சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியின் 99வது தயாரிப்பாக வெளியாகி இருக்கும் படம் “மகுடம்”. நடிகர் விஷால் முதன் முறையாக திரைக்கதை எழுதி, இயக்கி இருக்கும் இந்த படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சென்னையில் ஒரு மிடில் கிளாஸ் குடும்ப தலைவனாக, ஒரு மருத்துவப் பிரதிநிதியாக மனைவி துஷாரா மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரது மாமனார் தம்பி ராமையா மருமகன் விஷால் கார் வைத்திருக்க வேண்டும் என சொல்ல, அதற்காக ஒரு பழைய காரை வாங்குகிறார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு கும்பல் விஷால் மற்றும் குடும்பத்தை தாக்குகிறது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் விசாகப்பட்டினம் துறைமுகத்தை கட்டுப்படுத்தும் ஒரு பெரிய டானாக இருக்கும் அவரது தந்தை ‘லிங்கா’வின் கடந்த காலப் பகை இருப்பது தெரிய வருகிறது. தந்தை விஷாலை வெறுத்து பிரிந்து வாழும் மகன் விஷால், இந்த சம்பவத்தால் மேலும் வெறுப்பாகிறார். அந்த சம்பவத்தை தொடர்ந்து என்ன ஆனது? தந்தையை மகன் ஏன் பிரிந்தார்? அந்த பகைக்கான காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.
நாயகன் விஷால். லிங்கா, கிருபாகரன் என ஒரு வேடங்களில் கடும் உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார். ஒரு இயக்குனராக இருந்தாலும் நடிகராகவும் ஸ்கோர் செய்திருக்கிறார். அஞ்சலி உடனான கெமிஸ்ட்ரி சூப்பர். ஓஜி அஞ்சலியை மீண்டும் திரையில் பார்த்த உணர்வு எழுகிறது. துஷாரா விஜயன் ஒரு கலக்கலான கதாபாத்திரத்தில் வந்து ஸ்கோர் செய்கிறார். ஜான் விஜய், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ், சாம்ஸ் உட்பட மற்ற அனைவருமே அவரவர் பங்கை செய்திருக்கிறார்கள்.
G.V.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. நச்சிந்தி மச்சானே பாடல் தியேட்டர்களில் கொண்டாட்டம். கலங்காதே பாடல் மனதை தொடுகிறது. பின்னணி இசையும் படத்தை தூக்கி நிறுத்துகிறது.
இயக்குனர் விஷால். ரவி அரசு எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். அவருக்கே உரித்தான ஆக்ஷன் ஜானரில் அதிரடியான படமாக கொடுத்திருக்கிறார். அவரின் 20 ஆண்டு அனுபவம் ஓரளவுக்கு கைகொடுத்திருக்கிறது. 1980-களின் வழக்கமான கேங்ஸ்டர் பழிவாங்கும் கதை என்பதால் புதுமை பெரிய அளவில் இல்ல, கொஞ்சம் பழைய 2000களின் படத்தை பார்க்கும் உணர்வு எழாமல் இல்லை. படத்தின் நீளம் மூன்று மணி என்பது மிகப்பெரிய அயற்சியை தருகிறது. மிகவும் நீளமான பிளாஷ்பேக் காட்சிகளும் பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கின்றன. முதல் பாதியிலும் கதைக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை ஒரு மணி நேரத்துக்கு ஓட்டியிருக்கிறார்கள். இதை எல்லாம் தவிர்த்து 2 மணி நேர படமாக கொடுத்திருந்தால் குறைந்தபட்சம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஓரளவு நல்ல கமெர்சியல் படமாக அமைந்திருக்கும். அறிமுக இயக்குனராக விஷால் ஆக்ஷன் காட்சிகளில் காட்டிய கவனத்தைத் திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம். விஷால் ரசிகர்களுக்கு ரசிக்கும் படமாக அமையலாம்.

