தடை அதை உடை – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் தான் சொல்ல வந்த கதைகளை சிறப்பாக சொல்லி ரசிகர்களை கவர்ந்த பல படங்கள் உண்டு. புதுமுகங்களை வைத்து உருவாகும் இந்த படங்களின் மூலம் பல நல்ல நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் நல்ல பல திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வரும் இன்னொரு படமாக உருவாகியிருக்கிறது “தடை அதை உடை”.

படத்தின் கதைப்படி, செங்கல் சூளையில் வேலை பார்த்து வரும் சாதாரண இளைஞர்கள் மூன்று பேர், யூடியூப் மூலம் நல்ல ஒரு நிலைக்கு வர வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வருகிறார்கள். அதற்கான முயற்சியில் மூவரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனலை துவங்குகிறார்கள். சில நாட்களில் அவர்கள் பதிவிட்ட வீடியோக்கள் எல்லாம் வைரல் ஆகி அவர்கள் யூடியூப் பிரபலங்களாக மாறுகிறார்கள். அதை தொடர்ந்து சினிமாவில் அடியெடுத்து வைக்க முயற்சிக்க, அது தோல்வியில் முடிகிறது. அவர்களே வெளிவர முடியாத ஒரு எதிர்பாராத சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள். அதில் இருந்து மீண்டார்களா? அவர்கள் வாழ்க்கை என்னவானது? என்பதே மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்காடித் தெரு மகேஷ் நல்ல ஒரு படத்தில் மனதில் பதிகிறார். நண்பர்களுடன் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிக்க வைக்கிறார். இன்றைய இளைஞர்களையும் அழகாக பிரதிபலித்திருக்கிறார். குணா பாபு, பாரி வள்ளல், மகாதிர் முகமது என மற்ற கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களுமே கவனிக்க வைக்கிறார்கள்.

சோட்டா மணிகண்டன், தங்கப்பாண்டியன் ஒளிப்பதிவு ஓரளவு படத்தை தரமாக தர முயற்சி செய்திருக்கிறது. ஆனாலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். சாய் சுந்தர் இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசையும் ஓகே ரகம்.

முன்பெல்லாம் சினிமா மோகம் தலைவிரித்து ஆடியது. இப்போது சோஷியல் மீடியா மோகமும், யூடியூப் மோகமும் ஆட்டுவிக்கிறது. அந்த அவலத்தை தோலுரித்து காட்டுகிறது இந்த படம். இயக்குனர் அறிவழகன் முருகேசன் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு, சமூக ஊடகங்களின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். அதில் மூழ்கி வாழ்க்கையை தொலைக்கக் கூடாது என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். சமூக ஊடகத்தின் தாக்கம் எவ்வளவு ஆழமாக நம்மை பாதிக்க முடியும் என்பதை, மூன்று இளைஞர்களின் நட்பு, கனவு, வீழ்ச்சி ஆகியவற்றை வைத்து நல்ல ஒரு செய்தியையும் மக்களுக்கு தந்திருக்கிறார். மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *