2021 மற்றும் 2022 காலகட்டம், தமிழ் சினிமாவின் நிலை படுமோசம். கோவிட் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்த காலகட்டம். மாஸ்டர், டாக்டர், மாநாடு என மொத்தமே 3,4 படங்கள் தான் வெற்றி என்ற நிலை. தமிழ் சினிமா ரசிகர்களில் ஒரு பகுதியினர் தமிழ் சினிமா அவ்ளோ தான், தெலுங்கு, கன்னட சினிமாவை பாருங்க எப்படி ஓடுது, 1000 கோடி படங்கள் எல்லாம் வருது, நம்ம ஊருல ஒண்ணுமே இல்ல என ஏகத்துக்கும் பேசித் தீர்த்தார்கள்.
அந்த ஏச்சு பேச்சுகளுக்கு மத்தியில் 2022 மத்தியில் வந்த படம் தான் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் விக்ரம். அசாதாரண வெற்றி, எல்லோறையும் திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 180 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து புது சாதனை படைத்தது. இந்த படத்தின் சாதனையை இன்னொரு படம் வந்து முறியடிக்க முடியுமா? என்றெல்லாம் பேசினார்கள்.
அடுத்த மூன்றே மாதத்தில் வந்தது தான் பொன்னியின் செல்வன். விக்ரம் சாதனை தமிழக அளவிலும், உலக அளவிலும் தவிடு பொடியாக்கி புது சாதனை படைத்தது. அடுத்த ஆண்டு ஜெயிலர், லியோ என அடுத்தடுத்து வெளியாகி இந்த சாதனைகளை தகர்த்து புது சாதனைகளை படைத்தது. இதற்கு நடுவிலும் வாரிசு, துணிவு, திருச்சிற்றம்பலம், டான், மார்க் ஆண்டனி மற்றும் பல சிறிய பெட்ஜெட் படங்கள் வெற்றி பெற்று தமிழ் சினிமா மிக ஆரோக்யமாகவே இருந்தது.
தற்போது மீண்டும் அதே போல ஒரு புலம்பல் சத்தம் கேட்கிறது தமிழ் சினிமாவில். முன்பு KGF, RRR, காந்தாரா போன்ற படங்களை வைத்து அங்க பாருங்க எப்படி ஹிட் கொடுக்குறாங்க என புலம்பியவர்கள் தற்போது கையில் எடுத்திருக்கும் காரணம் மலையாள படங்களின் வெற்றி.
தமிழில் லியோ படத்துக்கு பிறகு ரிலீஸ் ஆன படங்களில் ஜிகர்தண்டா 2, லவ்வர் போன்ற படங்கள் சராசரியான வெற்றியை பெற்றன. அதை தவிர எந்த ஒரு படமும் சொல்லிக் கொள்ளும் படியான வெற்றியை பெறவில்லை. கிட்டத்தட்ட 5 மாதங்களில் தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்கள் இல்லை என சொல்லலாம்.
இதே நேரத்தில் ஆஃப் சீசன் என்றழைக்கப்படும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மலையாள சினிமா ரிலீஸ் செய்த படங்கள் அடுத்தடுத்து வசூல் சாதனைகளை படைக்க, மீண்டும் கோலிவுட்டில் புலம்பல் சத்தம் கேட்கிறது. மம்மூட்டியின் பிரம்மயுகம் 60 கோடி, பிரேமலு என்ற படம் 135 கோடி, மஞ்சும்மேல் பாய்ஸ் 200 கோடி, இவற்றுடன் கடந்த 10 நாட்களுக்கு முன் வெளியான ஆடு ஜீவிதம் பத்தே நாட்களில் 100 கோடியை கடந்து வசூல் சாதனை. இந்த படங்கள் மலையாள மண்ணில் மட்டும் வசூலை குவிக்கவில்லை, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, ஓவர்சீஸ் ஆகிய ஏரியாக்களிலும் சக்கை போடு போட்டது. இவை எல்லாமே இந்த புலம்பலுக்கு காரணம். அதுவும் மஞ்சும்மேல் பாய்ஸ் தமிழ்நாட்டில் மட்டும் 2023-ல் வெளியான அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம் போன்ற அனைத்து படங்களையும் மிஞ்சி 60 கோடிகளை தாண்டி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2022 போலவே மீண்டும் ஒரு காலகட்டம். அதே நிலையில் தமிழ் சினிமா தன் கணக்கை மீண்டும் துவக்கும் என எதிர்பார்க்கலாம். தேர்தல் காரணமாக வைத்து எல்லா பெரிய படங்களும் தங்கள் ரிலீஸை நிறுத்தி வைத்திருந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவடைவதால் வரிசையாக தங்களுக்கான ரிலீஸ் தேதியை லாக் செய்ய ஆரம்பித்தி விட்டனர். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டும் ரத்னம், அரண்மனை 4, ஸ்டார், மஹாராஜா, ராயன், இந்தியன் 2, தங்கலான் என அடுத்தடுத்து மெகா முதல் மீடியம் பட்ஜெட் படங்கள் என வரிசை கட்டி நிற்கின்றன. இதற்கு பின்னாலும் GOAT, வேட்டையன், விடாமுயற்சி, கங்குவா அடுத்தடுத்து மெகா படங்கள் என வரிசை நீள்வதால் 2024 நம்ம தான், தமிழ் சினிமா தான் உச்சத்தில் இருக்கும் என உறுதியாக சொல்லலாம். புலம்பலை விடுத்து படங்களை பார்க்க ரெடியாகுங்க தமிழ் சினிமா ரசிகர்களே..