பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்!

பியார் பிரேமா காதல், ஸ்டார் படங்களின் இயக்குநர் இளன் அவரே கதாநாயக அவதாரம் எடுத்து நடித்து, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’. நெட்ஃபிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்தித்துக்கு இளனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இளன் ஹீரோவாகி இருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, அப்பா எம்.எஸ்.பாஸ்கர் கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுத்த துபாய் வேலையை உதறி விட்டு குடும்பத்துடன் இருக்க சென்னை வருகிறார் இளன். காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரின் லட்சியம். சமூக ஊடகங்களில் பிரபலமான Influencer ஆன நாயகி சான்வி மேக்னா மீது கண்டதும் காதல் வர, அதன் பின் இருவரும் காதலிக்க, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது. ஆனால் திருமணம் முடிந்த உடனே கணவர் வீட்டுக்கு செல்ல முடியாது என முடிவெடுத்து ஓட்டம் பிடிக்கிறார். இதனால் புது மாப்பிள்ளை இளன் நாயகி வீட்டிற்கு வீட்டோட மாப்பிள்ளையாக செல்கிறார். துபாய் வேலையை உதறியதில் இருந்து மாமியார் வீட்டில் இருப்பது வரை பொறுப்பற்று இருக்கும் இளன் பொறுப்பானவராக மாறினாரா? வீட்டோட மாப்பிள்ளை என்பதை மாற்றினாரா? உறவுகளின் புனிதத்தை உணர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் இளன். நல்ல ஸ்மார்ட்டான ஹேண்ட்ஸம் இளைஞராக, கொஞ்சம் குறும்போடு சிரித்த முகத்துடனே இருக்கும் இளைஞராக கலக்கியிருக்கிறார். அவர் செயல்பாடுகள் ஒவ்வொன்றுமே காமெடியில் ரசிக்க வைக்கிறது. காதல் காட்சிகளிலும் எந்த தயக்கமும் இன்றி அசால்ட்டாக நடித்திருக்கிறார். காமெடி, எமோஷன், காதல் என அனைத்திலும் பாஸ் மார்க் வாங்குகிறார். நாயகி சான்வீ மேக்னா. ஒரு இன்ஃப்ளூயன்ஸராகவே மாறியிருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் இருந்தே ஒரு கண்டெண்ட் கிரியேட்டரை பார்த்த உணர்வை அவர் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

ராதிகா. நாயகியின் அம்மாவாக ஒரு ஃபுல் மீல்ஸ் பெர்ஃபார்மன்ஸை தந்திருக்கிறார். மாமியார் மருமகன் இடையே நடக்கும் சம்பவங்கள் எல்லாம் கலாட்டா. கண்டிப்பான அப்பாவாக M.S.பாஸ்கர் சிறப்பான ஒரு நடிப்பை வழங்கியுள்ளார். யோகி பாபு சில காட்சிகள் வந்தாலும் சிரிக்க வைக்கிறார். செந்தில், இளங்கோ குமரவேல், கீதா கைலாசம், தீப்ஸ், மாறன் என மற்ற நடிகர்கள் அனைவருமே படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள்.

யுவன் சில இயக்குனர்களுக்கு மட்டுமே 200% உழைப்பை கொட்டி மிகச் சிறப்பான இசையை தருவார். அந்த வகையில் இளன் படங்களுக்கு என்றுமே யுவன் ஷங்கர் ராஜாவின் இசை காலம் கடந்தும் நிற்கும். இந்த படத்திலும் எல்லா பாடல்களும் சிறப்பு. பின்னணி இசையும் பிரமாதம். தினேஷ் கே பாபு ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக ரசிக்கும்படி உள்ளது.

நிவேதிதா பொஹாங்கர் உடன் இணைந்து கதை, திரைக்கதை எழுது இயக்கியிருக்கிறார் நாயகன் மற்றும் இயக்குனரான இளன். தனக்கு என்ன வருமோ, தன்னுடைய பலம் என்னவோ அதை மிகச் சரியாக கணக்கிட்டு அழகாக எழுதி ஒரு ரொமாண்டிக் காமெடியாக தந்திருக்கிறார். வழக்கமான திருமண நடைமுறைகளை உடைக்கும் ஒரு நவீன குடும்பக் கதையாக, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற படமாகவும் தந்திருக்கிறார். திருமணத்துக்கு பின் மனைவியின் வீட்டுக்கு செல்லும் வீட்டோட மாப்பிள்ளை என்ற விஷயத்தையும், மாமியார் மருமகன் இடையே நடக்கும் விஷயங்களையும் பார்க்க கொஞ்சம் புதுமையாகவே இருந்தது. பியார் பிரேமா காதல் முழுக்க முழுக்க திகட்ட திகட்ட காதலை பேசியது. பியார் பிரேமா கல்யாணம் முழுக்க காதலுக்குப் பின் நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து கலகலப்பான ஒரு திரைப்படமாக அனைவரும் ரசிக்கும்படியான படமாக அமைந்திருக்கிறது. நிச்சயம் குடும்பத்துடன் இந்த வார இறுதியில் நெட்ஃபிளிக்ஸில் கண்டுகளிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *