லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கூலி. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சென்னையில் தேவா மேன்ஷன் நடத்தி வரும் ரஜினிகாந்தின் நண்பர் சத்யராஜ் திடீரென இறந்து போகிறார். எதிர்பாராத விதமாக இறந்த சத்யராஜூக்கு 3 மகள்கள். ஸ்ருதி ஹாசன் மூத்த மகள். சத்யராஜ் மரணத்தின் பின்னணியை ரஜினி கண்டுபிடிக்க, அவரை கொன்றது யார்? அவர்களை ரஜினிகாந்த் பழி வாங்கினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 50 ஆண்டுகளை கடந்தும் எனர்ஜியுடன் ஓடிக் கொண்டிருக்கும் குதிரை. படத்தில் ரஜினியுன் உழைப்பு அபரிமிதமானது. டான்ஸ், ஃபைட், நடிப்பு என அத்தனையும் அசால்ட்டாக செய்திருக்கிறார். உடன் அத்தனை நடிகர்கள் நடித்திருந்தாலும் தன்னுடைய டாமினேஷனை காட்டுகிறார். வில்லனாக நாகார்ஜூனா புதுசு, ஆனாலும் முடிந்தவரை நடித்திருக்கிறார். ஷௌபின் ஷாஹிர் மிகச்சிறந்த நடிப்பால் மிரட்டுகிறார். ஸ்ருதிஹாசன் இது போன்ற கதாபாத்திரத்தில் முதல் முறை நடித்திருக்கிறார். சத்யராஜ் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் மனதில் பதிகிறார். உபேந்திரா ரஜினியின் சிஷ்யர் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் வந்தாலும் ரஜினி மீது அவர் வைத்துள்ள மரியாதை திரையிலும் தெரிகிறது. ஆமீர் கான் ஒரு கேமியோ காட்சியில் வந்து ரசிக்க வைக்கிறார்.
ரஜினிக்கு அடுத்து படத்தின் ஹீரோ அனிருத் தான் என சொல்லும் அளவுக்கு படத்தை தன் இசையால் தூக்கி நிறுத்தியிருக்கிறார். பின்னணி இசையிலும் தெறிக்க விட்டிருக்கிறார். பாடல்களும் ஏற்கனவே தெரிந்தது தான், சூப்பர் ஹிட். திரையிலும் அதை காட்சிப்படுத்திய விதம் அருமை. கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
லோகேஷ் மீதான எதிர்பார்ப்பு படத்துக்கு படம் கூடிக் கொண்டே இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகளை அவரால் பூர்த்தி செய்ய ரொம்பவே சிரமம். ஆனாலும் ஓரளவு பூர்த்தி செய்கிறார். ரசிக்க வைக்கும் படத்தை தந்திருக்கிறார். ரஜினியை திரையில் காட்டிய விதம், சண்டைக் காட்சிகளை படமாக்கிய விதம் என ரஜினி ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார். 1980 களின் ரஜினிகாந்தை மீண்டும் உருவாக்க படத்தின் டி-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. ஆனால் அவரின் விண்டேஜ் பாடல் முந்தைய படத்தை போலவே இந்த படத்திலும் எடுபடவில்லை. மொத்தத்தில் ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுவான ரசிகர்களை ரசிக்க வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ‘A” சான்றிதழ் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

