ஒரு சினிமாவிற்காக கடும் உழைப்பையும் தாண்டி ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அர்ப்பணிப்பைப் கொடுத்து உழைக்கும் ஒரு நடிகர் என்றால் அருண் விஜயை தாராளமாக சொல்லலாம். அவரின் மெனக்கெடல் இன்றும் அப்படியே தொடர்கிறது.. அப்படிப்பட்ட அருண் விஜயின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் தான் “ரெட்ட தல”. தடம் படத்துக்கு பின் அருண் விஜய் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க, இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கிறார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சிறு வயதில் இருந்தே பெற்றோர் இல்லாமல் தெருவில் வளர்கிறார்கள் அருண் விஜய், சித்தி. இருவரும் வளர்ந்த பின் ஐந்து வருடங்கள் கழித்து சித்தியை சந்திக்க பாண்டிச்சேரி வருகிறார் அருண் விஜய். பணம் இல்லாத வாழ்க்கையை வெறுக்கும் சித்தி காதல், திருமணம் எதுவும் வேண்டாம் என சொல்லி அருண் விஜயை மறுக்கிறார். அந்த சூழலில் அருண் விஜய் தன்னை போலவே இருக்கும் ஒரு கோடீஸ்வர அருண் விஜயை சந்திக்கிறார். அதை தெரிந்து கொள்ளும் சித்தி கோடிஸ்வரியாக வாழவேண்டும் என்ற அந்த ஆசையில் பணக்கார அருண் விஜயை கொல்லச் சொல்கிறார். அந்த அருண் விஜயை கொன்று ஆள் மாறாட்டம் செய்யும் அருண் விஜய்க்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சி. கொலை செய்யப்பட்ட அருண் விஜய் யார்? அவரின் பின் கதை என்ன? இந்த அருண் விஜய் ஐந்து ஆண்டுகள் எங்கு இருந்தார்? என அடுத்தடுத்து டிவிஸ்டுகளுடன் சொல்வதே மீதிக்கதை.
அருண் விஜய். அவரின் தோற்றம், பாடி லாங்குவேஜ், நடிப்பு என இரண்டு கதாபாத்திரங்களிலும் அவ்வளவு வித்தியாசம் காட்டி மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் அருண் விஜய்க்கு அல்வா சாப்பிடுவது போல. ஆக்ஷன் காட்சிகள், சேஸிங் காட்சிகள் எல்லாம் அதிரடி காட்டியிருக்கிறார்.
நாயகியாக சித்தி இத்னானி. பணத்துக்காக ஏங்கி அதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் மனநிலை கொண்ட கதாபாத்திரத்தில் அருண் விஜய் கதாபாத்திரத்தின் செயல்களுக்கு எல்லாம் மூலக் காரணமாகவே அமையும் ரோலில் நடித்திருக்கிறார். வில்லியாகவும் இல்லாமல், நாயகியாகவும் இல்லாமல் ஒரு நடுவில் மாட்டிய கதாபாத்திரமாக இருக்கிறார்.
தான்யா ரவிச்சந்திரன் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். ஆனால் ரொம்ப ஆழமோ, அழுத்தமோ இல்லாமல் வந்த கதாபாத்திரமாக வந்து போகிறார். ஹரிஷ் பேரடி, பாலாஜி முருகதாஸ், ஜான் விஜய், கலைராணி என மற்ற நடிகர்களும் அவர்கள் கதாபாத்திரங்களில் வழக்கம் போலவே செய்திருக்கிறார்கள்.
டிஜோ டாமி ஒளிப்பதிவு படத்தை மிக ஸ்டைலிஷாக, கொஞ்சம் ஹாலிவுட் டைப் ஆக்ஷன் படத்துக்கு ஏற்ற மூட் செட் செய்கிறது. சாம் சிஎஸ் இசையில் தனுஷ் பாடிய கண்ணம்மா பாடல் அழகு. நடனமும் அந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியும் அழகு. பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது.
இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் ஒரு ஸ்டைலிஷ் ஆக்ஷன் திரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்து அதில் முடிந்த வரை சிறப்பாகவே செய்திருக்கிறார். முதல் பாதியில் கதைக்களத்தை நிதானமா நகர்த்தும் இயக்குனர் இடைவேளையில் உச்சத்துக்கு கொண்டு செல்கிறார். சாதாரண ஆள் மாறாட்டக் கதையாக இருக்குமோ என நினைக்கும் நேரத்தில் கதாபாத்திரங்களின் பின்னணியை சொல்லி மாஸ் ஏற்றுகிறார். ஆக்ஷன் காட்சிகள் படத்தின் ஹைலைட். ஆக்ஷன் தாண்டி திரைக்கதையில் ஆங்காங்கே வரும் ட்விஸ்டுகள் எல்லாமே படத்துக்கு பலம். கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. மொத்தத்தில் தடம் படத்துக்கு பின் அருண் விஜய்க்கு மற்றுமொரு நல்ல ஸ்டைலிஷ் ஆக்ஷன் திரில்லர் படமாக அமைந்திருக்கிறது இந்த ரெட்ட தல.
ரெட்ட தல 3.25/5 – அருண் விஜய்க்கு இன்னொரு தடம்!

