப்பை செய்திருக்கிறது.

இயக்குநர் திருஅருள் கிருஷ்ணன் வழக்கமான கிராமத்துக் கதையாக இல்லாமல், சமூகக் கருத்துகளையும், மக்களின் வலியையும் ஆழமாகப் பதிவு செய்ய முயன்றுள்ளார். கிழக்கு தொடர்ச்சி மலையில் வாழும் எளிய மனிதர்கள் என்ற வித்தியாசமான கதைக்களம், நடிகர்களின் அழுத்தமான நடிப்பு ஆகியவை படத்தின் முக்கியமான அம்சம். இருப்பினும் சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்வதும், தேவையற்ற சில காட்சிகளும் கதையின் போக்கை மாற்றுகிறது. மலைக்கிராம மக்களின் அரசியலையும், வன்முறையின் கோர முகத்தையும் அழுத்தமாக சொன்ன விதத்தில், ஒரு நேர்த்தியான மற்றும் வித்தியாசமான முயற்சியாக கவனம் பெறுகிறது இந்த அமரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *