ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் நடித்துள்ள ஆக்ஷன் திரில்லர் படம் மதராஸி. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ல இந்த படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. ஆயுத கடத்தல் மாஃபியாவை எதிர்க்கும் ஒரு சாதாரண மனிதனைச் சுற்றி திரைக்கதை அமைத்துள்ள முருகதாஸ் வெற்றிப்படமாக கொடுத்தாரா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தமிழ்நாட்டுக்குள் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வர நினைக்கும் வித்யுத் ஜம்வால் தலைமையிலான மாஃபியா கும்பல் முழுக்க துப்பாக்கிகளை நிரப்பிய 6 கண்டெயினர்களுடன் சென்னைக்குள் அத்துமீறி நுழைகிறது. அதை தடுக்கும் நோக்கில் NIA அதிகாரிகள் குழு செயல்படுகிறது. இந்த இரண்டு குழுக்களுக்கு நடுவில் சாமானிய மனிதர் சிவகார்த்திகேயன் எப்படி வருகிறார்? அந்த துப்பாக்கி மாஃபியாவை அழித்தாரா? அவரது காதல் கதை என்ன? அவர் குடும்பப் பின்னணி என்ன? என்பதை பரபர திரைக்கதையாக்கி முழுநீள படமாக சொல்வதே மதராஸி படத்தின் மொத்தக்கதை.
சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க ஒரு புதிய பரிமாணத்தில் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பில் நடித்திருக்கிறார். முழு ஆக்ஷன் ஹீரோவாக வெளுத்து வாங்குகிறார். குறிப்பாக எமோஷன் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் அவரது நடிப்பு அபாரமாக உள்ளது. சில காட்சிகளில் நம்மையும் கலங்க வைக்கிறார். ருக்மிணி வசந்த் காதல் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ருக்மிணி வசந்த், அழகாக இருக்கிறார். அவரை சுற்றி நகரும் காதல் கதை. அதை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சிவா, ருக்மிணி காதல் தான் படத்தின் அடிநாதம் என்பதால் அந்த இருவருக்குமான காதல் கதையை நகர்த்திச் செல்கிறது.
வித்யுத் ஜம்வால் துப்பாக்கி படத்தைப் போலவே இதிலும் மிரட்டுகிறார். மாஸான என்ட்ரி, ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் என ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக அந்த டார்க் ஹவுஸ் சண்டைக்காட்சியில் தெறிக்க விட்டிருக்கிறார். NIA அதிகாரியாக பிஜூ மேனன், அழுத்தமான கதாபாத்திரம், கடமையை உயிராக நினைக்கும் ஒரு கதாபாத்திரம். தேர்ந்தெடுத்த, அளவான, சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். அவரது மகனாக வரும் விக்ராந்த், கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். ஷபீர் கல்லரக்கல் புதுவிதமான ஸ்டைலிஷான வில்லனாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பு கேரியரில் இன்னொரு பரிமாணம்.
அனிருத் இசையில் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. சலம்பல பாடலை விடவும் கதையோடு வரும் அந்த பாடல்கள் நம் மனதில் பதிகின்றன. பின்னணி இசையிலும் மாஸ் மியூசிக் போட்டு தெறிக்க விட்டிருக்கிறார். சுதீப் எலமோன் ஒளிப்பதிவு சிறப்பு. குறிப்பாக இரவுக் காட்சிகளையும், ஆக்ஷன் காட்சிகளையும் படமாக்கிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது.
ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி என வித்தியாசமான கதைக்களங்களில் தன்னுடைய திரைக்கதையால் கட்டிப் போட்ட இயக்குனர் முருகதாஸ் இந்த படத்திலும் தன்னுடைய பாணி திரைக்கதையை மிக அழகாக உருவாக்கியிருக்கிறார். அதற்குள் காதல், தியாகம், வலி, தேசப்பற்று ஆகியவற்றை கலந்து ஒரு கமெர்சியல் படமாக கொடுத்துள்ளார். படத்தின் முதல் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி ஆக்ஷன் மற்றும் எமோஷன் கலந்த கலவையாகவும் அமைந்துள்ளது. மொத்தத்தில் மதராஸி ஆக்ஷன், காதல் மற்றும் எமோஷன்ஸ் கலந்த ஒரு பரபரப்பான படம். சிவகார்த்திகேயன், முருகதாஸ் தந்திருக்கும் ஒரு கமெர்சியல் காக்டெயில் இந்த மதராஸி.

