ஹிட்லர் – திரை விமர்சனம்

படை வீரன், வானம் கொட்டட்டும் படங்களை இயக்கிய இயக்குனர் தனா இயக்கியிருக்கும் அடுத்த படம் “ஹிட்லர்”. விஜய் ஆண்டனியின் சமீபத்திய ஒரு சில படங்கள் பெரிதாக கைகொடுக்காத நிலையில் இந்த படத்தின் மீது நல்ல ஒரு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. விஜய் ஆண்டணியின் தலைப்பு எல்லாமே மிக வித்தியாசமானதாக இருக்கும். அந்த வகையில் இந்த படத்துக்கும் ஹிட்லர் என்ற தலைப்பு, அந்த தலைப்புக்கு என்ன முக்கியத்துவம், விஜய் ஆண்டனிக்கு இந்த படம் வெற்றியை கொடுத்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஒரு மலைப்பகுதி கிராமத்தில் அடிப்படை வசதி இல்லாமல் சிரமப்படும் மக்கள் ஒரு மழைக்காலத்தில் வேலைக்கு சென்று விட்டு வரும் போது கடும் மழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அதை கடந்து மக்கள் ஊருக்கு செல்லும்போது ஆற்று வெள்ளம் அதிகமாகி பலரும் உயிரிழக்கிறார்கள். சென்னையில் வங்கிக்கு வேலைக்கு வரும் விஜய் ஆண்டனி வந்த இடத்தில் நாயகி ரியா சுமனை சந்திக்கிறார், காதல் வயப்படுகிறார். இருவரும் காதலிக்கிறார்கள். இதற்கிடையில் தேர்தல் அறிவிக்கப்பட, ஆளும் கட்சியில் அதிகார போட்டி. அமைச்சராக இருக்கும் சரண்ராஜூக்கு இந்த தேர்தல் வாழ்வா சாவா? போராட்டமாகிறது. அதற்காக வெற்றி பெற தன்னிடம் இருக்கும் சில நூறு கோடிகள் கருப்புப் பணத்தை வைத்து ஜெயித்து விட திட்டமிட்டு அவற்றை தொகுதிக்கு பட்டுவாடா செய்ய அனுப்புகிறார். ஒவ்வொரு முறையும் பறக்கும் ரயிலில் எடுத்து செல்லப்படும் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. அமைச்சரின் அடியாட்கள் சிலரும் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த பணத்தை கொள்ளையடித்தது, அடியாட்களை கொலை செய்தது யார்? இந்த சிக்கலில் விஜய் ஆண்டனி எப்படி வந்து சிக்குகிறார்? என்பதே மீதிக்கதை.

ஆரம்ப காலத்தில் சீரியஸ் கதைகளில் மட்டுமே, முகத்தை இறுக்கமாக வைத்து நடித்த விஜய் ஆண்டனி, சமீப காலமாக கொஞ்சம் ரூட்டை மாற்ற முயற்சித்து வருகிறார். இந்த படத்தில் மணிரத்னம் ஹீரோ போல கொஞ்சம் கலகலப்பாக, துருதுருவென நடிக்கவும் முயற்சித்திருக்கிறார். நாயகியுடன் காதல் காட்சிகளில் ரொம்பவே கலகலப்பாக நடித்திருக்கிறார். அதோடு விஜய் ஆண்டனியின் இந்த படம் அரசியலையும், ஊழலையும் பற்றி கொஞ்சம் தைரியமாகவே பேசியிருக்கிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் கௌதம் மேனன் அவருக்கு ஏற்ற கதாபாத்திரம். வழக்கம் போல ஒரு ஸ்டைலிஷ் போலீஸ் அதிகாரியாக கலக்குகிறார். நாயகியாக ரியா சுமன், அழகாக வந்து தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்தி போகிறார். சரண்ராஜ் அரசியல்வாதி வில்லனாக மிரட்டுகிறார். ஜெய்பீம் தமிழ் தன் ஆஜானுபாகுவான தோற்றத்தில் வில்லத்தனத்தில் வந்து ஸ்கோர் செய்கிறார். ஆடுகளம் நரேன், ரெடின் கிங்க்ஸ்லீ, விவேக் பிரசன்னா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் ஓகே ரகம், பின்னணி இசையும் ஓரளவுக்கு முடிந்தவரை படத்தை தூக்கி நிறுத்துகிறது. பாடல்கள் கதைக்கு தேவையில்லாத இடங்களில் வருவது போல இருக்கிறது. படத்தின் வேகத்துக்கு தடையாகவும் அமைகிறது. நவீன் குமார் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது. சிஜி காட்சிகள் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம்.

இயக்குனர் தனா நல்ல ஒரு சமூகத்துக்கு முக்கியமான கதையை கையில் எடுத்திருக்கிறார். ஆனால் ஷங்கர் ஃபார்முலா படத்தை மீடியம் பட்ஜெட் படத்தில் கொடுக்க முயற்சித்திருக்கிறார். எளிதில் யூகிக்க கூடிய திரைக்கதை படத்துக்கு பலவீனமாக அமைகிறது. காதல் காட்சிகளும் சில நேரங்களில் படத்துக்கு பலவீனமாக அமைகிறது. முதல் பாதி கொஞ்சம் வேகம், இரண்டாம் பாதி கொஞ்சம் வேகம் குறைவு. பழைய கதையை கொஞ்சம் எங்கேஜிங்காக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர், ஆனால் திரைக்கதையும் சற்று சுவாரஸ்யம் குறைவாகவே செல்வது படத்துக்கு கொஞ்சம் பலவீனம். ஆனாலும் ஒரு முறை பார்க்கக் கூடிய படமாக அமைந்திருக்கிறது இந்த ஹிட்லர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *