பைக்கர் – விமர்சனம்!

தெலுங்கு சினிமாவில் நல்ல நல்ல மோட்டிவேஷனல் படங்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள படம் தான் “பைக்கர்”. ஷர்வானந்த் நடித்திருக்கும் இந்த பைக் ரேஸ் ஸ்போர்ட்ஸ் படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, தன் தந்தை ராஜசேகர் போல் ஒரு பைக் ரேஸராக விரும்பும் ஷர்வானந்த், ஒரு குருவாக முன்னின்று மகனுக்கு பயிற்சி கொடுத்து நல்ல ஒரு ரேஸராக உருவாக்குகிறார் ராஜசேகர். இந்தியாவுக்காக உலக அரங்கில் பைக் ரேஸராக பங்கேற்க வைக்க பல முயற்சிகளையும் எடுக்கிறார். மிகப்பெரிய நிறுவனத்தையும் ஸ்பான்ஸராக கொண்டு வருகிறார். தான் நினைத்ததை மகன் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையோடு ராஜசேகர் இருக்க, ஷர்வானந்த் தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் ரேஸ் கரியரை உதறி விட்டு தந்தைக்கு ஏமாற்றம் அளிக்கிறார். ஷர்வானந்த் செயலாம் மிகப்பெரிய அவப்பெயருக்கு ஆளாகிறார் ராஜசேகர். பல ஆண்டுகள் கழித்து அந்த அவப்பெயரை துடைக்க திரும்பி வருகிறார் ஷர்வானந்த். தந்தையின் கனவை நிறைவேற்றினாரா? பை ரேஸில் சாதித்தாரா? தந்தையும் மகனும் இணைந்தனரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் ஷர்வானந்த். ஒரு பைக் ரேஸராக கடுமையாக உழைத்திருக்கிறார். இளமைக் காலத்தில் ஸ்டைலிஷான ஒரு தோற்றத்திலும், திருமண வாழ்க்கையில் எதையோ இழந்து வாழும் மனிதராகவும், மீண்டும் ரேஸராக வந்து அதிரடி காட்டுபவராக ஸ்கோர் செய்கிறார். காதல் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். ஷர்வானந்த் தந்தையாக விளையாட்டுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் கதாபாத்திரத்தில் ராஜ சேகர் மனதில் பதிகிறார். கண்டிப்பான கோச்சாக மனதில் பதிகிறார்.

நாயகி மாளவிகா நாயர். இளம் வயது காதலியாக துடிப்பாகவும், மனைவியாக முதிர்ச்சியான ஒரு கதாபாத்திரத்திலும் தத்ரூபமாக கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காதலியாக இருக்கும் போது ரேஸிங்கிற்கு ஆதரவாகவும், மனைவியான பின் அது வேண்டாம் என சொல்பவராகவும் இருவிதமான மனநிலையையும் சிறப்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறார். தொழிலதிபராக அதுல் குல்கர்னி, சக போட்டியாளராக நிரூப் என மற்ற நடிகர்களும் நல்ல பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜெ.யுவராஜ் ரேஸ் காட்சிகளை எல்லாம் ரசிக்கும் விதத்தில் மிகச்சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளார். பை ரேஸை பக்கத்தில் இருந்து பார்த்த உணர்வை, நாமே பைக்கராக இருந்த உனர்வை தெரிகிறது. ஜிப்ரான் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை. துடிப்பான பின்னணி இசை படத்துக்கு வலு சேர்த்துள்ளது.

இயக்குநர் அபிலாஷ் ரெட்டி எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்கு தன் அபாரமான உழைப்பால் நியாயம் சேர்த்திருக்கிறார். ட்ராமாவை விடவும் ரேஸ் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை. ஸ்டைலிஷான உருவாக்கத்தால் நம்மை கவர்கிறார். தந்தை மகன், குரு சிஷ்யன் என இரண்டு விதத்திலும் கதையின் அம்சங்களை சொன்ன விதமும், அப்பா, மகன், பேரன் என உறவுகளை காட்டிய விதத்திலும் நெகிழ வைக்கிறார். ரேஸ் காட்சிகள் ரசிகர்கள் அனைத்துமே சீட் நுனியில் அமர வைக்கிறது. மொத்தத்தில் நல்ல ஒரு மோட்டிவேஷனல் ஸ்போர்ட்ஸ் ட்ராமாவை தந்து வெற்றிப் படமாக தந்திருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ரெட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *