கட்ஸ் – விமர்சனம்!

அறிமுக இயக்குனர் ரங்கராஜ் இயக்கி நடித்துள்ள படம் கட்ஸ். நான்ஸி, டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அரந்தாங்கி நிஷா நடித்திருக்கிறார்கள். ஜோஸ் ப்ராங்க்ளின் இசையமைத்திருக்கிறார். இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த ரங்கராஜ் ஆசிரமம் ஒன்றில் படித்து இன்ஸ்பெக்டர் ஆகிறார். மனைவி மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ரங்கராஜ். காட்டுப்பகுதியில், அடையாளம் தெரியாத திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அந்த வழக்கு விசாரணை ரங்கராஜ் கைக்கு வருகிறது. கொலை செய்யப்பட்ட திருநங்கை ஒரு VAO என்றும், அவரை கொலை செய்தது ஒரு தொழிலதிபர் என்பதையும் கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைக்க, அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரே நாளில் சிறையில் இருந்து வெளியே வரும் தொழிலதிபர், தன்னை சிறைக்கு அனுப்பிய ரங்கராஜை பழி வாங்கும் முயற்சிகளில் இறங்குகிறார். அந்த பழிவாங்கல் முயற்சிகள் என்ன ஆனது? ரங்கராஜின் வாழ்க்கை எப்படி மாறியது? என்பதே மீதிக்கதை.

நாயகனாக ரங்கராஜ். தான் ஒரு அறிமுக ஹீரோ என்பதை மறைத்து தன்னால் முடிந்தவரை ஒரு நல்ல நடிப்பை தந்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாகவும் கச்சிதமாக பொருந்திப் போகிறார். ஒரு புறம் கம்பீரமான தோற்றத்தில் கெத்து காட்டுவதும், இன்னொரு புறம் இன்ஸ்பெக்டராக கொஞ்சம் அடக்கி வாசிக்கும்போதும் ரசிக்க வைக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.

நாயகியாக வரும் நான்ஸி அழகு. கணவன் மனைவி இடையேயான காட்சிகளில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் ஸ்ருதி நாராயணன் கவனத்தை ஈர்க்கிறார். வடசென்னை படத்துக்கு பிறகு நல்ல ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் சாய்தீனா ஸ்கோர் செய்கிறார். அறந்தாங்கி நிஷா தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார்.

பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஓகே ரகம். ஆனாலும் படத்தில் வரும் அம்மா பாடல் கண்கலங்க வைக்கிறது. ஒளிப்பதிவாளரும் தனக்கு கிடைத்தவற்றை வைத்து நல்ல ஒரு ஒளிப்பதிவை தந்திருக்கிறார்.

இயக்குனர் ரங்கராஜ், போலீஸ் இன்வஸ்டிகேஷன் கதையாக துவங்கி பின் பழிவாங்கல் கதையாக முடித்திருக்கிறார். திருநங்கைகளை காட்டிய விதம், விவசாயத்தை பற்றிய விஷயங்கள், இடையிடையே பெண்கள்ன் வீரத்தை சொன்ன விதம், தாய்ப்பாசம் என பல முக்கிய விஷயங்களையும் படத்தில் வைத்து அதை நன்றாகவும் சொல்லியிருக்கிறார். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் நல்ல நோக்கத்தை மையமாக வைத்து இந்த படத்தை தந்ததற்கே ரங்கராஜூக்கு பாராட்டுக்கள். மொத்தத்தில் சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *