90’s கிட்ஸ்களுக்கு மிகவும் ஃபேவரைட்டான நாயகிகளில் ஒருவர் பாவனா. அவரின் அழகுக்கு அத்தனை ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். பல வருடங்களாக நடிப்பில் பெரிதாக கவனம் செலுத்தாமல், சில பிரச்சினைகள், குடும்ப வாழக்கை என இருந்தவர் அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். அந்த வகையில் தற்போது பாவனா நடித்துள்ள ஒரு படம் தான் “தி டோர்”. எப்படி இருக்கு இந்த படம், பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நல்ல திறமையான ஒரு கட்டிடக்கலை நிபுணர் பாவனா. அவர் கம்பெனி கட்டும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணியின்போது பழமையான சிறு கோவில் ஒன்ரை இடிக்கிறார்கள். அந்த கோவில் இடிக்கப்பட்ட அன்று இரவே பாவனாவின் தந்தை விபத்து ஒன்றில் மரணமடைகிறார். அதன் பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டு வேலையை விட்டு ஒதுங்கி இருக்கும் பாவனாவை அவரது பாஸ் மீண்டும் வேலைக்கு அழைக்கிறார். வேலைக்கு போகும் பாவனாவை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. தனது தோழி மற்றும் காவல்தூறை அதிகாரி கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் உதவியுடன் என்ன நடந்தது? என் இந்த அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது? நடந்த சில மரணங்களின் பின்னணி என்ன? என்பதை தேடி அறிந்து கொள்ளும் ஒரு பயணம் தான் இந்த “தி டோர்”.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பாவனாவை பார்த்ததே ரசிகர்களுக்கு புது உற்சாகம் தான். கதையின் நாயகியாக பாவனா, இனிமேல் இப்படிப்பட்ட படங்களில் தொடர்ந்து நடிப்பார் என்பதற்கு இந்த படம் ஒரு அச்சாரம் போட்டுக் கொடுத்திருக்கிறது. ஒரு வித குழப்பத்துடன் சோக மனநிலையில் தன்னை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராம். பெரிதாக வேலை இல்லை என்றாலும் ஒரு துணை கதாபாத்திரமாக வந்து செல்கிறார். ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட் என மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
கெளதம்.ஜி ஒளிப்பதிவு இந்த அமானுஷ்ய திரில்லர் படத்துக்கு பல சேர்க்கிறது. அத்துடன் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழுக்கு வரும் பாவனாவை அழகாகவும் காட்டியிருக்கிறார். வருண் உன்னி இசை ஓரளவு ஓகே என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. பெரிதாக கைகொடுக்கவில்லை. பரவாயில்லை என்று சொல்லும் ரகம்.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஜெய்தேவ், நல்ல ஒரு திகில் படத்தை தரும் நோக்கத்தில் இந்த படத்தை தந்திருக்கிறார். வெறும் திகில் படமாக மட்டும் இல்லாமல் அதன் பின்னணியில் உள்ள கிரைம் விஷயங்களையும் இணைத்து ஒரு எமோஷனல் கதையையும் சொல்லி விட்டு செல்கிறார் இயக்குனர். பாவனா தேடலில் அவ்வப்போது கிடைக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் ஆங்காங்கே நம்மை சுவாரஸ்யப்படுத்துகிறது. மொத்தத்தில் ஒரு டீசண்டான ஒரு திரில்லர் படமாக நிச்சயம் பார்க்கலாம்.