பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு வெற்றியாளராகவும் ஆன முகேன் ராவ் அடிப்படையில் ஒரு பாடகர். பிக் பாஸில் கலந்து கொண்ட பிறகு சினிமாவில் நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்தார். அந்த வகையில் தற்போது முகேன் ராவ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “ஜின்”. ஜெய்சங்கர் காலத்து பட்டணத்தில் பூதம் வகை படமாக ஜின், குழந்தை ரசிகர்களை மட்டுமல்லாது குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு படம். அனைத்து தரப்பு ரசிகர்களையும் படம் கவர்ந்ததா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, மலேசியாவில் கிளப்புகளில் பாடும் ஒரு பாடகராக இருக்கும் முகேன் ராவுக்கு கம்பெனியின் ஒப்பந்தம் முடிந்து விட தன் குடும்பத்துடன் வாழ முடிவெடுத்து சென்னைக்கு திரும்பி வருகிறார். அக்கா மகன் ஆசையாய் கேட்ட ஒரு பொருளை வாங்க சென்ற இடத்தில் ஒரு புராதான பெட்டி ஒன்றை பார்க்க, அது அவரின் கவனத்தை ஈர்க்க, அதை வாங்க முடிவெடுக்கிறார். கடைக்காரர் அதில் ஜின் ஒன்று அடைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் அதை மிக கவனமாக வளர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார். சில நல்ல ஜின்களும் இருக்கிறது, தீய ஜின்களும் இருக்கிறது என்று சொல்லி அனுப்புகிறார்.
அந்த ஜின் கைக்கு வந்த நேரம் எல்லாமே நல்லதாக நடக்கிறது என நினைக்கும் முகேன் அதை தன் வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார். நாயகி பவ்யா தரிகாவை சந்தித்து காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார். எல்லாம் சரியாக போய்க் கொண்டிருக்கும்போது வீட்டில் சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஜின் தான் காரணம் என வீட்டில் இருப்பவர்கள் கூற, ஜின்னை தூக்கி எறிந்து விடுகிறார் முகேன். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், அந்த ஜின் என்ன ஆனது? அதனால் முகேன் குடும்பத்துக்கு நடக்கும் நல்லது கெட்டது என்ன? அந்த அசம்பாவிதங்களுக்கு காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.
நாயகன் முகேன் ராவ். நல்ல எனர்ஜி, பாடகராகவே படத்திலும் அவர் வருவது வேலையை கொஞ்சம் எளிதாக்கி விட்டிருக்கிறது. தோற்றத்தில் தோனியையும், குரல் வளத்தில் லோகேஷ் கனகராஜையும் நினைவுபடுத்துகிறார். காதல், காமெடி காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். ஜோ படத்தில் கனமான ஒரு கதாபாத்திரத்தில் வந்த நாயகி பவ்யா தரிகா, இந்த படத்திலும் அழகாகவும் நடிப்பில் அசத்தலாகவும் தன் திறமையை வெளிப்படுத்துகிறார்.
பால சரவணன் காமெடி காட்சிகள் நம்மை சிரிக்க வைக்கின்றன. குறிப்பாக ஜின் மற்றும் முகேன் உடன் வரும் காட்சிகள் எல்லாம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு படத்தை ரசிக்க வைக்கிறது. குழந்தைகளும் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. பாடல்கள் எல்லாமே அருமையாகவே இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
இயக்குனர் டி.ஆர்.பாலா குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையிலான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். குறிப்பாக அலாவுதீன், பட்டணத்தில் பூதம் வகையான படங்களை பார்த்து வளர்ந்த தலைமுறைகளை போல, இந்த தலைமுறை குழந்தைகள் ரசிக்க வைக்க வந்திருக்கிறது இந்த ஜின். அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளை எளிதாக யூகிக்க முடிந்தாலும் கல கலவென படம் நகர்வது அந்த குறைகளை மறக்கடிக்க வைக்கிறது. ஜின் தோன்றும் காட்சிகள் குழந்தை ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். ஜின் சண்டைக்காட்சிகளும் குழந்தைகளுக்கு ட்ரீட். குடும்பத்துடன் சென்று ரசிக்கும் படமாகவே அமைந்திருக்கிறது இந்த ஜின்.