ராஜா சாப் – விமர்சனம்!

பாகுபலி துவங்கி வரிசையாக பான் இந்திய படங்களில் மட்டுமே நடித்து வரும் பிரபாஸ், ஹாரர் ஃபேண்டசி ஜானரில் நடித்திருக்கும் படம் தான் ராஜாசாப். குறுகிய கால தயாரிப்பாக திட்டமிட்ட இந்த திரைப்படம் போகப் போக மிக பிரமாண்ட படமாக மாறியிருக்கிறது. பான் இந்திய படமான இந்த ராஜா சாப் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, பிரபாஸ் பாட்டி தொலைந்து போன கணவர் பற்றிய நினைப்பிலேயே இருக்கிறார். அல்ஸைமர் என்ற மறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கணவர் குறித்து மட்டும் எதையும் மறக்காமல் இருக்கிறார். அதனால் பாட்டிக்காக தாத்தாவை தேடி பிரபாஸ் கிளம்புகிறார். தாத்தாவை தேடிச் செல்லும்போது நிதி அகர்வாலை பார்த்து காதலில் விழுகிறார். அதே நேரம் மாளவிகா மோகனன் ஒரு பணப்பெட்டியை உன் தாத்தாவிடம் சேர்க்க வேண்டும், அவரை பார்த்து அவர் கையில் தான் கொடுப்பேன் என சொல்கிறார்.

அந்த தாத்தா சஞ்சய் தத் ஒரு மாந்திரிகவாதி. பணத்தை திருடுபவர் என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாக பிரபாஸுக்கு தெரிய வருகிறது. அவரை தேடிச் சென்று அந்த அரண்மனையில் மாட்டிக் கொள்கிறார்கள். சஞ்சய் தத் பின்னணி என்ன? அவர் யார்? என்பதே மீதிக்கதை.

பிரபாஸ். வழக்கம் போல ஆஜானுபாகுவான தோற்றத்தில் அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸில் படத்தை தாங்குகிறார். பாகுபலி, சலார் என முரட்டுத் தனமாக பார்த்து பழக்கப்பட்ட நமக்கு ஒரு ஜாலியான, ரகளையான பிரபாஸை பார்ப்பது கொஞ்சம் புத்துணர்ச்சி தருகிறது. காதல் மற்றும் காமெடி காட்சிகளிலும் முடிந்த வரை ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.

மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி என மூன்று ஹீரோயின்ஸ். படத்தை மேலும் குளுமையாக்குகிறார்கள். கலர்ஃபுல் ஆக்குகிறார்கள். வழக்கமான ஹாரர் காமெடி படங்களுக்கே உரித்தனான கவர்ச்சி, காமெடி என பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்கிறார்கள். மாளவிகா மோகனுக்கு ஆக்ஷன் அவதாரம் வேறு.

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சய் தத். அவர் தோற்றமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. அவர் வரும் பெரும்பாலான காட்சிகளில் கிராஃபிக்ஸ் தூக்கல். ஆனாலும் அவர் கண்களில் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை மிக அழகாக பிரதிபலித்திருக்கிறார். போமன் இரானி, சரினா வஹாப், சமுத்திரகனி, விடிவி கணேஷ் மற்றும் மற்ற நடிகர்களும் அவர்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு மிக பிரமாண்டமாக கலர்ஃபுல்லாக இருக்கிறது. அரங்க அமைப்பும் அதற்கேற்ற ஒளிப்பதிவும் அதை எடுத்த விதமும் நன்றாக இருந்தது. தமன் இசையில் பாடல்கள் ஒகே ரகம். தமிழ் வெர்சனில் பாடல் வரிகளும், இசையும் கொஞ்சம் ஒட்டாமலேயே இருந்த உணர்வு. பின்னணி இசையில் நிறைய இடங்களில் பட்டைய கிளப்புகிறார். படம் முழுக்க சிஜி நல்ல தரமாகவே உள்ளது.

இயக்குனர் மாருதி. ஹாரர் காமெடி படத்தை மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து தந்திருக்கிறார். படத்தின் நீளம் மிகப்பெரிய நெகடிவ் என்று சொல்ல வேண்டும். ஒரு 2:15 மணி நேரம் என்ற நீளத்திற்கு  குறைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம். பெரிதாக திருப்புமுனை காட்சிகள் இல்லாததும், கதை ஒரே இடத்திலேயே சுற்றிக் கொண்டு இருப்பதும் தவிர்த்து இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம். பார்த்து பழகிப்போன கதையாக இருந்தாலும் கதையில் சில அம்சங்கள் கொஞ்சம் புதிதாக இருந்தது. ஆனால் திரைக்கதையை கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொத்தத்தில் ராஜாசாப் குறைகளை மறந்து குடும்பத்துடன் சென்று பார்க்கக் கூடிய ஒரு படம். நீளத்தை கொஞ்சம் குறைத்தால் இன்னும் பெரிய வெற்றியை பெறும் இந்த ராஜா சாப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *